Monday, April 09, 2007

சிறிலங்காவின் அறிக்கைக்கு அனைத்துலக துடுப்பாட்ட சபை மறுப்பு!

அனைத்துலக மன்னிப்புச் சபையினால் நடத்தப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு தம்மால் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டது தொடர்பாக வெளியாகிய ஊடகங்களின் செய்திகளுக்கு அனைத்துலக துடுப்பாட்ட சபை தனது மறுப்பை தெரிவித்துள்ளது.


சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அனைத்துலக மன்னிப்புச் சபைக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களில் தாம் தலையிடவில்லை என அனைத்துலக துடுப்பாட்ட சபையின் தொடர்பாடலுக்கான அதிகாரியான ஜேம்ஸ் பிற்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார்.

கரிபியன் தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்காவில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி "விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்" என்னும் போராட்டத்தை அனைத்துலக மன்னிப்புச் சபை முன்னெடுத்து வருகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கிப் போயுள்ள மக்களின் மனித உரிமைகளைக் காப்பதில் இரு தரப்பும் அக்கறை செலுத்த வேண்டும் என மன்னிப்புச்சபை கோரி வருகின்றது.

மன்னிப்புச் சபையின் இந்த நடவடிக்கை சுப்பர்-08 இல் தெரிவாகி தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் தமது அணியினரின் மனவுறுதிகளை அதிகம் பாதிக்கும் என சிறிலங்கா அரசாங்கம், தமது கடும் எதிர்ப்பை அனைத்துலக துடுப்பாட்ட சபை, மன்னிப்புச் சபை ஆகியவற்றிற்கு தெரிவித்திருந்தது.

ஆனால் தம்மால் உலகக் கோப்பைக்கான போட்டியில் மட்டுமே கவனத்தை செலுத்த முடியும் எனவும், ஏனையவற்றில் அல்ல எனவும் அனைத்துலக துடுப்பாட்ட சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜேம்ஸ் பிற்ஸ்ஜெரால்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது:

போட்டிகளில் அரசியல் புகுத்தப்படுவதை நாம் ஆதரிக்கவில்லை, அதேசமயம் மைதானத்திற்கு வெளியில் நடைபெறும் சட்டபூர்வமான போராட்டங்களை எம்மால் தடுக்கவும் முடியாது.

எமது கவனம் முழுவதும் விளையாட்டில் உள்ளதே தவிர அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டு அரசியலில் அல்ல. வெற்றிகரமான இந்த உலகக் கோப்பைக்கான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வதே எமது முதன்மையான இலக்கு என்றார் அவர்.

எனினும் மன்னிப்புச் சபையின் நடவடிக்கை விளையாட்டுக்களில் சிறிலங்கா அணியின் மன உறுதியை பாதிக்குமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதனிடையே தமது போராட்டம் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியை நோக்கியது அல்ல என மன்னிப்புச் சபையின் நடவடிக்கை முகாமையாளர் றொபேட் கோடன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அது சிறிலங்கா அணியையோ அல்லது மேற்கிந்திய தீவுகள் அணியையோ அது ஒன்றும் செய்யாது. இந்த நடவடிக்கை அவுஸ்திரேலியா, பஹாமஸ், பெர்முடா, இந்தியா, நேபாளம், பிரித்தானியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோதல்களில் ஈடுபட்டு வரும் இரு தரப்புக்களும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைப்பதை அனுமதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வெள்ளைப் பந்துகளில் கையொப்பங்கள் சேகரிக்கப்படுகின்றன.

கையொப்பங்கள் இடப்பட்ட இந்த பந்துகள் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: