Saturday, April 21, 2007

அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை!

இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த அந்தப் பயங்கரத் தாக்குதல், கடந்த மாதம் 30ம் தேதியன்று உக்கிரத்தை எட்டியது. குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் அன்று சுட்டுக்கொல்லப்பட்டதுதான் அதற்குக் காரணம். மொத்தமாக ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களைக் கொதித்தெழச் செய்துவிட்டது.

மீனவர்களின் உயிரைக் காப்பாற்றத் தவறும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, மீனவர்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு, குமரி மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மீனவர்களின் இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க., தே.மு.தி.க. உட்பட எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்தன.

மீனவர்களின் இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நீடித்ததால், மீனவர்களைச் சமாதானப்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அரசு, அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதோடு ‘தமிழக மீனவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்றும் உறுதி அளித்தது. கடலோர பாதுகாப்புக் காவல் படையினரை மத்திய அரசு முடுக்கிவிட்டது. தூத்துக்குடியில் முடங்கிக் கிடந்த ‘நாய்கிதேவி’ என்ற கடலோர ரோந்துக் கப்பல் கடலுக்குள் அவசர அவசரமாக இறக்கப்பட்டு ரோந்து சுற்றத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கடந்த 11_ம் தேதி, இந்திய எல்லைப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு மீனவர்களையும், மூன்று படகுகளையும் கடலோர காவல்படையினர் பிடித்து தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தனர். அதில் ஒரு படகில் ‘மரியா’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

‘மரியா என்று எழுதப்பட்டிருந்த படகில் வந்தவர்கள்தான் எங்களைச் சுட்டார்கள்’ என்று குமரி மாவட்ட மீனவர்கள் முன்பு சொல்லியிருந்ததால், மீனவர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்ட இலங்கையைச் சேர்ந்த மரியா படகிலிருந்த சிங்களர்கள் கடலோர காவல் படையிடம் மாட்டிக் கொண்டார்கள்’ என்ற செய்தி வேகமாகப் பரவியது. போலீஸே அந்தச் செய்தியைக் கசியவிட்டது என்கிறார்கள். அதற்குக் காரணம், தமிழக மீனவர்களின் மனம் குளிரச் செய்யும் நிலையில் அரசு இருந்ததுதான் என்றும் கூறப்பட்டது.

போலீஸ் நினைத்தது போலவே, இங்குள்ள மீனவர்களும் சிங்களர்கள் பிடிபட்டதால் மனம் குளிர்ந்துதான் போனார்கள். அரசுக்கு நன்றி தெரிவித்து பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்த தூத்துக்குடி மாவட்ட மீனவ அமைப்புகள், விளம்பரத்தில் ‘குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்ற சிங்களர்களைப் பிடித்த கடலோர காவல்படையினருக்கு நன்றி’ என்ற வாசகத்தையும் சேர்த்து சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் ‘மரியா’ படகின் மர்மத்தை மறுநாள் உப்புச்சப்பில்லாமல் செய்துவிட்டார், தூத்துக்குடி எஸ்.பி.யான ஜான் நிக்கல்சன். ‘‘குமரி மாவட்ட மீனவர்களை நடுக்கடலில் சுட்டது யார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. மரியா என்ற படகில் வந்தவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்களா? அல்லது இலங்கையைச் சேர்ந்த சிங்களர்களா? என்பது தெரியவில்லை. பொதுவாக மரியா, மாதா என்ற பெயர்களில் மீனவர்கள் படகு வைத்திருப்பது தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அதிகம். எனவே யாரோ ‘மரியா’ என்ற படகை தமிழ் மீனவர்களைச் சுட தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், இப்போது பிடிபட்ட ‘மரியா’ படகு இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமானதுதான். இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆறு பேர் ‘மரியா’ என்ற படகில் மீன் பிடிக்க வந்திருக்கிறார்கள். அப்போது அந்தப் படகு ரிப்பேர் ஆகியிருக்கிறது. அதனால் அவர்கள் 21 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த வழியாக வந்த குமரி மாவட்ட மீனவர்களிடம் அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழில் பேசியதால், அவர்களைத் தங்களது படகுகளில் ஏற்றியிருக்கிறார்கள் குமரி மீனவர்கள். அப்போதுதான் அந்த மூன்று படகுகளையும் (குமரி மீனவர்கள் கொண்டு சென்றது இரண்டு படகுகள்) கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்து வந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடப்படுகிறார்கள்!’’ என்று ‘மரியா’ படகு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் அவர்.

இது குறித்து நம்மிடம் கருத்துத் தெரிவித்த மீனவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ‘‘தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்வது இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் இதை மறைக்கப் பார்க்கிறது. இப்போது பிடிபட்டிருக்கும் மரியா படகில் கூட ஏகப்பட்ட சந்தேகம் இருக்கிறது. முதலில் அந்தப் படகில் இருந்து ஆயுதங்கள் பிடிபட்டதாகச் சொன்னார்கள். இப்போது அதில் ஒன்றும் இல்லை என்கிறார்கள். கடைசியில் அது இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

நடுக்கடலில் 21 நாட்கள் அவர்கள் தத்தளித்ததாகக் கூறுகிறார்கள். 21 நாட்கள் காணாமல் போனவர்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஏன் தேடவில்லை என்று தெரியவில்லை. மற்றும் அதில் இருந்த ஆயுதங்கள் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்தவுடன், அவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள் போலீஸ் வசம் வந்ததும், ஒரே நாள் இரவில் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் எங்களுக்கு இதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.

இதை நாங்கள் விட்டுவிடப்போவதில்லை. சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட (கடலோர காவல் படையிடம் சிக்கிய மீனவர்கள்) மீனவர்களிடம் கடலில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கேட்கப் போகிறோம். போலீஸ் சொல்வதுதான் உண்மையா? அல்லது போலீஸ் அவர்களை அப்படி சொல்லச் சொன்னதா என்று கேட்போம். அதில் ஏதாவது முன்னுக்குப் பின் முரணாகச் செய்திகள் வந்தால், அரசுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்!’’ என்றார்கள் அவர்கள்.
நன்றி>குமுதம்

No comments: