Tuesday, April 24, 2007

சிங்கள இராணுவத்துக்கு ஆயுத உதவி: சென்னையில் நெடுமாறன், இராமதாஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.







சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதனைக் கண்டித்து பாட்டாளி மக்கள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பேசியதாவது:

சிங்கள இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதாக செய்தி வரும் போதெல்லாம் அவ்வாறு வழங்கப்படவில்லை என்ற மறுப்பும் வருகிறது. ஆனால் ஆயுதம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை.

போப் ஆண்டவர் உள்பட மனித நேயத்தை விரும்பும் உலகத் தலைவர்கள் எல்லாம் அமைதியான முறையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதற்கு சிறிலங்கா அரசு உடனே போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் வாழும் இந்தியா மட்டும் மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும்.

வங்காளதேச மக்கள் விரும்பியதற்கு ஏற்ப நாட்டின் பிரிவினைக்கு இந்தியா உதவி செய்ததாக சோனியா குறிப்பிட்டுள்ளார். அதே போல இலங்கைப் பிரச்சினைக்கும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தியா இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்.

சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று திரள வேண்டும். ஈழத் தமிழர்கள் சாகடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தமிழனையும் சாகவிட மாட்டோம் என்ற முதல் குரல் முதல்மைச்சர் கருணாநிதியிடம் இருந்து வரவேண்டும்.

சிறிலங்கா ஆயுதம் வழங்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசிடம் இருந்து அவர் பெற்றுத் தர வேண்டும். இந்திய அரசு தலையிடாமல் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு வராது என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்,
ஈழத்தமிழன் எங்கள் உடன்பிறப்பு
அவனுக்கு உதவுவது தமிழர்களின் பொறுப்ப
தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசே உதவாதே!
தமிழர்களை காக்க உடனே நடவடிக்கை எடு!
தூதரக உறவை உடனே துண்டித்து விடு என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பபட்டன.
நன்றி>புதினம்

No comments: