தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
30.04.2007
தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.
தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.
இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.
அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.
எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.
அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.
அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் அதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.
இவ் வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
எமது பிரதேசத்தில் இதுவரைக்கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
ஆயினும் எமது பிராந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
தமிழக காவல்துறையினர் பேச்சு நடத்தவில்லை
தமிழகக் காவல்துறை இது தொடர்பாக எமது அமைப்புடன் தொடர்புகொண்டதாகவும், பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவருகின்ற செய்திகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையாகும். இதுவரையில் தமிழகக் காவல்துறைக்கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழக மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்ற நீண்ட கால வன்முறையின் பின் புலத்தினை தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
அத்துடன் எமது மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்குமாக அவர்கள் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் இவ்வாறான வன்முறைகளையும் இதற்குக் காரணமானவர்களையும் தமிழக உறவுகள் உண்மையாகவே இனங்காணுவார்கள் என்றே நம்புகின்றோம்.
தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்கு எமது மக்களும், அமைப்பினரும் பூரண ஆதரவினை வழங்கிநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Monday, April 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment