Saturday, April 07, 2007

சிறிலங்காவின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட வான்புலித் தாக்குதலே சாதனை வெற்றி: முன்னாள் இராணுவப் பேச்சாளர்.

சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல் மூலம் புதிய வெற்றியை சாதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ முன்னாள் உயர் அதிகாரியும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல்; சரத் முனசிங்க தெரிவித்துள்ளார்.


சிங்கள இணைய தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இடங்களை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்வது படைகளுக்கு மிகவும் ஆபத்தானது

கட்டைபறிச்சான்-சம்பூர்-கொக்கட்டிச்சோலை என இராணுவம் இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் தந்திரோபாயமாக தாக்குதலை நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்கின்றனர். இது இராணுவத்துக்கு ஆபத்தானது. ஏனென்றால் இதே பகுதிகள் முன்னரும் இராணுவத்திடம் இருந்தன. இது இல்லாமல் போனது ஏன் என்பதை பாதுகாப்புத்துறையினர் சிந்திக்க மறுக்கின்றனர்.

1993முதல் வட போர்முனைக்காகவே இந்த இடங்களை இராணுவம் கைவிடவேண்டிவந்தது. இன்றும் அந்த அளவில் தான் படைப்பரம்பல் உள்ளது.

கிழக்கில் வெறும் ஆளற்ற பகுதிகளை எதிர்ப்பில்லாமல் பிடிப்பது இராணுவ வெற்றியா?

இதைவிட கடந்த 26ம் திகதி வான்தாக்குதல் மூலம் புலிகள் தமது புதிய வெற்றியை சாதித்துள்ளனர். அந்த தாக்குதலை புலிகளின் வான்படையின் ஒரு சோதனை நடவடிக்கை என்றே கொள்ளவேண்டும். இந்த விமானங்களில் 400 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட குண்டுகளுடன் வந்து தாக்கமுடியும்.

அத்துடன் தேவையேற்படின் சாதாரண வீதியையே ஓடுபாதையாக பயன்படுத்தவும் முடியும். பரந்த நிலப்பரப்பின் ராடார்களுக்கு தெரியாமல் அவர்கள் கொழும்புக்கு வந்து தாக்கியுள்ளனர்.

இரவில் தாக்குதல் நடத்தும் வல்லமையை புலிகள் நிருபித்துள்ளதால் சிறிலங்காவின் சிறப்பு நிகழ்வு நாள் ஒன்றில் வெடிபொருளை நிரப்பி வந்து வான்தாக்குதலை நடத்தி பெரும் அழிவையும் அவர்களால் ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

1990களின் தொடக்கத்திலிருந்து 1990களின் கடைசி வரை தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ்மக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் சரத்முனசிங்க தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=31375

No comments: