Friday, April 20, 2007

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது!

முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது.


சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது.

முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டது. ஆனால் இன்று பிற்பகல் கோளாறுக்கு உள்ளான வேவு வானூர்தி தமது கட்டுப்பாட்டு நிலையம் மூலம் தரையிறக்கப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் வானூர்தி வீழ்ந்து சேதமாகி உடைந்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படை வானூர்திகள் தாக்குதல்களை நடத்துவதற்காக வேவுப்பறப்பை மேற்கொண்டு வீடியோ படம் எடுத்துக்கொடுக்கும் பணியைப் புரியும் இந்த ஆளற்ற வேவு வானூர்திகள் சிறிலங்கா வான்படைத் தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

தமிழ் மக்களால் வண்டு என்று இந்த வேவு வானூர்திகள் அழைக்கப்பட்டுகின்றது. இதற்கு முன்னர் வன்னி கனகராஜன்குளம் விஞ்ஞானகுளத்தில் இத்தகைய வேவு வானூர்தி வீழ்ந்து நொருங்கியது.

சிறிலங்கா வான்படைத் தாக்குதலுக்கு முக்கிய ஆதாரமாக இந்த ஆளற்ற வானூர்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.

No comments: