Tuesday, April 10, 2007

குமரி மீனவர்களைக் குறி வைத்து அடித்த இலங்கைக் கடற்படை - கொதித்துக் கிடக்கும் மீனவர்கள்!!!

- குமுதம் ரிப்போர்ட்டர்-

எப்போதெல்லாம் இலங்கையில் விடுதலைப்புலிகள் விஸ்வரூபம் எடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் தங்களின் ஆத்திரத்தை, தமிழக மீனவர்கள் மீது காட்டுவது சிங்கள கடற்படையின் வாடிக்கைதானாம். அந்த வகையில் முதன்முறையாக விடுதலைப்புலிகளின் விமானப்படைத்திறன் வெளிப்பட்டிருக்கும் வேளையில், சிங்கள கடற்படையினரும் கொத்தாக ஐந்து தமிழக மீனவர்களின் உயிர்களைக் குடித்து, தங்களின் ரத்தப்பசியைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்
ள்.

வழக்கமாக ராமேஸ்வரம் மீனவர்களையே குறி வைக்கும் அவர்கள், இம்முறை குமரி மீனவர்களைக் காவு வாங்கியிருப்பதுதான் ஒரே வித்தியாசம். ஒட்டுமொத்த குமரிக் கடலோர கிராமங்களையும் கொந்தளிக்க வைத்திருக்கும் இந்த விவகாரம் பற்றி நாம் விசாரித்தோம்.

இந்தியாவிலேயே ஆழ்கடல் மீன் பிடித்தொழிலில் பிரசித்தி பெற்றவர்கள், குமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோர மீனவர்கள். குமரி மாவட்டம் மட்டுமல்லாது, குஜராத் வரை இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதி முழுவதும் வியாபித்து இவர்கள் மீன் பிடிதொழில் செய்து வருகிறார்கள். ‘ஏதோ காலையில் கிளம்பிப் போனோம்; இரவில் வீட்டுக்குத் திரும்பினோம்’ என்கிற ரகமல்ல, இவர்களின் மீன் பிடி தொழில். ஆழ்கடலிலேயே பதினைந்து நாட்கள் முதல் இருபத்தைந்து நாட்கள் வரை தங்கியிருந்து, உயர்ரக மீன்களை அள்ளி வருவதுதான், இவர்களின் தொழில் ஸ்டைல்.

அப்படித்தான் கடந்த மாதம் இருபத்துமூன்றாம் தேதி தூத்தூர் அருகே சின்னத்துறை என்ற கடலோர கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள், ‘ரெட்சன்’ என்கிற விசைப்படகில் மீன் பிடிக்கக் கிளம்பிப் போயிருக்கிறார்கள். இருபத்தொன்பதாம் தேதி அதிகாலை ஆறரை மணியளவில் இவர்கள், கன்னியாகுமரிக்குத் தெற்கே முப்பது கடல் மைல் (உத்தேசமாக ஐம்பது கி.மீ.) தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள
ம்.

அப்போது சற்று பெரிய அளவிலான இரண்டு விசைப்படகுகள், தென்கிழக்குத் திசையிலிருந்து இவர்களை நோக்கி வந்திருக்கின்றன. இரு படகுகளிலும் தலா எட்டுப் பேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அரைக்கால் சட்டையும், கறுப்பு பனியனும் அணிந்திருந்தார்களாம்.

குமரி மீனவர்களின் படகிலிருந்து சுமார் முப்பதடி தொலைவில் தங்கள் படகுகளை நிறுத்திக்கொண்ட அவர்கள், திடுதிப்பென யாரும் எதிர்பாராதவிதமாக துப்பாக்கிகளால் சுடத் தொடங்கியிருக்கின்றனர். சீறி வந்த தோட்டாக்கள் முதலில் குமரி விசைப்படகின் உரிமையாளரான சதீஷையும், அருகில் நின்றிருந்த அவரது தம்பி ஜஸ்டினையும் சல்லடையாய் துளைத்திருக்கின்றன. இருவரும் அப்படியே நிலை தடுமாறிக் கடலுக்குள் விழுந்திருக்கிறார்கள். மற்ற ஏழு பேரும் தங்கள் படகிலேயே பதுங்கி, தப்பிக்க முயன்றிருக்கிறார்கள்.

ஆனால் மழையாய்ப் பொழிந்த எமகாதகர்களின் தோட்டாக்கள் விசைப்படகின் ஓட்டுநர் ஜீஸஸ்தாஸ் மற்றும் லீனிஸ், மரியஜான் ஆகியோரின் உயிர்களையும் குடித்துவிட்டன. ஜீஸ்டர்பாய், அருளானந்த தாஸ், மரிய ஜான்லூயிஸ், செரின் ஆகிய நால்வர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவம் பற்றி வயர்லெஸ் மூலமாக சின்னத்துறை கிராமத்திற்குத் தகவல் கிடைக்க... அந்த ஏரியாவே சோகமயமானது. பலியானவர்களின் உறவுப் பெண்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்தபடி கடற்கரையிலேயே அழுது புரண்டார்கள். இதனால் அவர்களுக்கு ஆறுதல் கூற வந்த கலெக்டர் சுவர்ணா உள்ளிட்ட அதிகாரிகளும் கண்கலங்கி நின்றனர்.

பலியானவர்களில் ஒருவரான சதீஷ§க்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறதாம். தற்போது இவரது மனைவி பிரகி, இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவர் இறந்த செய்தி கேட்டதுமே அவர் மயங்கி விழுந்துவிட்டார். பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

சதீஷின் தம்பி ஜஸ்டின், இவர்களின் அக்கா கணவர் ஜீஸஸ்தாஸ் ஆகியோரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பதால், இவர்கள் குடும்பத்தில் மட்டுமே பலியானவர்களின் எண்ணிக்கை மூன்று ஆனது. ‘என் ஆண் வாரிசுகள் ரெண்டு பேருமே போயிட்டாங்களே’ என சதீஷ் _ ஜஸ்டின் ஆகியோரின் தாய் அரற்றியபடியே இருந்தார்.

பலியான மற்றொரு மீனவரான லீனிஸ§க்கு மேரி என்ற மனைவியும், மூன்று மகன்கள், ஒரு மகள் ஆகியோரும் உள்ளனர். இவர்களில் வழக்கமாக மீன் பிடிதொழிலுக்குச் செல்லும் ஒரு மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் அவருக்குப் பதிலாகவே லீனிஸ் கடலுக்குப் போயிருக்கிறார். அது இப்படி இறுதிப்பயணமாக இருக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருக்கவில்லை.

பலியான இன்னொரு மீனவரான மரியஜானுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூவருமே பள்ளியில் படித்துக்கொண்டிருப்பவர்கள். "என் புள்ளைங்களை இனி எப்படிக் கரையேத்துவேன்" என மரியஜானின் மனைவி ரீத்தம்மாள் அழுது புலம்பியது பரிதாபமாக இருந்தது.

இந்தத் தகவல் கேள்விப்பட்டு, மாவட்ட அமைச்சரான சுரேஷ்ராஜன் சட்டமன்றத்திற்குக்கூட போகாமல் (வெள்ளிக்கிழமை) அவசரமாக ஓடி வந்தார். பலியானவர்களின் உடல் அடக்கம் நடந்த உடனேயே ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு நிவாரணமாக தலா இரண்டு லட்ச ரூபாய் வழங்கினார் அமைச்சர்.

வழக்கமாக இதுபோன்ற மரணங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதற்குத்தான் அரசு ஆணை உண்டாம். இதுபற்றி பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் உரையாற்றிய சுரேஷ்ராஜன், "இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு கலைஞர் ரொம்பவே துடித்துப்போய்விட்டார். அவர்தான் சிறப்பு கவனம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய் வழங்க ஆணையிட்டார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது உள்ளிட்ட உங்கள் கோரிக்கைகளையும் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்" என்று உறுதி கூறினார்.

மறுநாளே அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வந்து பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா இருபத்தைந்தாயிரம் வழங்கினார். தே.மு.தி.க. சார்பிலும் அதேபோல் நிதி உதவி அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மீனவர்களை சாந்தப்படுத்திவிட்டதாகச் சொல்லமுடியாது. இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் நிர்வாகியும், குறும்பனை பங்குத்தந்தையுமான சர்ச்சில்,

"கடந்த (மார்ச்) ஆறாம் தேதி குளச்சல், கோடிமுனை பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டு மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியில் மீன் பிடிக்கப்போய், காணாமல் போனார்கள். அவர்களை இதுவரை அரசு கண்டுபிடிக்கவில்லை. அதன்பிறகு கடந்த இருபத்தைந்தாம் தேதி இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் கன்னியாகுமரி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இதேபோல் இரண்டு படகுகளில் வந்த இலங்கைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டு அட்டூழியம் செய்திருக்கிறது. ஒரு மீனவரை சரமாரியாக அடித்தும் உதைத்தார்கள். அதுபற்றி இருபத்தேழாம் தேதி நாங்கள் குமரி கலெக்டர் அலுவலகத்தில் வந்து புகார் செய்தோம். ஆனாலும் மறுநாளும் அதேபோல் அதே இடத்தில் குளச்சல் மீனவர்கள் சென்ற படகை இலங்கைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டு விரட்டியிருக்கிறது.

இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகும் குமரி கடல் பகுதியில் நம் மத்திய அரசு எவ்வித பாதுகாப்பையும் போடவில்லை. நாங்கள் கலெக்டரிடம் புகார் கூறிய உடனேயே அரசு சுதாரித்து கன்னியாகுமரி பகுதியில் கடற்படை ரோந்தைத் தீவிரப்படுத்தியிருந்தால், இருபத்தொன்பதாம் தேதி இந்தக் கோர சம்பவம் நடந்திருக்காது. ஐந்து உயிர்களையும் இழந்திருக்க மாட்டோம்.

தவிர, இதை விடுதலைப்புலிகள் செய்திருப்பதாக இலங்கை அரசும், இந்திய ராணுவமும் கூறுவதை நாங்கள் நம்பவில்லை. தமிழக மீனவர்களை அவர்கள் தாக்கியதாக சரித்திரமே கிடையாது. இருவாரங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் பகுதியில் தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கொன்றதால், அங்கு இப்போது இந்திய கடற்படை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டிருக்கி
து. அதனால்தால் சிங்களப் படையினர் குமரிப் பகுதிக்கு வந்து அட்டூழியம் செய்கின்றனர்.

தவிர, குமரி மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்ததாகக் கூறுவதும் சரியல்ல. கன்னியாகுமரிக்குத் தெற்கே எண்பது கடல் மைல் தொலைவில்தான் சர்வதேச கடல் எல்லை இருக்கிறது. ஆனால் குமரி மீனவர்களோ முப்பது கடல் மைல் தொலைவிலேயே நின்று மீன்பிடித்திருக்கிறார்கள். எனவே இலங்கை படைதான் அத்துமீறி வந்திருக்கிறது" என்று ஆவேசப்பட்டார், ஃபாதர் சர்ச்சில்.

தாக்கியது இலங்கை கடற்படைதானா? என்பதை உறுதிப்படுத்த, இந்தச் சம்பவத்தில் காயம்பட்ட அருளானந்த தாஸிடம் பேசினோம். "தமிழனுக்கும், சிங்களனுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியாதா? சிங்கள கடற்படையினர்தான் மீனவர்களைத் தாக்குவதற்கென்றே இப்படி மஃப்டியில் வருகிறார்கள். சரளமாகப் பேசினால் அவர்கள் சாயம் வெளுத்துவிடும் என்பதால், சைகையாலேயே எங்களை கைகளை உயர்த்தச் சொல்லியும் சட்டைகளைக் கழற்றச் சொல்லியும் கெடுபிடி செய்தனர். தட்டுத்தடுமாறி ஓரிரு தமிழ் வார்த்தைகளையும் பேசினர்" என்றார் அவர்.

தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் தலைவர் பீட்டர்தாஸ் நம்மிடம் பேசுகையில், "விடுதலைப் புலிகளோடு மோதல் ஏற்பட்ட காலம் தொட்டு இலங்கை ராணுவம் இப்படித் தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வருகிறது. அதிலும் அங்கே அவர்களுக்குத் தோல்வி கிடைக்கும் போதெல்லாம் தமிழக மீனவர்கள் மீது கொஞ்சம் உக்கிரமாகப் பாய்வார்கள். கடந்த இருபதாண்டுகளில் இப்படி எண்பத்து மூன்று தமிழக மீனவர்களை நாம் இழந்திருக்கின்றோம்.

இதில் விசேஷம் என்னவென்றால், நமது இந்திய கடல் எல்லையில் பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு இலங்கை ஆகிய நான்கு நாடுகள் உள்ளன. அதில் ரொம்பவும் நட்பு நாடாக நம் மத்திய அரசு சொல்வது இலங்கையைத்தான். ஆனால், அந்த இலங்கையைப் போல வேறு எந்த நாடும் இப்படி நம் மீனவர்களைக் கொன்றதில்லை.

குஜராத்வரை மீன் பிடிக்கப் போகும் நம் குமரி மீனவர்கள், எத்தனையோ முறை பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒருமுறை கூட அந்த ராணுவம் அவர்களைச் சுட்டதில்லை. ஓரிரு ஆண்டுகள் சிறையில் போட்டுச் சித்திரவதைப் படுத்துவதோடு விட்டுவிடுவார்கள். ஆனால், ‘நட்பு’ நாடான சிங்களப் படை சுட்டுக் கொல்லும்; அல்லது தமிழக மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போய் சிங்கள ராணுவ முகாம்களில் அடிமைகளாக்கி வேலை வாங்குவார்களாம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அழிக்கால் என்ற குமரி மாவட்ட கடற்கரை கிராமத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற பன்னிரண்டு மீனவர்களின் கதி இன்றுவரை தெரியவில்லை. அவர்களையும் கடந்த ஆறாம் தேதி ராமேஸ்வரம் கடலில் காணாமல் போன குளச்சல் மீனவர்களையும் இலங்கை ராணுவம் அப்படித்தான் சிறை வைத்திருப்பதாகக் கருதுகிறோம்.

உலகில் எங்குமே இல்லாத இந்தக் கொடூரங்களைச் செய்யும் இலங்கையை, ‘நட்பு நாடு’ எனச் சொல்லும் இந்திய அரசைத்தான் நாங்கள் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இந்திக்காரன் உயிர்தான் உங்களுக்கு உயிராகத் தெரியுமா? தமிழன், அதுவும் மீனவன் என்றால் இளப்பமா? நெய்வேலி அனல் மின்நிலைய பிரச்னைக்காக ‘மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்’ என மிரட்டிய தமிழக முதல்வர், நம் மீனவர்களின் உயிர்ப் பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? டெல்லியில் நடக்கும் ‘சார்க்’ மாநாட்டில் இந்தப் பிரச்னையைப் பேச வைக்க வேண்டும்’ எனத் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியிருக்கிறோம். பார்ப்போம், என்ன நடக்கிறதென்று?" என பட்டாசாய் வெடித்துத் தள்ளினார் பீட்டர்தாஸ்.

எப்படியோ, இனியாவது மீனவர்களுக்குப் பொழுது புலர்ந்தால் சரி!

செல்வா
- குமுதம் ரிப்போர்ட்டர், April 08, 2007

No comments: