Wednesday, November 12, 2008

இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல்!!!

கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் -

"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வருமாறு-

இராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் கச்சதீவு அருகே சில மீனவர்கள் 10 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கைக் கடற்படையினர் 5 கப்பல்களில் அங்கு ரோந்து வந்தனர். தமிழக மீனவர்களைப் பார்த்ததும் சற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் படகுகளில் ஏறினர். மீனவர்களை வாள் மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கி அவர்களை நிர்வாணப்படுத்தினர்.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படகில் இருந்த ஜோதிபாச (வயது-21), வினிஸ்டன், கார்பசேவ் மற்றும் இன்னொரு படகில் இருந்த கிங்ஸ்டன் ஆகியோரை அடித்து உதைத்தனர். துப்பாக்கி முனையால் அவர் களைத் தாக்கியதில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
பின்னர் படகில் இருந்த ஐஸ் பெட்டி, மரப்பலகைகள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசியதுடன், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி நேற்றுக்காலை மீனவர்கள் கரைசேர்ந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் கியூப் பிரிவுப் பொலி ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களைக் கடந்த 2 மாதங்களில் நடுக்கடலில் இவ்வாறு தாக்குவது இரண் டாவது முறையாகும். முன்னதாக 25 படகுகளைச்சற்றிவளைத்து தாக்கியதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்,
"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் திட்டினர் எனக் கூறினர். மீண்டும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளமையால் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நன்றி:-உதயன்

Friday, August 29, 2008

கருணை மனு!!!

உங்களை விட்டால் எங்களுக்கு ஆர் இருக்கினம், புலம்பெயர்தமிழரே.......

Wednesday, May 28, 2008

உயிரம்புகள் திரைப்பட காட்சிகள்.

உயிரம்புகள் திரைப்படத்தில் சில காட்சிகளை இங்கு பாருங்கள்.


Wednesday, May 07, 2008

இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்!!!

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.

புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்றார்.

``சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் விஜயகாந்த்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

தகவல் பீபீசி தமிழோசை.

Tuesday, May 06, 2008

போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம்! உண்மைகளை மறைக்க முயல வேண்டாம்!! முதல்வருக்கு வேண்டுகோள்!!!

- பழ. நெடுமாறன்

தமிழக சட்டமன்றத்தில் இலங்கை இனப் பிரச்னை குறித்து பா. ம. க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளி களுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்பதுதான்.

அந்தப் போராளிக் குழுக்கள் ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒற்றுமையோடு இலங்கையிலேயே நடை பெறுகிற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும். தமிழர்களுக்குள்ள உரிமைகளை பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும். ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும். ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலேதான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள். வெட்டப்பட்டார்கள். சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. இப்படிப் பல போராளிகள் அவர்களுக் குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகள் எல்லாம் தான் இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் எல்லா இடங்களிலும் வெற்றிப் பெற்றிருக்கும் போது இந்த சின்னஞ்சிறு நாடான இலங்கையிலே வலுவிழந்ததற்கு காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாததுதான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம். ஆனால் இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை.’ - என்று கூறியுள்ளார்

சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் தமிழர்கள் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய தீர்மானமாகும். ஆனால் இந்த தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மையில் வருந்தத்தக்கவையாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அந்தப் போராட்டத்திற்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை மறைத்து நியாயப்படுத்தும் விதத்திலும் அவருடைய கருத்துக்கள் அமைந்துவிட்டன. வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி முயலுகிறார்.

தமிழீழப் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயலாற்றாததால்தான் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன என முதலமைச்சர் கூறியுள்ள கருத்து சரியானதுதானா? அந்தக் கூற்றில் சிறிதளவேனும் உண்மை உள்ளதா?

1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத்தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ. பி. ஆர். எல். எப். இயக்கத்தலைவர் பத்மநாபா, ஈரோஸ் இயக்கத்தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்று கூடிப் பேசி கீழ்க்கண்ட கூட்டறிக்கையை வெளியிட்டார்கள்.

‘புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையைத் தழுவி களத்தில் போராடும் இந்த நான்கு விடுதலை இயக்கங்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டமை எமது விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். ஈழத்தமிழரின் சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ள இந்நிகழ்ச்சி புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வழிகோலியுள்ளது. இராணுவ பயங்கரவாத அட்டூழியங்களையும், இனக் கொலையையும் எதிர் நோக்கி தாங்கொணாத் துன்பத்தை அனுபவித்து வரும் மக்களுக்கு எமது விடுதலை அணிகள் ஒன்றுபட்ட செய்தி பெரு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதோடு அவர்களது ஆன்ம உறுதியையும் விடுதலை உணர்வையும் பலப்படுத்தும் என்றே கருதுகிறோம்.

இந்த நான்கு இயக்கங்களின் கூட்டமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணி கீழ்க்கண்ட அரசியல் ரீதியான அடிப்படை கொள்கைகளில் ஒன்றுபட்டு செயல்பட தீர்மானித்துள்ளது.

1. சிங்கள ஆதிக்கத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வென்றெடுத்தல்.

2. இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற தனி அரசைத் தவிர்த்த வேறு எந்த குறைந்த பட்ச சமரசத் திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்து பட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகு ஜன ஆயுதப் போராட்டத்தை எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புதல்.

5. உலக ஏகாதிபத்திய நவ காலனித்துவ பிடியிலிருந்து எமது தேசத்தை பூரணமாக விடுவித்து அணி சேராக் கொள்கையை கடைப்பிடித்தல்.

தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தப்பட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முக்கிய அரசியல் பிரச்னைகள் குறித்து ஒன்று கூடி கலந்தாலோசித்து முடிவெடுப்பதெனவும் சிங்கள அரசப் படைகளுக்கு எதிரான எமது ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை ஒன்றுபடுத்திச் செயல்படுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

எமது இந்த ஒருமைப்பாடு விரிவுப்பட்டு வலுப்பெற ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு எமது மக்களின் விடுதலையில் அபிமானம் கொண்ட சகல தமிழ் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.’

போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை கண்டு தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு பிரச்னைகளில் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டன.

1985-ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பூட்டான் தலைநகரான திம்புவில் இந்திய அரசின் முயற்சியின் பேரில் கூட்டு மாநாடு ஒன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மேற்கண்ட நான்கு இயக்கங்கள் மட்டுமல்ல, மற்றொரு போராளி இயக்கமான பிளாட் இயக்கமும், ஜனநாயக அரசியல் இயக்கமான தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து நின்று குறைந்த பட்சத் திட்டமொன்றினை திம்பு மாநாட்டில் அளித்தன. சிங்கள அரசு பிரதிநிதிகள் இதை ஏற்க மறுத்தனர். இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி தமிழர் பிரதிநிதிகளை சிங்கள அரசுடன் இணக்கமாகப் போகுமாறு வெளிப்படையாகவே நிர்ப்பந்தித்தார்.

திம்பு மாநாட்டில் சமரச முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கைத் தமிழர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்து தமிழர் பிரதிநிதிகள் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

அனைத்துப் போராளி இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதை கண்டு வெகுண்டெழுந்த இந்திய அரசின் வெளியுறவுத் துறைச் சொலாளர் ரொமேஷ் பண்டாரி அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்தார். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், டெலோ இயக்கத்தைச் சேர்ந்த சத்தியேந்திரா மற்றும் சந்திரகாசன் ஆகிய மூவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த இந்திய அரசு ஆணைப் பிறப்பித்தது.

இந்திய அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் தி. மு. க. தலைவர் கருணாநிதி தலைமையில் இயங்கிய டெசோ அமைப்பு போராட முடிவு செய்தது. இந்த அமைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் நண்பர் கி. வீரமணி அவர்களும் நானும் அங்கம் வகித்தோம். நாங்கள் மூவரும் ஒன்றுகூடித்தான் தமிழகமெங்கும் போராட்டம் நடத்துவதென முடிவு செய்தோம். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக நாடு கடத்தும் உத்தரவை இந்திய அரசு இரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அனைத்துப் போராளிக் குழுக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து செயல் படுவதற்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராகத்தான் அன்றைக்கு டெசோ அமைப்பு போராடியது என்பதை அன்றைய டெசோ அமைப்பின் தலைவரும் இன்றைய முதல்வருமான கருணாநிதி அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக தற்காலிகமாக இந்திய அரசு பின் வாங்கிய போதிலும் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. போராளிக் குழுக்களை பிளவுப் படுத்தும் சதித்திட்டத்தை இந்திய ரா உளவுத்துறை வகுத்தது.

1986-ஆம் ஆண்டு மதுரையில் மே 5-ஆம் தேதி அன்று டெசோ அமைப்பின் சார்பில் தமிழீழ ஆதரவாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக நான் இருந்தேன். இம்மாநாட்டிற்கு தி. மு. க. தலைவர் கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். ஆந்திர முதல்வர் என். டி. ராமாராவ், பா. ஜ. க தலைவர் வாஜ்பாய், லோக்தளத் தலைவர் பகுகுணா உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிலும் அனைத்துப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆனால் மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும் 1985-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது எனக்குப் பாதுகாப்பாக வந்த படைக்குத் தலைமை தாங்கியவருமான காப்டன் லிங்கம் டெலோ இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இதைத் தொடர்ந்து டெலோ இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே மோதல்கள் நடந்தன.

இது குறித்து 1986-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் தேதி சென்னையில் பிரபாகரன் அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது இந்த மோதல்களின் பின்னணி குறித்து எனக்கு விரிவாகக் கூறினார்.

‘லிங்கத்தின் சாவுச் செய்தி வந்த போது நானே கொதிப்படைந்தேன். தளத்திலிருந்த எங்கள் தோழர்கள் எவ்வளவு பெரிய கொதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். தங்கள் படையின் காப்டன் லிங்கத்தை படுகொலை செய்ததை கண்டிக்கவும் கைதான இரு வீரர்களை விடுவிக்கவும் அவர்கள் உடனடித் தாக்குதல் தொடங்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. ஏனெனில் லிங்கத்தின் படுகொலையும் எங்களின் முக்கியத் தோழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்ச்சியாக நாங்கள் கருதவில்லை. ஆழமான சதியின் விளைவாக இவை நிகழ்ந்தன என்று கருதுகிறோம். ரா உளவு அமைப்பின் தூண்டுதலின் பேரிலேயே சிறீ சபாரத்தினம் இங்கே வந்து முகாமிட்டு இருக்கிறார் என்பதும் எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.’

டெலோ இயக்கத்தைத் தொடர்ந்து 1986-ஆம் ஆண்டின் இறுதியில் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கமும் ‘ரா’வின் வலையில் விழுந்து விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. எனவே வேறு வழியில்லாத நிலையில் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத்தினரிடமிருந்த ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் களையப்பட்டன. ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத்தை விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினர்.

இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தான பிறகும் கூட தனது சீர்குலைவு வேலைகளை ரா நிறுத்தவில்லை. ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக காட்சித்தரும் வேளையில் அவர்களை ஒழித்துக்கட்ட போட்டி இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய இராணுவ விமானங்களின் மூலம் இலங்கை கொண்டு வந்து இறக்கியது. அவர்களில் முக்கியமானவர் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத் தளபதியான டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா ரா உளவுத் துறையின் உதவியுடன் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு பிற போராளி இயக்கங்களை ரா உளவுத் துறை பயன்படுத்தி வருவது குறித்து மனம் வருந்திய பிரபாகரன் அவர்கள் தங்களோடு இணைந்து போராட முன் வருமாறு பிற போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அறிக்கை ஒன்றினை 25-9-1987 அன்று வெளியிட்டார்.

‘அன்றும் சரி இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்த சக்தி பின்னணியிலிருந்து இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன். இந்திய அரசின் அங்கமாக உள்ள ரா உளவுத் துறையின் நாசகார நடவடிக்கைகள் குறித்து தமிழீழ மக்கள் நன்கு அறிவார்கள். தமிழீழ இலட்சியத்தில் உறுதிப்பாடும் இயக்கக் கட்டுப்பாடும் உடைய ஒரு தேசிய இயக்கம் தோன்றுவதை இந்த சக்தி அன்றிலிருந்து எதிர்த்து வருகிறது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் வளர்வது கண்டு அஞ்சிய இந்திய உளவுத் துறை ஏனைய அமைப்புகளை வளர்த்துவிட்டு இயக்க மோதல்களை உருவாக்கி எம்மை அழிக்க முயன்றது. ஆனால் மக்கள் பலம் எமக்கு பக்கபலமாக இருப்பதால் எம்மை அழிக்க முடியவில்லை. தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த அளப்பறிய இழப்பிற்கு இந்திய உளவுத்துறை மட்டும் காரணமல்ல. இந்த உளவுத் துறையின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு பலியாகிய ஏனைய அமைப்புகளின் தலைமைகளும் இதற்கு காரணமாவர். பதவி வெறிப் பிடித்த அந்த தலைமைகள் இந்திய உளவுத் துறையின் அய்ந்தாம் படையாக இயங்கினார்கள். இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.’ – என்று கூறிய பிரபாகரன் பிற இயக்கங்களில் உள்ள தோழர்களை இலட்சியப் போராட்டத்தில் இணைய முன் வருமாறு அன்பழைப்பும் விடுத்தார்.

மெற்கண்டவை எல்லாம் வரலாற்று ரீதியான ஆதாரப் பூர்வமான உண்மைகளாகும். போராளிக் குழுக் களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களைத் தூண்டிய ரா உளவுத் துறை தனது முயற்சியில் தோல்வி கண்டது. பிற போராளி இயக்கங்கள் புலிகளிடம் மோதி தோற்றப் பிறகு புலிகள் இயக்கத்தையே பிளவு படுத்தவும் ரா உளவுத் துறை முயன்றது.

1992-ஆம் ஆண்டு மாத்தையா, 2004-ஆம் ஆண்டில் கருணா ஆகியோர் ரா உளவுத் துறையின் வலையில் வீழ்ந்து புலிகள் இயக்கத்தை பிளவுப் படுத்த முயற்சி செய்து, அம்முயற்சியில் படு தோல்வி அடைந்தனர்.

ஆக, தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும், பிளவுப்படுத்தி பலவீனப்படுத்தவும் இந்திய அரசின் ரா உளவுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஆதாரப் பூர்வமான உண்மைகளாகும்.

இந்த சூழ்நிலையிலும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற உண்மையாகும்.

அண்மையில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு 400 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இந்த பணம் ஆயுதம் வாங்கவே பயன்படும் என்பதும் அந்த ஆயுதங்கள் தமிழர்களை கொன்று குவிக்கவே பயன்படும் என்பதும். எல்லோரும் அறிந்த உண்மைகளாகும்.

ஆனால் மேற்கண்ட உண்மைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து இந்திய அரசின் தவறான செயல்களை கண்டிப்பதற்கு பதில் அந்த அரசுக்கு வக்காலத்து வாங்கி போராளிக் குழுக்களிடையே உள்ள மோதல்தான் இந்திய அரசின் போக்கிற்கு காரணம் என நிறுவவதில் முதலமைச்சர் கருணாநிதி தனது பேச்சு வன்மையைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்திய அரசின் தகாத செயல்களை சுட்டிக்காட்டி அதனை பகைத்துக் கொள்ள அவர் விரும்பாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் முற்றிலும் பொய்யான செய்திகளை கூறுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

இலங்கை இனப்பிரச்னையை தீர்க்க இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தைத் தொடங்க இந்திய அரசு முன் வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலக்கட்டத்தில் சிங்கள அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாய்களை இந்திய அரசு வழங்கயிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. சட்டமன்ற தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு உண்டு. இந்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் முன் மொழிந்த தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, அத்தீர்மானத்தை கொஞ்சமும் மதிக்க இந்திய அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கும் இந்த செயல் தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல தமிழக சட்டமன்றத்தையே அலட்சியப் படுத்தி அவமானப் படுத்தும் செயலாகும்.

-தென் செய்தி

Thursday, May 01, 2008

இந்தியப் புலனாய்வுதுறையினரால், ஈழத்தமிழர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கிற தமிழகத்தலைவர்களை என்கெளவுண்டரில போட்டுத்தள்ளத் திட்டமா?

தமிழகத் தலைவர்களை கடத்தி புலிகள் மீது பழிபோட கருணா குழு தமிழகத்தில் ஊடுருவல்: இந்திய அரசு "திடீர்" எச்சரிக்கை!!!

பழிபோடுவதற்காக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவான கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் "தினத்தந்தி" நாளேட்டில் இன்று வியாழக்கிழமை (01.05.08) வெளியாகியுள்ள செய்தி:

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவ முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்தப் போரில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப் புலிகளும் ஊடுருவ வாய்ப்புக்கள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தத் தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப் புலிகள் மீது இந்தப் பழியைப் போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கைத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு சுற்றுக்காவல் பணியில் காவல்துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், விடுதிகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 24, 2008

முகமாலை வெற்றி.