Sunday, April 01, 2007

கட்டுநாயக்க வான்தாக்குதலைத் தொடர்ந்து உல்லாசப்பயணத்துறை பெருமளவு வீழ்சி!!!

கட்டுநாயக்க வான்தாக்குதலைத் தொடர்ந்து பெருமளவு விடுதிகளின் முற்பதிவுகள் இரத்து!!!

கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீதான வான்புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தென்பகுதியில் விடுதிகளை முற்பதிவு செய்திருந்த உல்லாசப் பயணிகள் தமது பதிவுகளை பெருமளவில் இரத்துச் செய்து வருகின்றனர்.


இந்த தாக்குதலானது ஒரு தனியான தாக்குதல் என விபரிக்கப்பட்டு வந்தாலும், மிகவும் அதிகமாக உல்லாசப்பயணிகள் வரும் இந்த வேளையில் மேற்கொள்ளப்படும் இரத்துக்கள் தம்மை மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளிவிடலாம் என முன்னணி விடுதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க வான்தாக்குதலைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கம், தனது பயணிகளை எச்சரித்துள்ளது. எனினும் ஏனைய நாடுகள் எச்சரிக்கைகளை விடுக்காதது ஒரு நல்ல அறிகுறி என சிறிலங்காவின் சுற்றுலாத்துறை தலைவர் ரென்ரன் டீ அல்விஸ் தெரிவித்துள்ளார்.

நாடுகள் தங்களின் பயண ஆலோசனைகளை கடுமையாக்கிய போதும், தாங்கள் எதிர்பார்த்தனைப்போல பெருமளவில் சுற்றுலாத்துறை பாதிப்படையவில்லை என சுற்றுலாத்துறை விடுதிகள் சபையின் பிரதித் தலைவர் சிறீலால் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஒவ்வொரு நாளும் 90 - 95 பேர் தமது முற்பதிவுகளை இரத்துச் செய்து வருவதாக முன்னணி விடுதி ஒன்று தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நாடுகளில் இருந்து தான் அதிகளவான பயணிகள் வருவதுண்டு. இருந்த போதும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் போது அதிகளவான பயணிகள் வருவார்கள் என நம்புகிறோம். சுற்றுலா தொழிற்துறை தப்பிப்பிழைக்க வேண்டுமாயின் அமைதி முக்கியமானது என அது மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலின் பின்னர் சிலர் தமது பதிவுகளை இரத்துச் செய்திருந்தனர். ஆனால் எமது தற்போதைய கவலை என்னவென்றால் எதிர்வரும் ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களுக்கான முற்பதிவுகள் ஏப்ரல், மே மாதங்களில் தான் மேற்கொள்ளப்படுவதுண்டு அவை பாதிக்கப்படலாம் என்பது தான்.

தாக்குதலானது அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இருந்து சில மீற்றர் தூரத்தில் நிகழ்ந்துள்ளதே பொரும் பாதிப்புக்களை எற்படுத்தியுள்ளது என அமயா விடுதியின் நிர்வாக இயக்குனர் லலின் சமரவிக்கிராம தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிலங்காவிற்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முற்பதிவுகள் செய்வதற்கு முன்னர் ஒருமுறைக்கு இரு முறை சிந்திக்கின்றனர். கடந்த மாதம் எம்மால் பேர்லினில் ஐரீபியில் மேற்கொள்ளப்பட்ட எழுந்தமானமான ஆய்வில் பயண முகவர் நிலையங்களில் ஒரு சிலரை தவிர பெரும்பாலான நிலையங்கள் எமது பயணக்குறிப்பக்களை தமது கண்காட்சி அறையில் இருந்து நீக்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தான அறிகுறி என அவர் மேலும் தெரிவித்தார்.

காலித் துறைமுகம் மீதான தாக்குதலின் பின்னர் முற்பதிவுகள் பெருமளவில் குறைந்திருந்தன. ஆனால் தற்போதைய வான் தாக்கதலை தொடாந்து அது மேலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி>புதினம்

No comments: