Wednesday, April 04, 2007

'மனித உரிமை மீறல்கள் தொடர்பான உலகின் கவனத்தை சிறிலங்கா அரசு மாற்ற முயல்கின்றது'

"தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் அனைத்துலக சமூகம் எடுத்துள்ள கவனத்தை சிறிலங்கா அரசாங்கம் திசை திருப்ப முனைகின்றது. இதன் பொருட்டு தமிழ் மக்களின் உரிமைப் போருக்கு எதிராக பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தொடரை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்த முனைகின்றது."


தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"சார்க் போன்ற மாநாடுகள் நடைபெறும் போது தமிழ் மக்களின் குரல் மிகவும் முக்கியமானது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளாலும் அனைத்துலக மற்றும் பிராந்திய வெளிவிவகாரக் கொள்கைகளினாலும் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 12 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது அன்றைய அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மக்களின் உரிமைக்கான சமூகத் திட்டத்தை உருவாக்கியிருந்தார்.

இந்த திட்டத்தின் படி உறுப்புரிமை நாடுகள் மனித உரிமை பாதுகாப்பு, மக்களின் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றை அவதானித்தல் வேண்டும். ஆனால் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொழும்பு மேற்கொண்டு வருகின்றது.

சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவர்கள் படுகொலைகள், கடத்தல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

மக்களின் உரிமைக்கான சமூகத் திட்டத்திற்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் மீது கடுமையான கண்டனங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த நவீன சமூகத்தில் பொது மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் அரசாங்கத்திற்கு எந்த நாடுகளும் ஆதரவைக் கொடுப்பதில்லை.

இந்த திட்டத்தில் பெண்களினதும், சிறுவர்களினதும் உரிமைகளைப் பாதுகாக்க சிறப்பு சரத்துக்கள் உண்டு. சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவ வலயத்திற்குள் உள்ள பாடசாலைகளுக்கு செல்லுமாறு சிறார்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

எமது தாயகப்பகுதிகளில் உள்ள சிறார்களின் நிலைகளை நாம் கூறுவதால், சிங்களப் பகுதிகளில் உள்ள சிறார்களின் நிலைமைகளை புறக்கணித்ததாக அர்த்தமாகாது. தென் சிறிலங்காவில் 35,000 சிறார்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறார்களின் நலன் தொடர்பாக இது ஒரு மிகப்பெரிய மனிதாபிமானப் பிரச்சனை.

சிறிலங்கா ஒரு புத்திசுவாதீனமற்ற நிலையை அடைந்து வருகின்றது. அது தனது படையினரையும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரையும் கொண்டு தமிழ் மக்கள் மீது ஒரு இன அழிப்புப் போரை மேற்கொண்டு வருகின்றது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது வன்முறைகளுக்கு சாட்சிகளாகும் சிங்கள மக்கள் கூட மாற்றப்படுகின்றனர் அல்லது அடக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்த மனவியாதி காலத்தைக் கடத்தும், கவனத்தை திருப்பும் உத்திகளை கொண்டது.

தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வேறு எந்த வழிகளும் அற்ற நிலையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எதிராக அனைத்துலக சமூகத்தின் சூழலை மாற்றலாம் என அது தவறாக நம்புகின்றது.

விடுதலைப் புலிகள் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு, அது தமிழ் மக்களுக்கான அரசாங்கத்தை நடத்தி வருகின்ற பொறுப்பில் உள்ளது. வன்முறைகளை பிரயோகிப்பவர்களின் மீது அது பதில் தாக்குதல்களை நடாத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் சிறிலங்கா அரசாங்கத்தை தவிர ஏனையோருக்கு ஒரு போதும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள்" என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: