Friday, April 06, 2007

அனைத்துலக மன்னிப்புச்சபையின் பரப்புரை: சிறிலங்கா கடும் எதிர்ப்பு!!!

இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் கரிபியனில் நடைபெறும் உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டியில் துடுப்பாட்ட பந்தில் கையொப்பங்களை சேகரித்து வரும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயற்பாட்டுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

துடுப்பாட்ட விளையாட்டை அரசியல் மயப்படுத்தி அனைத்துலக மன்னிப்புச் சபை தவறாக நடக்க முற்படுகிறது.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்புக் குழுவை சிறிலங்காவில் அமைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கைக்கு ஆதரவு தேடும் முகமாக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய தேவையில்லாத வேலை கவலையை தருகின்றது. நடந்து வரும் துடுப்பாட்டப் போட்டியில் நடுநிலைமையை பேணும் பொருட்டு அனைத்துலக துடுப்பாட்ட சபை, தனது பிரதிநிதிகளின் மூலம் இந் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிபியனில் உலக கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டி நடைபெறும் போது மேற்கொள்ளப்படும் எந்த மனித உரிமை போராட்டங்களும் தீமையான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும், விளையாட்டுக்கள் எப்போதும் சிறிலங்காவை ஒருங்கிணைத்து வைத்துள்ளன. அது பலதரப்பட்ட மக்களிடம் அமைதியை ஊக்கிவிக்கும் காரணி, சிறிலங்காவின் தேசிய துடுப்பாட்டக் குழு சிங்கள, தமிழ், முஸ்லீம், பறங்கியர் என பலதரப்பட்ட இன மக்களையும் கொண்டுள்ளதாக ஜெனீவாவில் நடைபெற்ற 4 ஆவது மனித உரிமை சபை கூட்டத்தொடரின் போது அனைத்துலக மன்னிப்புச்சபை பிரதிநிதிகளிடம் சிறிலங்காவின் பிரதிநிதிகள் தெரிவித்தாக கூறப்படுகின்றது.

மேலும் விளையாட்டுக்களை அரசியல் மயப்படுத்துவது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் கொண்டுவரப்பட்ட 'விளையாட்டுக்கள் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, அமைதி போன்றவற்றை ஊக்குவிக்கின்றது' என்ற தலைப்பிலான ஐ.நாவின் தீர்மானம் 59/10 பிரகாரம் தவறானது எனவும் மன்னிப்புச்சபை பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மன்னிப்புச் சபையினால் நடத்தப்படும் இந்த போராட்டம் விளையாட்டுக்களை விரும்பும் மக்களின் நம்பிக்கையை சீரழிப்பதுடன், சிறிலங்காவின் மீதான நல்லெண்ணத்தையும் பாதிக்கும் என வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: