Thursday, April 26, 2007

17 தன்னார்வ பணியாளர் படுகொலை விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டுக்கு இடமளிக்க போவதில்லை!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறுக்கீடு செய்யவோ அந்த விசாரணைகளை வேறொருவருக்கு ஒப்படைக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; தன்னார்வ நிறுவன ஊழியர்கள் (அக்ஷன்பாம்) 17 பேர் படுகொலை சம்பந்தப்பட்டமை தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு நிஸங்க உதலாபிட்டிய தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

அதேநேரம், முன்னாள் இந்தியப் பிரதம நிதியரசர் பகவதி தலைமையில் சர்வதேச நிபுணர் குழுவொன்றும் அந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் பலம் பொருந்திய இந்த இரண்டு குழுக்களும் இப் படுகொலை சம்பவத்தின் பின்னணியை கண்டு பிடிக்கவும் மனித உரிமைகளை பேணவும் நீதியான விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் இந்த விடயத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது. அவர்களின் இந்த எதிர்பார்ப்பானது ஜனாதிபதி விசாரணைக் குழுவையும் சர்வதேச நிபுணர்களின் குழுவையும் அவமதிப்பது போல் உள்ளது.

ஐக்கிய நாடுகள் இக்குழுக்களின் நேர்மைத் தன்மையை களங்கப்படுத்த முனைகிறது. இதனால் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த படுகொலை விசாரணையில் ஏனையவர்களின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது.

பகவதி குழு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக புகாரிடப்பட்டுள்ள 16 சம்பவங்கள் தொடர்பாக இங்கு விசாரணை நடத்த வந்துள்ளது. முதலாவது சம்பவமாகவே மூதூர் படுகொலை சம்பவத்தை ஏற்றுள்ளது.

குறிப்பிட்ட முறைப்பாடுகள் தொடர்பாக சாட்சியமளிக்கவும் சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசாங்கம் ஒழுங்குகளை செய்துள்ளது. சாட்சிகள் இன்னும் முன்வராமல் இருக்கும் பின்தங்கிய நிலை மட்டுமே இங்குள்ளது என்றார்.
நன்றி>தினக்குரல்

No comments: