ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று வைகோ தெரிவித்து வரும் நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருட்டிணசாமி வலியுறுத்தினார்.
அதேபோல் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய அமைச்சர் இளங்கோவனும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "மாலைமலர்" நாளிதழுக்கு வைகோ அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:
முதல்வரை கிருட்டிணசாமி சந்தித்து பேசியது தொடர்பாக நான் எதுவும் சொல்வதற்கில்லை. விடுதலைப்புலிகள் தொடர்பாக நான் புதிதாக எதுவும் பேசி விடவில்லை. தொடர்ந்து கூறி வரும் கருத்துக்களைத்தான் இப்போதும் கூறியிருக்கிறேன்.
பிரதமரை நான் சந்தித்து பேசிய போது என்ன கருத்தை வெளியிட்டேனோ அந்த கருத்தைதான் சமீபத்தில் நான் அறிவிப்பாக வெளியிட்டேன்.
இந்தியாவில், தமிழ்நாட்டில் எந்த ஒரு வன்முறையிலும் நாங்கள் ஈடுபட்டதுமில்லை. வன்முறைச் சம்பவங்களை ஆதரித்ததும் இல்லை.
இலங்கையில் தற்போது உச்ச கட்ட உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்களை சிங்கள வெறியர்கள் தாக்கி அழிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் துன்பத்தில் தள்ளப் படுகிறார்கள்.
ஈழத்தில் வாடி வதங்கி கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.
தமிழர்கள் வெல்ல வேண்டும். அவர்களுக்காக போராடும் விடுதலைப்புலிகள் வெல்ல வேண்டும் என்ற இயற்கையான கருத்தைத்தான் நான் கூறி இருக்கிறேன்.
என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்றார் வைகோ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நன்றி>புதினம்.
Monday, April 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment