Friday, April 27, 2007

கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள்- குண்டுச்சத்தங்கள்: இருளில் மூழ்கியது கொழும்பு மாநகர்!!!


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு அருகில் உள்ள வான்படைத்தளப் பகுதிக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் கேட்கப்பட்ட துப்பாக்கி வெடிச்சத்தங்களாலும், குண்டுச்சத்தங்களாலும் கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளையில் கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது இந்தப் பதற்ற நிலையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

அதேவேளையில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து நடத்தப்படும் வானூர்தி சேவைகளும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புத்தளம் கடற்பரப்பை அண்மித்த பகுதியிலிருந்து கட்டுநாயக்க பிரதேசத்தை நோக்கி விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் வருவதாக படைத்தரப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த வானூர்தி எதிர்ப்பு தன்னியக்க கருவிகள் செயற்படத் தொடங்கியதாகவும், அதனால் தொடர்ச்சியான குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் பத்து தடவைகளுக்கு மேலாக இந்த எதிர்ப்பு கருவிகள் இயக்கப்பட்டதாகவும், எனினும் சந்தேகத்திற்கிடமான வானூர்திகள் குறித்து எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளையில் கொழும்பின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

சுமார் ஒரு மணி நேரத்தின்பின்னர் அனேகமான பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பிரதேசங்களில் நேற்றிரவு பல மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், முன்னறிவித்தலின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை நோக்கிச் சென்ற பயணிகள் வாகனங்கள் அனைத்தும் படையினரால் மறித்து வைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதிக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

வானூர்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. வானூர்தி நிலையத்திலுள்ள சுங்கத் தீர்வையற்ற கடைகளையும் உடனடியாக மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான வானூர்தி ஒன்று நேற்றிரவு 11.40 மணியளவில் வவுனியாவை அண்மித்த பகுதியை கடந்து சென்றதாகவும், அதனையடுத்து சிறிலங்கா படைத்தரப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்தி தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி>புதினம்.

No comments: