Sunday, April 29, 2007

இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு!

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களை பிச்சைக்காரர்களைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துவதாக மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குற்றம்சாட்டியுள்ளார்.


அரச தலைவராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பில் இருந்த போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி மலையக பாடசாலைகளில் 300 ஆசிரியர்களை நியமனம் செய்து அதற்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு மகிந்தவின் அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு நடைபெறுவது குறித்து புதன்கிழமைதான் ஆறுமுகம் தொண்டமானுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் உத்தியோகப்பூர்வமாக இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தனர். புதுடில்லியில் இந்திய அதிகாரிகளுடனான சந்திப்புக்கும் வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றை இரத்துச் செய்துவிட்டு புதன்கிழமை இரவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார் கொழும்பு திரும்பினர்.

இருப்பினும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அதிருப்தியாளர்களான பிரதி அமைச்சர்கள் சுரேஸ் வடிவேல் மற்றும் பைசர் முஸ்தாபா ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதை கேள்விப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் அதிருப்தியடைந்தனர்.

அதிருப்தியாளர்களை அழைத்தால் நிகழ்விலிருந்து தாங்கள் வெளிநடப்புச் செய்ய நேரிடும் என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது தமது இனத்தவர்களையும் கட்சியையும் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துவதாகவும் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்த குற்றச்சாட்டை மேல்மாகாண ஆளுநர் அலாவி மௌலானாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர். நிகழ்வை ஒத்திவைக்கலாம் என்று அலாவி மௌலானா பதிலளித்துள்ளார்.

ஆனால் நீண்டகாலமாக ஆசிரியர் நியமன ஆணைகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் நிகழ்வை ஒத்திவைக்க விரும்பவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசினர் கூறியுள்ளனர். இதையடுத்து அலரி மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

நீர் இணைக்க மறந்த செய்தி

தமிழக மீனவர்கள் ஐந்து பேரை சுட்டுக் கொலை செய்ததை அடுத்து விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர்களது பிடியில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரும் உயிரோடு திரும்புவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுறையைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி கடலுக்குள் சென்றனர். 29ம் தேதியன்று மீனவர்கள் சென்ற படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், ஐந்து மீனவர்கள் இறந்தனர். இலங்கை கடற்படையினர் தான் சுட்டதாக செய்திகள் வெளியாயின. இதுகுறித்து தமிழக அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டது. துப்பாக்கிச் சூட்டில் தப்பிப் பிழைத்த மீனவர்களை விசாரித்த போது, "நடுக்கடலில், "மரியா' என்ற படகில் வந்தவர்கள் எங்களை சுட்டனர்' என்று தெரிவித்தனர்.இச்சம்பவம் நடந்து 12 நாட்கள் கழித்து, நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேரை, தமிழக மீனவர்கள் மீட்டனர். இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் ஒரே படகில் வந்த போது, இந்திய கடற்படையினர் விசாரித்தனர். இலங்கை மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் இந்திய கடற்படையினர் பிடித்து வந்து துõத்துக்குடியில் ஒப்படைத்தனர். இலங்கை மீனவர்களின், "மரியா' படகையும் கடற்படை கப்பல் இழுத்து வந்து துõத்துக்குடியில் ஒப்படைத்தது.கன்னியாகுமரி மீனவர்களை சுட்ட சம்பவத்தில், "மரியா' என்ற படகில் இருந்தவர்கள் என்று தெரிவித்திருந்ததால், "கியூ' பிரிவு போலீசார் உடனே வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் தப்பித்த கன்னியாகுமரி மீனவர்களும் அழைக்கப்பட்டனர்.

பிடிபட்ட இலங்கை மீனவர்களை பார்த்து "எங்களை சுட்டவர்கள் இவர்கள் இல்லை' என்று தெரிவித்தனர். "தமிழக மீனவர்களை சுட்ட சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று இலங்கை மீனவர்களும் தெரிவித்தனர். ஆனால், "கியூ' பிரிவு போலீசார் விடாமல் விசாரித்தனர். பிடிபட்ட இலங்கை மீனவர்களில், போனிபால் என்ற மீனவர் மீது மட்டும் கடும் சந்தேகம் எழுந்தது. அவருடைய பேச்சு விடுதலைப்புலி அமைப்பில் இருப்பவர் என்பதை உறுதிப்படுத்தியது. விசாரணை கடுமையானதும், போனிபால் தன்னை விடுதலைப்புலி என்பதை ஒப்புக் கொண்டார்.அதன் பிறகு, ஆறு பேரையும், "கியூ' பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரித்த போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. ஆயுதங்களை ஏற்றி வரும் கப்பலில் இருந்து நடுக்கடலில் ஆயுதங்களை படகில் இறக்கி, விடுதலைப் புலிகள் முகாமுக்கு எடுத்துச் செல்லும் பணியில் போனிபாலும் மற்றவர்களும் ஈடுபட்டு வந்தனர். "எங்களுக்கு முன்பு மணவாளன் என்ற புலியின் தலைமையின் கீழ் சென்ற படகு தான் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றது. அவர்களுக்கு தமிழக மீனவர்கள் தொல்லை கொடுத்ததால் தான் புலிகள் சுட்டனர்,' என்று போனிபால் தெரிவித்தார்.

போனிபால் மேலும் கூறியதாவது: ஆயுதங்களை படகில் ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் முகாமை நோக்கி பயணம் செய்த போது தான், கன்னியாகுமரி மீனவர்கள் எதிரே வந்துள்ளனர். "எங்களுக்கு மீன்களே கிடைக்கவில்லை. உங்கள் வசம் மீன் இருந்தால் கொஞ்சம் தாருங்கள்' என்று தமிழக மீனவர்கள் கேட்டனர். இதற்கு, விடுதலைப் புலிகள் "எங்களிடம் மீன்கள் இல்லை' என்று தெரிவித்துவிட்டு, வேறு வழியில் படகை செலுத்தினர். அப்படகை தமிழக மீனவர்கள் பின் தொடர்ந்தனர். தங்கள் படகில் இருந்த நீளமான இரும்பு கம்பியை எடுத்து, விடுதலைப் புலிகளின் படகில் இருந்த மீன் வலையை இழுத்தனர். உடனே, விடுதலைப் புலிகள் தங்களிடம் இருந்த, "வயர்லெஸ்' மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு பேசினர். "ஆயுதங்கள் பத்திரம். அவர்கள் ரொம்பவும் தொல்லை செய்தால், சுடுங்கள்' என்று புலிகளின் தலைமையகத்தில் இருந்து பதில் தகவல் கிடைத்துள்ளது. உடனே, தமிழக மீனவர்களை நோக்கி சுட்டனர். இதுதான் நடந்தது. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் சட்டப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணவாளன் தலைமையிலான படகு சென்ற பிறகு, நாங்கள் ஆயுதங்களை ஏற்றி வந்தோம். வழியில் இன்ஜின் பழுதாகிவிட்டதால், தமிழக மீனவர்களின் உதவியை நாடினோம். "உங்கள் படகில் இருந்த ஆயுதங்கள் எங்கே?' என்று போலீசார் கேட்டனர். "எங்கள் படகில் இன்ஜின் பழுதாகிவிட்டது. எதிரே வந்த மீனவர்கள் உதவியை நாடினோம். விடுதலைப்புலிகள் என்று தெரிந்தால், உதவமாட்டார்கள் என்று கருதி, மனித வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்படும், "சூசைடு ஜாக்கெட், துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருட்கள் அடங்கிய பார்சல்களை அப்படியே கடலில் துõக்கிப் போட்டுவிட்டோம்,' என்று தெரிவித்தனர். "சில நாட்களுக்கு முன், ஆயுதங்களை கடத்தி வந்த போது, மற்றொரு படகு பழுதாகிவிட்டது. அப்போது, தமிழக மீனவர்கள் 12 பேர் வந்த படகை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். அந்த 12 பேரையும் சிறைப்பிடித்தோம். அவர்களை அப்படியே அழைத்துச் சென்று விடுதலைப்புலிகள் முகாமில் ஒப்படைத்தோம். அவர்கள் பத்திரமாக உள்ளனர்,' என்று போனிபால் தெரிவித்தார். அது உண்மையாக இருக்கிறதா என்பதற்காக, விடுதலைப் புலிகள் வசம் பேசும்படி, "கியூ' பிரிவு போலீசார் தெரிவித்தனர். போனிபால் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மொபைல் போனில் பேசிய போது, 12 மீனவர்களும் விடுதலைப்புலிகள் பிடியில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த 12 பேரும் தற்போது உயிரோடு திரும்புவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக மீனவர்களை சுட்ட வழக்கில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர் புலிகள். அத்துடன் 12 மீனவர்களை இத்தனை நாளாக சிறைப் பிடித்து வைத்திருப்பதால், மேலும் பெயர் கெடக்கூடாது என்பதற்காக அவர்களை உயிரோடு அனுப்புவார்களா என்பது மர்மமாக இருக்கிறது. தற்போது பிடிபட்ட ஆறு பேரையும் "பாஸ்போர்ட்' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக "கியூ' பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

புலிகளின் கோர்ட்டில் தீவிர விசாரணை: தமிழக மீனவர்களை சுட்டுக் கொலை செய்த சம்பவம் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களையும், தமிழக மக்களையும் எந்த காரணத்தைக் கொண்டும் தாக்கக்கூடாது என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் கட்டளை பிறப்பித்திருப்பதாக, "கியூ' பிரிவு போலீசாரிடம் பிடிபட்ட புலிகள் தெரிவித்தனர். படகில் ஆயுதங்களை ஏற்றி வரும் போது, அவற்றை பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது தான் புலிகளின் நோக்கம். அது புரியாமல், ஆயுதங்கள் அடங்கிய பெட்டிகள் மீது போர்த்தப்பட்டிருந்த மீன் வலையை எடுக்க முற்பட்டதால் தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இது தொடர்பாக புலிகளின் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் கிடைக்கும் என்று பிடிபட்ட போனிபால் தெரிவித்தார்.