Tuesday, September 26, 2006

கருனாநிதியின் சால்ஜாப்பு!!!

தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.

அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

அவர்கள் முயற்சித்தால் சந்திப்பீர்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது கேள்வி கேள்வியாகவே இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து இதற்கு பதில் இல்லை என்றார் கருணாநிதி.
நன்றி>புதினம்,

கோளைத் தமிழா உனக்கு ஈழம் வேண்டுமா?

பெரிதாகபார்க்க படத்தின்மீது அழுத்தவும்.

தமிழீழ போராட்டத்தையும் தமிழ்மக்களையும் கொச்சைப்படுத்தி கேவலமாக யாழ் நகரின் பல இடங்களிலும் தேசிய வீரர் படை என்ற பெயரில் இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் பெண்களை மிகவும் கேவலமாகவும் தமிழ் மக்களை ஆத்திரமூட்டக்கூடியவகையிலும் ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரங்களால் மக்கள் பெரும் விசனமடைந்துள்ளனர்.
நன்றி>நெருடல்.

விசாரணைகளில் ஈடுபாட்டுடன் அரசாங்கம் செயற்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை.
சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல.
ஏனெனில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்தினது நம்பிக்கையும் பொறுமையும் இழந்து வருகிறது. மூதூர் படுகொலைகள் போன்றவை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது சர்வதேச சமூகத்தின் கடும் அதிருப்திக்கு முகம் கொடுக்க நேரிடும்.
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுக்கின்றனர். எந்தத் தரப்பும் வன்முறையை நிறுத்துவதாக தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தினது நிலைமை மிக மோசமாக உள்ளது என்றார் ஷோல்வ்பெர்க்.

நன்றி<புதினம்.

Monday, September 25, 2006

கூர் மழுங்கிய ஆயுதத்தை கையிலெடுக்கும் இந்தியா.

துணை இராணுவக் குழு டக்ளசை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறிமுகம் செய்து வைக்கும் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்துவிட்டதாக இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.

இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுடில்லியில் முகாமிட்டு, அவரின் தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் சென்னைக்கும் திரும்பியுள்ளனர்.

அதேவேளையில் தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் வேறு சிலர் புதுடில்லி வந்திருப்பதாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் வழியாக அறிய முடிகின்றது.
தினமணி நாளேடு தமிழர் தலைவாகளான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் புதுடில்லிக்கு வந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசின் தெளிவற்ற கொள்கையையும் தடுமாற்றத்தையும் குறிப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அத்துடன் இலங்கை இனப்பிரச்சனையில் நீண்டகாலமாக மௌனம் காத்துவந்த இந்திய அரசு வழமைபோல் குட்டையை குழப்புகின்ற வேலையை தொடர்கின்றதோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கின்றது.

ஏனெனில் சிறிலங்கா அரசு வெறுப்படையும் வகையில் இந்திய அரசு தனது அழுத்தத்தை பிரயோகிக்கின்றது என்ற தோற்றப்பாடே அண்மைக்காலமாக தென்பட்டு வந்தது.
அதனடிப்படையில்தான் மகிந்தர்களும் பண்டாரநாயக்கர்களும் ஏன் அனைத்து சிங்கள ஊடகங்களும் இந்தியாவைச் சீண்டி பிறாண்டிக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வரவழைத்திருந்தது இந்தியா.

இச்செய்திகள் வெளிவந்தபோதே இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் சுறுசுறுப்பான செயற்பாடுகளில் இறங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் எனப்படுவோர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான புதுடில்லியின் மாற்றம் கண்டு குழம்பி விட்டனர் போல் தெரிகின்றது.

இந்நிலையில் புதுடில்லியில் இலங்கை இனப்பிரச்சனை ஆலோசனைகள் மீளத் தீவிரமடையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் கொள்கை வகுப்பாளர்கள் என்றழைப்போரிடம் இந்திய அரசாங்கம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் என்ற பட்டியலில் பல நிறுவனங்கள் புதுடில்லியில் முகாமிட்டு தங்களது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், வெளிவிவகாரத்துறையினர், ஊடகவியலாளர்கள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் கூடும் மையங்களாக இவை உள்ளன.

அண்மையில் இவ்வகையான கொள்கை வகுப்புக்குழுக்கள் என்றழைக்கப்படுவோரின் கூட்டத்தில் அரசியல் அரங்கில் காணாமல் போயிருந்த வரதராஜப்பெருமாளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் என்.என்.ஜா, லெப்.ஜெனரல் வி.கே.சிங் மற்றும் நாராயணசுவாமி ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இதில் என்.என்.ஜா கடும் போக்காளர். இந்தியாவின் "பிரதான கொள்கை வகுப்பாளர்"(!) சுப்பிரமணியசுவாமி, "சிங்கள ரத்னா" இந்து ராம் மற்றும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கூட்டணியில் வலம் வருகின்றவர்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்ட இந்த கொள்கை வகுப்புக்குழுக்கள்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு புதுடில்லியிலே சுப்பிரமணியசுவாமியின் தலைமையில் மாநாடும் போட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தங்கள் ஆலோசனைக்கு கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அறியமுடிகின்றது.

- இலங்கை இனப்பிரச்சனையின் பின்புலம்
- ஆயுதக்குழுக்கள் உருவாக்கம் ஏன்?
- இந்திய- இலங்கை ஒப்பந்தம் மீதான விமர்சனங்கள்
- சந்திரிகா காலத்து அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள்
- தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமை
- இந்தியாவின் பங்களிப்பு
- கிழக்கு மாகாண நிலைமை
- தமிழீழக் கோரிக்கையில் விடுதலைப் புலிகள் உறுதியாக உள்ளமை
- அகதிகள் பிரச்சனை
- சிறிலங்காவுக்கான இராணுவ உதவி
- சிறிலங்காவின் இரு பிரதான கட்சிகளுடன் இந்தியாவின் உறவு
என்றெல்லாம் விவாதித்து இறுதியில்
"ஐக்கிய இலங்கைக்குள் பேச்சு மூலமாக இறுதித் தீர்வு- அனைத்து இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்ற கொள்கை முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.
புதுடில்லியில் கொள்கை வகுப்பாளர்கள் எனப்படுவோர் இப்படியாக செயற்படும் நிலையில்தான் கியூபாவில் சிறிலங்கா அதிபர் மகிந்தவும் முக்கயமான ஒரு பணியை ஆற்றிவிட்டு வந்திருக்கின்றார்.

மேலே உள்ள இந்தப் படத்தை பார்த்தால் அவர் ஆற்றிய பணி புரியும்.


அமைதியை உருவாக்க இராணுவ வலுச் சமநிலையை விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர். அமைதி முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

பேச்சும் யுத்தமும் யுத்தமும் பேச்சுமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் மற்றும் இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் இன்னமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது செத்துவிட்டதாக அறிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது.

ஆனால் நீண்டகாலாமாக இந்திய உளவு அமைப்பின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும்- கடந்த 15 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழீழ அரசியலில் எதுவித தொடர்புமற்று ஆனால் பெயருக்கு சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஒரு துணை இராணுவக்குழுவை நடமாட விட்டுள்ள வரதராஜப்பெருமாள் புதுடில்லியில் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

அல்லைப்பிட்டியில் நடந்தேறியது போன்று அப்பாவி பொதுமக்களை- புத்திஜீவிகளை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தொடர்ச்சியாக கொன்று குவித்து வரும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவை மகிந்தர் இந்தியப் பிரதமருக்கு அறிமுகம் செய்தது தற்செயலானதா?

தற்போது தினமணி நாளேடு குறிப்பிடும் தமிழர் தலைவர்களான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் போன்ற வகையறாக்கள் புதுடில்லி அழைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

இவ்வகையானோரை முன்னிலைப்படுத்துவதில் கொள்கை வகுப்புக் குழப்பவாதக் குழுக்கள் முயற்சியாலும் அழுத்தத்தாலும் இந்திய அரசு தடுமாறுகின்றதா?

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழத் தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என்ற இந்திய பிரதமரின் முடிவிற்கும் இவைக்கும் தொடர்பிருக்கும் என்ற சந்தேகமே ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி இருக்கின்றது.

பல தடவைகள் தோற்றுப்போன இந்திய கொள்கை வகுப்பாளரின் திட்ட வரைவையே மீளவும் இந்திய அரசு ஏற்கப் போகின்றதா?
நன்றி>புதினம்.

Sunday, September 24, 2006

கருனாநிதியின் கபடத்தனம்.

இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக புதுடில்லியில் கடந்த சில தினங்களாகக் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அவரிடம் கையளிப்பதற்கென்று வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்கத்தின் உயரதிகாரிகளிடம் கையளித்து விட்டு நேற்று சனிக்கிழமை ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறது.
அணிசேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஹவானாவிலிருந்து நாடு திரும்பியதும் கலாநிதி சிங், இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட தூதுக்குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுக்கப்படாதிருந்திருந்தால், அவர்கள் புதுடில்லியில் இத்தனை நாட்கள் தங்கியிருந்திருக்க மாட்டார்கள்.

கலாநிதி சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கப்போவதில்லை என்று முன்கூட்டியே திட்டவட்டமான சமிக்ஞை எதுவும் காட்டப்பட்டதாகவும் இல்லை. இந்நிலையில், இறுதித் தருணத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அவர்களைச் சந்திக்க மறுத்ததன் மூலம் அல்லது சந்திப்பதைத் தவிர்த்ததன் மூலம் இந்தியப் பிரதமர் இலங்கையில் மீண்டும் போருக்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தி என்ன? முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மேயில் கொலை செய்யப்பட்ட மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் தரப்பிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருந்த கசப்பு நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து புதியதொரு அத்தியாயத்தைத் திறக்கும் நம்பிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவினர் புதுடில்லியில் நாட்களைச் செலவிட்டனர் . இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட், புதிய வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் இறுதியில் கலாநிதி சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதற்கான சாத்தியமில்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிய வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்திக்காமல் விட்டதன் விளைவாக இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உடனடியாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலேயே நாம் கரிசனையுடன் நோக்க வேண்டியிருக்கிறது. உண்மையில், சம்பந்தன் குழுவினர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியதால் இலங்கை அரசாங்கத் தரப்பினரும் பேரினவாதச் சக்திகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. அண்மைக் காலத்தில் தீவிரமடைந்த மோதல்களின் பின்னணியில் இலங்கை நெருக்கடி தொடர்பில் புதுடில்லியின் அணுகுமுறைகளில் காணப்படக் கூடியதாயிருக்கும் ஒப்பீட்டளவிலான சிறு மாற்றம் அரசாங்கத்துக்கோ அதன் நேச சக்திகளான பேரினவாதக் கட்சிகளுக்கோ மகிழ்ச்சியைத் தரவில்லை என்பது வெளிப்படையானது. இந்நிலையில், வடக்கு, கிழக்கில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திக்காமல் விட்டதன் மூலம் கலாநிதி சிங் போரை முழுவீச்சில் முன்னெடுக்க வேண்டுமென்று குரலெழுப்பும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு மறைமுகமான உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறார் என்றே கூற வேண்டியிருக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியப் பிரதமரின் செயற்பாடு பெரும் கவலையைக் கொடுத்திருக்கிறது.

புதுடில்லி நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கக்கூடிய இன்னொரு அம்சத்தையும் நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. பல வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஒருவித உறங்குநிலையிலிருந்த தமிழ்நாடு மாநிலம் அண்மைக்கால வன்முறைகள் காரணமாக விழித்தெழ ஆரம்பித்தது. தமிழக அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு புதுடில்லி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குரலெழுப்ப ஆரம்பித்தன. ஆனால், தமிழக திராவிட இயக்கக் கட்சிகளிடையேயான அரசியல் பகைமை இது விடயத்திலும் அதன் கைவரிசையைக் காண்பிக்கத் தவறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதை இந்தியப் பிரதமர் தவிர்த்ததற்கு முன்னதாக அவர்களை தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி சந்திக்க மறுத்திருந்தார் என்பதை முதலில் நோக்க வேண்டும். கருணாநிதியின் அரசியல் எதிரியாக இருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோவின் மூலமாக இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சியெடுத்தனர். இது இயல்பாகவே கருணாநிதியை ஆத்திரப்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவரின் இந்த ஆத்திரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் கலாநிதி சிங்கிற்கும் இடை யிலான சந்திப்பை அசாத்தியமாக்கிய காரணிகளில் முக்கிய மானது என்றும் நம்ப இடமிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்களுக்கிடையிலான அரசியல் குரோதத்தைக் கைவிட்டு, ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத பட்சத்தில் மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் உருப்படியான நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை என்பதற்கு தற்போதைய நிகழ்வுகள் தெளிவான சான்றாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழர்கள் இன்னலுக்குள்ளாவதை தமிழன் கண்டிப்பது தவறு என்றால், அத்தவறை தமிழன் தொடர்ந்து செய்வான் என்றும் இலங்கைத் தமிழர்களின் இன்னல் போக்குவதில் தமிழகக் கட்சிகளிடையே போட்டி வேண்டாம் என்றும் அண்மையில் சட்டசபையில் கருணாநிதி குறிப்பிட்டிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதே கருணாநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க மறுத்ததற்கு என்ன காரணம் கூறப் போகிறார்?
உண்மையில், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடி தொடர்பிலான அதன் தற்போதைய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றத்தைச் செய்யாவிட்டால், இலங்கையில் அமைதியை தோற்றுவிப்பதற்கு எந்தவிதமான உருப்படியான பங்களிப்பையும் செய்வதற்கில்லை என்பதே எமது அபிப்பிராயம். இத்தகைய மாற்றத்தைச் செய்வதென்பது ஒன்றும் அசாத்தியமானதுமல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தூதுக் குழுவினர் தங்களது நிலைப்பாடுகளை விளக்கிக் கூறுவதற்கு இந்தியப் பிரதமர் சாத்தியமானளவு விரைவாக சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இலங்கைத் தமிழ் மக்கள் இந்திய அரசாங்கத்தின் அணுகு முறையில் ஏற்படவேண்டுமென எதிர்பார்க்கும் மாற்றத்தின் ஆரம்பமாக இந்தச் சந்திப்பு அமையட்டும்!


நன்றி>தினக்குரல்

தென்னாபிரிக்காவில் அமைதிக்கான பிரார்தனை நிகழ்வு.




தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் அமைதிக்கான பிரார்த்தனை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.09.06) டேர்பன் நகரில் உள்ள அருட்பா கழகத்தில் நடைபெற்றது.
இப்பிரார்த்தனை நிகழ்வானது சிறிலங்கா அரசாங்கத்தால் அடக்கி ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் அவலநிலையை நினைவுகூர்ந்தும் சிறிலங்கா விமானப்படையால் கடந்த மாதம் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை இல்ல மாணவிகளை நினைவுகூர்ந்தும் நடத்தப்பட்டது.
வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதை வெளிப்படுத்தி, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது முடிவிற்கு வரவேண்டியும் போர் நிகழும் உலகின் ஏனைய பகுதிகளில் பாதிப்புற்ற மக்களுக்காகவும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தென்னாபிரிக்க இஸ்லாமிய சபையைச் சேர்ந்த என் கான், குறொப்டினி பள்ளிவாசலைச் சேர்ந்த மௌலானா சாயிக் இஸ்மாயில், அருட்தந்தை டீனா முத்தன் மற்றும் அருட்பாக் கழகத்தைச் சேர்ந்த திருமதி கே.சோதிநாதன் ஆகியோர் பிரார்த்தனைகளை நடத்தினர்.
இந்நிகழ்வில் டேர்பன் நகர துணை மேயர் லோகநாதன் நாயுடு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றியும் 61 சிறுமிகள் சிறிலங்கா விமானப்படையால் கொல்லப்பட்டமை பற்றியும் 17 உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றியும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மோசமான இந்நிலையை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கத்திற்குக் காத்திரமாக அமைதி வழியில் தெரிவிக்க வேண்டும் எனவும் ஈழத்தில் பாரதூரமான அளவிற்குச் சென்றுள்ள வன்முறைகள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சற்ஸ்வேத்தில் இருந்து சென்னை வரையுள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இனப்பிரச்சினைக்கு அமைதி வழித்தீர்வைக் கொண்டு வருவதற்காக ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிவதாகப் பிரார்த்தனையில் கலந்துகொண்டோருக்குக் கூறி அவர் தனது உரையை நிறைவுசெய்தார்.
நன்றி>புதினம்

இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் விவகாரத்திலும் தமிழக அரசியல்.

தமிழக அரசியல் நுழையாத இடமே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் பிரதமரை சந்திக்க டில்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் விவகாரத்திலும் தமிழக அரசியல் புகுந்து விளையாடியது. விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான இந்த எம்.பி.,க்கள் இந்திய அதிகாரிகளை சந்திக்க காரணமாகயிருந்தவர் ம.தி.மு.க., தலைவர் வைகோ. எப்படியாவது இந்த எம்.பி.,க்களை நீங்கள் சந்தியுங்கள். அப்போது தான் அவர்களுடைய அரசியல் நிலைமை உங்களுக்குத் தெரியவரும் என்று பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டதால் பிரதமர் சற்று தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் சென்னையில் இந்த எம்.பி.,க்களை சந்திக்க தி.மு.க., தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். "பிரதமரைச் சந்தித்து விட்டு வாருங்கள். அப்போது உங்களை சந்திக்கிறேன்' என்று சொல்லிவிட்டாராம். டில்லிக்கு வந்த எம்.பி.,க்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்தனர். பிரதமருடன் சந்திப்பு நிச்சயம் என்று இவர்களுக்கு இந்திய அரசிலிருந்து வாக்குறுதி அளிக்கப்பட்டும், பிரதமர் சந்திப்பு நடைபெறவில்லை. வைகோ எங்கே பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவாரோ என்ற லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாகவே இந்த சந்திப்பை நிறுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இலங்கை எம்.பி.,க்கள் மத்தியிலும் அரசியல் விளையாடுகிறது. ஆறு எம்.பி.,க்கள் இந்தியா வந்தனர். ஐந்து பேர் மட்டுமே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நாராயணனைச் சந்தித்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாவது எம்.பி.,யான சிவாஜிலிங்கம் இந்தக் குழுவிலிருந்து விலக்கியே வைக்கப் பட்டார். தன் சொந்த செலவில் டில்லிக்கு வந்த சிவாஜிலிங்கம், கடந்த இரண்டு வருடங்களாக இந்த சந்திப்பிற்கு முயற்சி எடுத்து வந்தவர். ஆனால், கடைசி நேரத்தில் அவர் கழற்றிவிடப்பட்டார். இந்திய அரசு ஐந்து எம்.பி.,க்களை மட்டுமே அனுமதித்துள்ளது என்று மற்ற எம்.பி.,க்கள் சொல்ல, அவர் தனியாக சென்னைக்கு திரும்பிவிட்டார்.
Thanks:dinamalar

யாழ்பாணத்தில் பட்டினி சாவு.

பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர்
பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.
அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் அந்தக் குடும்பஸ்தரைத் துரத்திப்பிடித்தனர்.
பசியின் கொடுமையால் ஓடக்கூட முடியாது நின்ற அக்குடும்பஸ்தர் தானும் மனைவி பிள்ளைகள் எவருமே நான்கு நாட்களாக சாப்பிடவில்லை எனவும் பசிக்கொடுமை தாங்கமுடியாததால் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பொறுக்க முடியாது தான் இவ்வாறு செய்ததாகவும் விம்மி அழுது கூறியுள்ளார்.
இதனையடுத்து திருடனென நினைத்து அவரைப் பிடித்தவர்கள் உடனடியாகவே அவரை விட்டுவிட்டனர்.
இவ்வாறு வெளியே வராத பல்வேறு சம்பவங்கள் குடாநாட்டில் தினமும் இடம்பெற்றுவருகின்றன.
பசிக்கொடுமை தாங்காது தொழிலுமின்றி உணவுப் பொருட்களையும் பெறமுடியாது வாடும் மக்கள் தவறான வழிகளை நாடிச் செல்வதும் இங்கு அதிகரித்து வருகின்றது.
பசிக்கொடுமை தாங்காது குடும்பத்துடன் ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவமும் வடமராட்சிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.
நன்றி>தினக்குரல்.

யாழ் மக்களை சாகடிக்கவே யாழ். ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது!!!

குண்டுகளை வீசி தமிழ் மக்களைக் கொல்வதற்கு அப்பால் ஏ-9 வீதியை மூடியதன் மூலமும் தமிழ் மக்களை சாகடிக்க சிறிலங்கா அரசாங்கம் எண்ணுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான்
அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்குமா என்பது குறித்து எனக்கு உறுதியான சந்தேகம் உள்ளது.
நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயாராக இருப்பதாக நோர்வே அனுசரணையாளர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்முறை தெரிவித்துள்ளனர். எரிக் சொல்ஹெய்ம் மற்றும் யசூகி அகாசி ஆகியோரது அறிக்கைகளின்படி சிறிலங்கா அரசாங்கமும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டதாக இருந்தது. ஆனால் எரிக் சொல்ஹெய்மின் அறிக்கை வெளியான பின் சிறிலங்கா அரசியல்வாதிகளிடமிருந்து பல்வேறு பதில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
சிறிலங்கா அரசாங்கத்தை நிபந்தனைகளைக் கைவிடுமாறு யாரும் கூற முடியாது என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்புப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நிபந்தனையற்ற பேச்சுக்கள் நடைபெறும் என்று இணைத் தலைமைத் தலைமை நாடுகள் வெளியிட்ட அறிக்கையையும் நிராகரித்துள்ளார்.
வழக்கம்போல் மகிந்த ராஜபக்ச தனது வாயை இறுக்கமாக மூடிக்கொண்டுள்ளார். மகிந்தவின் அரசாங்கம் நடத்தும் முறையே யாரும் எதனையும் செய்து கொண்டே இருக்கலாம். தவறாக இருந்தாலும் அமைதி காப்பது என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.
இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஒருபக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் கொண்ட குழுவினருடன் வெளிநாட்டுப் பயணத்தை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். மக்களுக்கான பாதிப்புகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் நிபந்தனைகளை கைவிட்டு விட்டுப் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையுடன் எமக்கு கடந்த 6 மாத காலமாக எதுவித தொடர்பும் இல்லை. இருப்பினும் ஊடகச் செய்திகளின் படி எதுவித முன் நிபந்தனைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை எவருமே ஏற்கமாட்டார்கள்.
எந்த ஒரு தமிழ் பேசுகிற தமிழரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
வேடிக்கைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தவில்லை. தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகத்தான் ஆயுதமேந்தினர். தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை எந்த ஒரு தமிழனும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.
சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல முதலில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் கற்பனையான செய்திகளைத்தான் பேசுகிறார். பொத்துவில் படுகொலை தொடர்பில்கூட தமிழீழ விடுதலைப் புலிகளைத்தான் அவர் குற்றம்சாட்டினார்.
பொத்துவிலுக்கு போய் மக்களின் கருத்தைக் கேட்கவேண்டும். ஆனால் அப்படியில்லாத ஒரு பேச்சாளர் இதான் இங்குள்ளார்.
கேகலியவோ ரட்ணசிறியோ வரவேண்டும் என்று புலிகள் கேட்கிறார்களா?

பேச்சுக்களுக்குச் செல்வது என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குழுவை அறிவிக்கின்றனர். மகிந்தவும் ஒரு குழுவை அறிவிக்கின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு ரட்ணசிறி விக்கிரமநாயக்கவோ கேகலிய ரம்புக்வெலவோதான் வரவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோருவதில்லை.
யாரை அனுப்ப வேண்டும் என்பது விடுதலைப் புலிகள் முடிவு செய்வர். கடந்த காலங்களைப் பார்த்தால், எந்த ஒரு பேச்சுவார்த்தையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நேரடியாக கலந்து கொண்டதில்லை. அவர் ஒரு குழுவை நியமிப்பார். அக்குழுவினருடன் தொடர்பில் இருப்பார். விவாதிப்பார்.
சர்வதேச பிரதிநிதிகளையும் ஊடகத்தாரையும் இரண்டொரு முறைதான் சந்தித்துள்ளனர். எங்களுடன் பல முறை சந்திப்புகளை நடாத்தியுள்ளார்.
பேச்சுக்களுக்குச் செல்லும்போது பிரபாகரன்தான் வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியாது. அரசியல்துறைப் பொறுப்பாளருடன் பேச்சு நடத்தலாம்.
வெளிநாட்டுப் படையை வரவழைத்தமைக்கு ஜே.வி.பி.தான் முதல் காரணம்
சிறிலங்காவின் வரலாற்றைப் பார்த்தால் முதலில் யார் சர்வதேச சமூகத்தை இந்த நாட்டுக்கு அழைத்தது என்பது தெரியும்.
1949 ஆம் ஆண்டு தொடக்கம் எத்தனையோ ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு செயற்படுத்தப்படாத நிலையில் தலையிடுமாறு நோர்வே தரப்பினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நோர்வே தரப்பினருடன் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சனையும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தமையால் ஐரோப்பிய ஒன்றியத்தினர் அல்லாத கண்காணிப்புக் குழுவினர் இருக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
ஆனால் பிரிகேடியர் விமல் வீரவன்ச மற்றும் அவரது மேஜர் ஜெனரல்கள்- யாரென்று சொல்ல விரும்பவில்லை அவர்களெல்லாம் சர்வதேச சமூகத்தை அழைத்தமை குறித்து பேசுகிறார்கள். பயங்கரவாதம் குறித்து பேசுகிறார்கள்.
1971ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை விமல் வீரவன்ச அறிய வேண்டும். பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க இரருந்தபோது இந்திய இராணுவம் இங்கே அழைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு வெளிநாட்டுப் படை வந்திறங்கியது அப்போதுதான். காரணம் என்னவெனில் விமல் வீரவன்ச குழுவினரால்தான்....பிரபகாரனால் அல்ல.
அதன் பின்னர் 1987ஆம் ஆண்டுதான் இந்திய அமைதிப்படை இங்கு வந்தது. அவருக்கு முன்னாள் இருந்த றோகண விஜெவீரவுக்கு இது நன்கு தெரியும். அப்போது விமல் வீரவன்ச மிகவும் இளவயதுக்காரராக இருந்திருக்கலாம்.
றோகண விஜெவீர மீது நாம் மதிப்பு வைக்கிறோம். தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை ஒப்புக்கொண்ட முதல் சிங்களத் தலைவ அவர். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அந்தப் பாதையிலிருந்து விலகிவிட்டனர்.

யாழ் அவலம்...

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய வெளிப்பாடாக இருந்தது ஏ-9 வீதி திறப்புதான். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு அப்போதைய அரசாங்கம் செயற்பட்டது.
இராணுவ நடவடிக்கை மூலமாக (ஜெயசிக்குறு) முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஏ-9 வீதியை திறக்க முயன்று என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். சிறிலங்கா இராணுவத் தரப்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் இரத்தகளரியின்றி ஏ-9 வீதியானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் திறக்கப்பட்டுவிட்டது.
தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஏ-9 வீதியை மூடியுள்ளது. ஏ-9 வீதியைத் திறப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று ஒரு மாத காலத்துக்கு முன்பே தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சரத்து 2.1-இல் ஏ-9 வீதி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்பற்ற தன்மையில் செயற்பட்டு மக்களை பாரிய துன்பத்திற்குள்ளாகியுள்ளது.
யாழில்,
ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ. 250
ஒரு கிலோ மாவின் விலை ரூ. 200
ஒரு லிற்றர் மண்ணெண்ணெய் விலை ரூ. 150
ஒரு லிற்றர் பெற்றோல் கிடைக்குமேயானால் ரூ. 500 என்ற நிலைமைதான் உள்ளது.
மருத்துவமனைகளில் பிராணவாயு கலன்களும் மருந்துகளும் பற்றாக்குறையான நிலையில் உள்ளன.
இதுவே யாழ்ப்பாணத்தின் உண்மை நிலை. ஏ-9 வீதியை மூடியிருப்பது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக மீறிய செயல்.
வடபகுதிக்குச் செல்ல முடியாமல் வவுனியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் தவிக்கின்றனர்.
ஏ-9 வீதியைத் திறக்காதிருப்பதானது தமிழ் மக்களை சாகடிக்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது.
குண்டு வீசி மக்களைக் கொல்வதற்கு அப்பால் இப்படியும் மக்களைக் கொல்கிறது சிறிலங்கா அரசாங்கம். மக்களின் வாழ்வுரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் இச்செயற்பாடானது பாரிய மனித உரிமை மீறலாகும்.
கொழும்பு நகரில் ஒவ்வொரு மூலைக்கு மூலையும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் வெள்ளை வான் குழுவினரால் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களில் இப்படியாக கடத்திக் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான ஆவணங்களை எம்மால் வெளியிட முடியும்.
இத்தகைய நிலைமைகளைத்தான் இந்தியாவிடம் எடுத்துச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சென்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களிடம் இங்குள்ள தமிழர்களின் அவலத்தைச் சொல்லுவதற்கும் அவர்கள் சென்றுள்ளனர்.
எதுவித காரணமுமின்றி பொத்துவிலில் 11 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதைப் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துரைப்பர்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை சிறிலங்கா கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைப்பது இல்லை. அப்படியான நிலையில் அது அனைத்துக் கட்சிக் கூட்டமா?
சிறிலங்கா நாடாளுமன்றில் 22 பேர் உறுப்பினர்களாக வடக்கு கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் உள்ளனர். எதுவித அழைப்பும் இந்த உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்காமல் நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகின்றீர்கள்? யாரை முட்டாளாக்குகிறீர்கள்?
இதனை இந்தியாவுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துச் செல்லுவோம். அதற்காக நாம் கடுமையாக உழைப்போம்.

எங்கே போனார்கள் முஸ்லிம் பிரதிநிதிகள்?

எனக்குத் தெரிந்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நிராகரித்தது இல்லை. இனப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காணப்படும் நிலையில் கண்டிப்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படுவர்.
தற்போது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேதான் யுத்தம் நடைபெறுகிறது. ஆகையால் தற்போதைய நிலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகளை பேச்சுக்களில் உள்ளடக்க வேண்டிய தேவையில்லை.
உண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தில் ஏராளமான முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளனர். அமைச்சர்களாக உள்ள அவர்கள் வாய்மூடி உள்ளனர்.
தங்களது இனத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறையிருக்குமானால் ஏன் அவர்கள் உண்மையை வெளிக்கொணரவில்லை?
பொத்துவில் படுகொலைக்கு யார் காரணம் என்பதை அந்த மக்கள் நன்கு அறிந்துள்ளனர். எந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது அது பற்றி பேசினார்களா? அம்பாறை மாவட்டத்திலிருந்து 5 பேர் உள்ளனர் என்று நினைக்கிறேன். எங்கே போனார்கள் அவர்கள்? என்று அந்த நேர்காணலில் ரவிராஜ் கூறியுள்ளார்.
நன்றி>புதினம்.

Friday, September 22, 2006

மூதூரிலிருந்து முஸ்லிம்கள் உடன் வெளியேறுக.

திருமலை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மூதூர் பகுதியிலிருந்து அனைத்து முஸ்லிம்களை வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை இன்று அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மூதூர்ப் பகுதிகளை கைப்பற்ற இருப்பதால் அனைத்து முஸ்லிங்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.

ஹக்கீமுக்கான அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கம்.

சர்வதேச விசாரணை எதிரொலி:
அம்பாறை முஸ்லிம்கள் படுகொலை தொடர்பான சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு அளிக்கப்பட்ட அதிரடிப்படை பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.
ஹக்கீம் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த 6 அதிரடிப்படையினரை கொண்ட குழு விலக்கும் உத்தரவை சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ நேற்று வியாழக்கிழமை பிறப்பித்தார்.
இன்று முதல் ஹக்கீமுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
அம்பாறை படுகொலை தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி வந்த ஹக்கீம் இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கும் நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். மகிந்தவுக்கு கடிதம் அனுப்பிய பின்னரே பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் சிறிலங்கா அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ந்து ஹக்கீமின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி>புதினம்.

Thursday, September 21, 2006

தட்டிக்கேட்க 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - வைகோ

எந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம் அவர்களுக்கொன்று என்றால் அதைத் தட்டிக்கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கா ஆறுகோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். கரூர் மாவட்ட ம. தி. மு. க. செயல் வீரர்கள் கூட்டம் கொங்கு திருமண மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் மா. கட்டையன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, இப்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிற தி. மு. க. அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மாறாக ஊர் தோறும் ஆடம்பர விழா விளம்பரங்களில் தான் அக்கறை காட்டுகிறது. வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டத்தை கூட குடும்ப நலனுக்காக தான் கருணாநிதி செயல்படுத்துகிறார். மக்கள் வரிப் பணத்தில் இலட்சணக்கணக்கான டி.வி. க்களை கொடுத்துவிட்டு குடும்ப கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான இலாபமடைய பார்க்கிறார். அறிவியல் முறையில் மக்களை ஏமாற்றத் தெரிந்தவர் கருணாநிதி.
ஈழத்தில் தமிழ் குழந்தைகள் படுபயங்கரமாக கொல்லப்பட்டபோது அதை கண்டித்து டில்லியில் இலங்கை தூதரகம் முன் எழுச்சியான ஆர்ப்பாட்டம் செய்து 6 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்தோம். ஆனால் எங்களின் ஈழத் தமிழர் ஆதரவை விளம்பரம் என்கிறார் கருணாநிதி. ஆயிரம் கருணாநிதி வந்தாலும் ம. தி. மு. க. வை ஒன்றும் செய்ய முடியாது.
நான் வவுனியா சென்று வந்ததை கூட கிண்டல் செய்தார். என் கடிதத்தை தணிக்கை செய்து சட்ட சபையில் படித்தார். அவர் தணிக்கை செய்த பகுதியை கூறுகிறேன். சிங்கள இராணுவத்தின் கைகளில் சிக்கி பிடிபட நேர்ந்தால் தி. மு. க. அரசுக்கோ மத்திய அரசுக்கோ சேதாரம் ஏற்படாமல் என்னை நான் பலியிட்டுக் கொள்வேன் என்ற 4 வரியை நீக்கி விட்டார்.
அந்த வரியை சட்ட சபையில் படித்தால் என் மீது அனுதாபம் ஏற்படும் என்று பயந்து அப்படி செய்து உள்ளார். எந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் செயல் வீரர்கள் நன்கு செயல்பட்டு கழகத்திற்கு வெற்றியை தேடித்தர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி>பதிவு.

Wednesday, September 20, 2006

14 முஸ்லிம்கள் படுகாயம்- ஊரடங்கு உத்தரவு அமுல்.

அம்பாறை மாவட்டம் உல்லைப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று புதன்கிழமையன்றும் முழு அடைப்புப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தை முறியடிக்கும் வகையில் உல்லைப்பகுதியில் கடைகளைத் திறக்குமாறு சிறப்பு அதிரடிப்படையினர் மிரட்டல் விடுத்தனர்.
ஆனால் வர்த்தகர்கள் கடைகளைத் திறக்க மறுத்தனர். கடைகளைத் திறக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர்களை சிறப்பு அதிரடிப்படையினர் தாக்கத் தொடங்கினர். இதனால் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில்
அகமெட் லெப்பை நூர்தீன் (வயது 34)
மொகைதீன் பிச்சை லத்தீப் (வயது 45)
எம்.ஐ.சீனி மொகமெட் (வயது 29)
ஜாஃப்பர் (வயது 35)
ஆகியோர் ஆபத்தான நிலையில் கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்
எம்.ஐ. ஜாஃபொர்தீன் (வயது23)
ஏ. மஜீத் (வயது 28)
ஆர். ஹனீப் (வயது 19)
எம். காசீம் (வயது 33)
ஏ.கே. மொகைதீன் பாபா (வயது 64)
மொகமெட் லெப்பை (வயது35)
ரசீக் (வயது 19)
சுபைர் (வயது 25)
உள்ளிட்ட 10 பேர் பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் படுகொலைக்குக் காரணமான சிறப்பு அதிரடிப்படை அதிகாரியை நீக்க வேண்டும் அல்லது இராத்தல்குளம் பகுதி சாஸ்திரவெளி சிறப்பு அதிரடிப்படை முகாமையே நீக்க வேண்டும் என்று அம்மக்கள் கோரி வருகின்றனர்.
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமை அகற்ற வேண்டும் என்று பொத்துவில் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பொத்துவில் மற்றும் உல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
பொத்துவில் பிரதேசத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை சிறப்பு அதிரடிப்படையினர் பிறப்பித்துள்ளனர்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு, திருக்கோவில், தம்புவில் ஆகிய தமிழர் பகுதிகளிலும் இன்று புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அம்பாறை மாவட்டம் முழுமைக்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
நன்றி>புதினம்.

ஊடகவியலாளர்களை பலி கொடுக்க இராணுவம் சதி.

எறிகணை வீச்சு நடைபெறும் பிரதேசத்துக்கு அனுமதி பெறாமல் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று உயிரிழக்கச் செய்வதன் மூலம் பழிபோட சிறிலங்கா இராணுவம் திட்டமிடுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முகமாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சில் ஊடகவியலாளர்கள் உயிர் தப்பியதாகவும் 4 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் இடையே உள்ள முகமாலை முன்னரங்க காவலரண் பகுதிக்கு கொழும்பிலிருந்து சர்வதேச செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களை சிறிலங்கா இராணுவம் அழைத்துச் சென்றதாக சில சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
கடந்த ஓகஸ்ட் 10 ஆம் நாள் முதலே முகமாலை முன்னரங்க நிலைகளில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக சிறிலங்கா இராணுவமே கூறியுள்ளது.
வடக்கு - கிழக்கில் இயங்கி வரும் சர்வதேச நிறுவனங்கள் தொடர்பிலான குழுவும் கடந்த செப்ரெம்பர் 18ஆம் நாளன்று கிளிநொச்சியில் வெளியிட்ட அறிக்கையில், "கடந்தவாரம் பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் எறிகணை வீச்சுகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.
அண்மைய எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளிநொச்சியில் பணியாற்றும் நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனையின்றி பணி செய்யும் பகுதிகளுக்குச் செல்வதில்லை.
எறிகணை வீச்சு நடைபெறும் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரிவிக்காமல் ஊடகவியலாளர்களை சிறிலங்கா இராணுவம் அழைத்து வந்தது ஏன்?
இந்த மோதலில் ஒன்றிரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோட சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டுவராமலும் அனுமதி பெறாமலும் ஊடகவியலாளர்களை எறிகணை வீச்சுப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருப்பதானது ஊடகவியலாளர்களின் உயிர்களை அலட்சியம் செய்கிற இரக்கமற்ற செயலாகும்.
ஊடகவியலாளர்களை இத்தகைய இக்கட்டான நிலைமைக்கு தள்ளுவது குறித்து நாம் விசனமடைகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்

மேலும் மூன்று முஸ்லீம்கள் ராணுவத்தால் சுட்டுக்கொலை.


இரண்டாவது இணைப்பு

அம்பாறை உல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 14 பேர் காயம்.
அம்பாறை உல்லை பகுதியில் இன்று காலை முஸ்லிம் மக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 14 முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும், அவர்கள் தீவிர சிகிற்சைக்காக அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் தீவிர சிகிற்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஏனையவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேநேரம் இந்தச்சம்பவத்தில் முன்னர் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அதில் எந்தவித உண்மையும் இல்லை. அப்பகுதியில் தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளை அண்டிய உல்லை, பெரிய உல்லை பிரதேச சிங்கள, தமிழ் மக்கள் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி>பதிவு

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினருக்கும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தொடர்ந்தும் பதட்ட நிலைமை காணப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று காலை உல்லைப்பகுதியில், முஸ்லிம் இளைஞர்கள் அதிரடிப்படையினர் படுகொலைசெய்தமையினை கண்டித்து ஹர்தால் அனுசரித்துக்கொண்டிருந்தபோது, அங்கு குவிந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கியதாகவும், தொடர்ந்து தர்க்கம் ஏற்படவே துப்பாக்கிப்பிரயோகத்தை அவர்கள் மேற்கொண்டனர் என்றும் இதன் காரணமாக மூன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலியாகியுள்ளதாகவும், அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி>பதிவு.

Monday, September 18, 2006

ஐ.நா. ஆணையத்திலிருந்து சிறிலங்கா வெளியேற்றம்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றப்படக் கூடும் என்று தெரிகிறது.
ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானங்களில் சிறிலங்கா கைச்சாத்திடவில்லை என்றும் அந்த அமைப்புக்களால் சிறிலங்காவை கட்டுப்படுத்த முடியாது என்றும் கடந்த வாரம் சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆகையால் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்திலிருந்து சிறிலங்காவை வெளியேற்ற வேண்டும்.
சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத் தீர்மானங்கள் சிறிலங்கா அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சரத் என்.சில்வா, நீதிபதிகள் நிஹால் ஜயசிங்க, என்.கே. உதலகம, நிமல் திசநாயக்க மற்றும் நிமல் காமினி அமரதுங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் இத்தீர்ப்பை அளித்தனர்.
நன்றி>புதினம்.

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: முஸ்லிம்கள்

3வது இணைப்பு

படுகொலைக்கு புலிகள் காரணமில்லை- சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த ஐ.நா.விடம் முறைப்பாடு: ஹக்கீம்

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
படுகொலைச் சம்பவ இடத்துக்கு ரவூப் ஹக்கீம் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் ரவூப் ஹக்கீம் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு என்னால் வர முடியாது. இந்தப் படுகொலையை விடுதலைப் புலிகள் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
படுகொலைச் சம்பவம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை சந்தித்துப் பேச உள்ளேன்.
இச்சந்திப்பின் போது சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசாரணைகளை நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.
படுகொலைச் சம்பவ நடந்த இடமானது முழுமையாக சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். அங்கு விடுதலைப் புலிகள் உள்நுழைந்திருப்பதாகத் தெரியவில்லை என்றார் ஹக்கீம்.
நன்றி>புதினம்.

2வது இணைப்பு

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லிமிரர்

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி மக்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஏடான டெய்லி மிரர் குற்றம்சாட்டியுள்ளது.
இப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா இராணுவம் தெரிவித்த செய்திகளை மறுத்து டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்கள்:
அம்பாறை பனாமா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டோர் அனைவரது கண்களும் கைகளும் கட்டப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் முதலில் கூறியது போல் அது அடர்ந்த காட்டுப் பகுதி அல்ல.

மேலும் எமது புகைப்படக் கலைஞர் பொத்துவில் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இக்கொடூரப் படுகொலையை சிறிலங்கா அதிரடிப்படையினர்தான் செய்தனர் என்றும் விடுதலைப் புலிகள் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்

1வது இணைப்பு

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: முஸ்லிம்கள்

அம்பாறையில் 10 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி முஸ்லிம்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொத்துவில் மசூதியில் கூடியிருந்தனர்.
அவர்களில் எம்.எஸ். மொகதீன் என்பவர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் இந்தப் படுகொலைக்கு காரணம். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிக்குள் வரமுடியாது. இது முழுமையாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம். சிறப்பு அதிரடிப்படைக்குத் தெரியாமல் யாரும் இந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது என்றார் அவர்.
இதனிடையே சிறிலங்கா அதிரடிப்படையின் இந்தப் படுகொலைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தின் இதர மாவட்டங்களில் கறுப்புக் கொடி ஏற்றி துக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது.
நன்றி>புதினம்

அதிரடிப்படை முகாம் அருகே 11 முஸ்லிம்கள் படுகொலை.

அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாம் அருகே 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கை:
அம்பாறை யால தேசிய பூங்கா அருகே 11 முஸ்லிம்கள் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இப்படுகொலைச் சம்பவம் நடந்த இடம் அருகே சிறிலங்கா இராணுவம் முகாம் அமைந்துள்ளது. இந்த இடம் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இத்தகைய படுகொலைகளை நிகழ்த்தும் போது தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டுவதை நீண்டகாலமாக சிறிலங்கா இராணுவம் செய்து வருகிறது. இதற்கு நல்ல உதாரணமாக மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட் சம்பவத்தை சுட்டிக்காட்டலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சிறிலங்கா இராணுவம் வெளியிடும் செய்திகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்களின் குடும்பங்களை சர்வதேச ஊடகங்கள் சந்தித்தமையால் அது வெளிச்சத்துக்கு வந்த்து. அத்தகைய ஒரு நடைமுறையை ஊடகங்கள் இலங்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக்கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆனால் சிறிலங்கா இராணுவ இணையத்தளத்தில் சாஸ்திரவெளி சிறிலங்கா அதிரடிப்படை முகாம் அருகே உள்ள றொட்வெல, பொத்துவில் பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டோர் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

Sunday, September 17, 2006

சென்னை துணைத் தூதுவர் ஹம்சா சதி:"நக்கீரன்" அம்பலம்

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மூலம் ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சிறிலங்காவுக்கான சென்னை துணைத் தூதுவராக உள்ள ஹம்சா சதித்திட்டம் தீட்டுவதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.


நக்கீரன் வாரமிருறை ஏட்டில் வெளியாகி உள்ள கட்டுரை விவரம்:

"இப்போதுள்ள சூழலை அதிபர் ராஜபக்ச பயன்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும்'' என அதிபரிடமே நேரில் வலியுறுத்தியிருக்கிறார்.

இலங்கைக்கு வந்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். பிரேசில் பயணத்தின்போது விமானத்திலேயே பேட்டியளித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இலங்கைப் பிரச்சினை குறித்துப் பேசினார்.

ஈழ விவகாரத்தில் இந்தியா காட்டி வரும் அக்கறையை கொழும்பு அரசியல் வட்டாரம் உன்னிப்பாக கவனித்து எதிர்வினை நிகழ்த்தி வருகிறது.

"எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அனாவசியமாகத் தலையிடுகிறார்'' என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் நிருபமாராவ் மீது இலங்கை அமைச்சர் அனுரா பண்டாரநாயகா அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்தூதர் ஹம்சாவுக்கு ராஜபக்ச அரசு ஸ்பெஷல் அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறது.

"இதை இந்திய உளவுத்துறையினர் எந்தளவு மோப்பம் பிடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை'' என்றார் கொழும்பில் நம்மிடம் பேசிய அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர்.

சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா, ஏற்கனவே தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு, ஈழத்தமிழர்களுக்கு இதரவாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்தவர்.

இப்போது அவர், தமிழகத்திலுள்ள முஸ்லிம் மதராசாக்கள், உலமாக்களை ஒருங்கிணைக்கும் அசைன்மெண்ட்டில் தீவிரமாக இருக்கிறார் என்பதே கொழும்பு அதிகாரி நம்மிடம் தெரிவித்த முக்கியத் தகவல்.

"உலமாக்கள் ஒருங்கிணைந்து விரைவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறார்கள். அந்த சந்திப்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள அமைப்புகளுக்கு தர்மசங்கடத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்'' என்றது கொழும்பு வட்டாரம்.

இலங்கைத் தலைநகரில் உள்ள தமிழர் அமைப்பினருக்கும் ஹம்சா மேற்கொண்டிருக்கும் "அசைன்மெண்ட்" பற்றித் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் பேசினோம்.

"இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் முஸ்லிம் ஜிகாத் அமைப்பு இரகசியமாக செயல்பட்டு வருகிறது. இதனை உருவாக்கி, நிதியுதவி செய்து வருவது பாகிஸ்தான். இலங்கையில் பயிற்சி எடுத்து, தென்னிந்தியாவுக்குள் இவர்கள் நுழைய வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் திட்டம். அதே நேரத்தில், இலங்கை அரசோ இந்த ஜிகாத் அமைப்பை விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் குறிக்கோளுடன் இலங்கையில் ஜிகாத் அமைப்புகள் வளர்த்து விடப்பட்டு வருகின்றன'' என்றவர்கள், அண்மையில் மூதூர் பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டையில் இராணுவத்துக்கு இதரவாக ஜிகாத் அமைப்பினர் களமிறங்கியதையும் சுட்டிக்காட்டினர்.

"மூதூர் சண்டையில் முஸ்லிம்கள் தரப்பில் இறந்து போனவர்கள் ஜிகாத் அமைப்பினர்தான். இதனால் புலிகள் மீது பாகிஸ்தானின் கோபம் அதிகரித்துள்ளது. அதிபர் ராஜபக்சவும் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரும் சமீபத்தில் சந்தித்து நீண்டநேரம் விவாதித்துள்ளனர்.

அந்த சந்திப்பின்போதுதான் ஹம்சாவுக்கு தரப்பட்டுள்ள அசைன்மெண்ட் இறுதி வடிவம் பெற்றிருக்கிறது'' என்கிறது அதிபர் அலுவலக வட்டாரமே!

"இலங்கையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக முஸ்லிம்களிடமிருந்து பெரிய அளவில் கண்டனங்களையும், கருத்துக்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும். தமிழர்கள் வேறு, முஸ்லிம்கள் வேறு என்ற எண்ணத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். அதற்கேற்றபடி தமிழ்நாட்டில் கல் எறிய வேண்டும்.

தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரல் ஒங்கும்போது, அங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புகளுக்கு சங்கடம் எற்படும். அவர்களின் குரல் மெல்ல தணியும். தமிழகத்தில் ஈழ ஆதரவுக் குரல் குறைந்தால், இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீடும் நிர்ப்பந்தமும் குறைந்துவிடும்'' என்பதுதான் அதிபர் ராஜபக்ச- பாகிஸ்தான் தூதுவர் சந்திப்பின் சாரம்சம்.

இதுபற்றி சென்னையிலுள்ள இலங்கை துணை தூதுவர் ஹம்சாவிடம் தெரிவிக்கப்பட, "அசைன்மெண்ட்"டை உடனடியாக செயல்படுத்தும் முடிவுடன் களமிறங்கி, உலமாக்களை அவர் சந்தித்து வருகிறார். அவர்களை ஒருங்கிணைத்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும்படி வலியுறுத்துகிறார். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட்படி பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும்போது., "மூதூரில் நடந்த சண்டையில் முஸ்லிம்களை கொன்றது புலிகள்தான். இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். புலிகள் பிரதேசத்தில் முஸ்லிம்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதில் இந்தியஅரசு தலையிட வேண்டும்'' என்ற "வாய்ஸ்' உலமாக்களிடமிருந்தும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதில் ஹம்சா கவனமாக இருக்கிறார்.

தமிழகத்தில் "தமிழர்- முஸ்லிம்" என்ற புதிய மோதலை உருவாக்க வேண்டும் என்கிற இலங்கை அரசின் திட்டத்துக்கான முதல் கட்டம் விரைவில் வெளிப்படும் என்கிற கொழும்பு வட்டாரம்,

"இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புக்களின் நிலைதான் மிகவும் கவனத்திற்குரியது. அரசியல் சார்ந்த தமிழக முஸ்லிம் அமைப்புக்கள் ஈழ விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தாவிட்டாலும், அந்த அமைப்புக்கள் தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாக தங்கள் கருத்துக்களை வெளியிட்டதில்லை. ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுடன் இணக்கமாகவே இருக்கிறார்கள். உலமாக்கள் மூலம் தமிழக முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிர்பந்தத்தை உண்டாக்க ஹம்சா முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தமிழக முஸ்லிம்கள் இதை ஏந்தளவு அனுமதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை'' என்கிறார்கள் என்று நக்கீரன் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது
நன்றி>புதினம்.

தமிழக ஊடகங்களின் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சிமாற்றமா?

ஈழப்போராட்டத்துக்குத் தமிழ்நாட்டு மக்களிடையே பெருகி வரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்றி வருகிறது ! பேராசிரியர் கு.அரசேந்திரன் (சென்னை கிறித்துவக் கல்லூரி)

தமிழ்த்தேசியக் கொள்கை பேசிய திராவிட இயக்கங்கள் இந்திய அரசியலில் கரைந்துபோன காரணத்தால் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த முன்வரவில்லை. பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியுள்ள ஊடகங்களும் ஈழப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்யவே விரும்புகின்றன. இந்த இரு நிலைகளையும் தாண்டித் தமிழீழ மக்களின் துன்பங்கள,விடுதலைப் போராட்ட வெடிப்புகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் சில பல நேரங்களில் வெளிவந்துவிடுகின்றன. இந்நிலைக்குக் காரணம் தமிழ்த் தேசியத்தை அரசியலுக்கு அப்பால் உறுதியாக முன்னெடுக்கின்ற தலைவர்களும் தொண்டர்களும் தான். இவர்கள் மக்களுடன்

சேர்ந்து வேலை செய்கின்றபோது ஊடகங்கள் எங்கே தங்களின் பொய்முகம் மக்கள் மத்தியில் முழுதாக வெளுத்துவிடுமோ என்ற அச்சத்தில் செய்திகளை வெளியிட்டு விடுகின்றன.

தமிழீழத் தேசியத் தலைவர் கிளிநொச்சியில் நடத்திய உலகப் பத்திரிகையாளர் மாநாட்டு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. தமிழ் நாட்டில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் அப்பொழுது அந்த நிகழ்ச்சியைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள். பெரும்பான்மையான மக்கள் தமிழீழப் போராட்டத்தின் பக்கமே இருக்கிறார்கள். ்தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் 'என்பார்களே, அதுபோல ஈழத்தமிழர்கள் படுகின்ற துன்பங்களில், பெறுகின்ற வெற்றிகளில் இவர்களும்

சொந்தம் கொண்டாடிக் கலந்து போகிறார்கள். இவர்களிடையே ஈழ ஆதரவுக்குரலை ஒலிக்கின்ற செய்தி ஏடுகளின் விற்பனை பெருகுவதைக் காணமுடிகிறது. பிரபாகரன் அவர்களைச் சந்தித்தது தொடர்பான இயக்குநர் மகேந்திரனின் நேர்காணலைத் தாங்கி வந்த குமுதம் இதழ் வெளியானவுடனேயே விற்றுத் தீர்ந்துவிட்டது. இந்த நிலையும் தமிழீழச் செய்திகளைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.

ஸ்ரீலங்கா அரசு தருகின்ற தகவல்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த தமிழ் நாட்டு ஊடகங்கள் இன்று பெரும் சிக்கல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல்வேறு இணையத் தளங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலைவரங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திவிடுகின்றனர். இந்த நெருக்கடியும் தமிழீழத்தின் நடப்பினை ஊடகங்கள் ஓரளவுக்கு நடுநிலையுடன் வெளியிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது.

தமிழீழம் என்பது தமிழ் நாட்டின் ஒரு உறுப்பாகவே தமிழக மக்கள் நெஞ்சில் இப்பொழுது பதிந்திருக்கிறது. அல்லைப்பிட்டிப் படுகொலைகளும், செஞ்சோலைப் பிஞ்சுகளைக் கொன்றொழித்த நிகழ்வும் அவர்கள் குடும்பத்தின் துயரங்களாகவே கனத்துத் தொங்குகின்றன. இந்திய

அரசாங்கம் சிங்கள அரசுக்குத் துணை போகுமேயானால் தமிழ் நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக அதை எதிர்க்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த உணர்வலைகளுக்கு விரும்பியோ, விரும்பாமலோ ஊடகங்கள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. மொத்தத்தில் தமிழீழப் போராட்டத்துக்கு தமிழ் நாட்டு மக்களிடையே பெருகிவரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்குத் தள்ளி வருகிறது.

ஈழத்தமிழர்களுக்காக இன்று எல்லாப் பத்திரிகைகளுமே கண்ணீர் வடித்தாலும் கண்ணீரின் நோக்கம் ஒன்றல்ல !

ஆர் .கோபால் ஆசிரியர் - நக்கீரன்

இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற போர் பற்றி, அங்கு தமிழர்கள் படுகின்ற அவலங்களைப் பற்றி, இராமேஸ்வரத்தில் கரையேறுகின்ற அகதிகளைப் பற்றி இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளுமே எழுதிக் கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்த, அவர்களது போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஏடுகள் கூட இவற்றில் அடக்கம். தங்களுடைய பழைய முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு ஈ ழ ஆதரவு என்ற முகமூடியை மாட்டியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கின்ற ஆட்சிமாற்றம்தான்.

கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பத்திரிகைகளால் நிறைவாகச் சுவாசிக்க முடிகிறது. அதனால்தான் ஜெயலலிதாவினுடைய ஆட்சிக் காலத்தில் ஈழத்துக்குச்

சென்று பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டுத் திரும்பிய பாரதிராஜாவிடம் அதுபற்றி இப்போது ஆனந்தவிகடனால் பேட்டி காணமுடிகிறது. அவராலும் பிரபாகரன் அவர்களை எட்டாவது அதிசயம் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. அதேபோல இயக்குநர் மகேந்திரனாலும் குமுதத்தில் தன்னுடைய ஈழப்பயணம் பற்றி ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்யமுடிகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்க முன்னர், மே- 12, 2006க்கு முன்னர் இவற்றைப் பிரசுரித்திருந்தால் பாரதிராஜாவையும் மகேந்திரனையும் சிறையில்தான் பார்த்திருக்க முடியும்.

அதேசமயம், ஈழத்தமிழர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கின்ற பத்திரிகைகள் எல்லாவற்றினது நோக்கமும் ஒன்றல்ல. தமிழகத்தின் பத்திரிகைச் சூழலில் மேற்தட்டு கீழ்த்தட்டு என்று, வெளிப்படையாகச்

சொல்வதானால் பிராமணர்களது பத்திரிகைகள்- பிராமணர்கள் அல்லாதவர்களது பத்திரிகைள் என்று தெளிவான எல்லைகளைப் பார்க்க முடியும். இதில் பிராமணர்களது பத்திரிகைகள் இலங்கையில் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவாக என்றுமே இருந்ததில்லை. ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு எழுச்சியை ராஜீவ் கொலையைக் காட்டி அடக்கவே முயன்று வந்திருக்கின்றன. ஆனால் இன்று ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? சொல்லு என்று கலைஞரின் சட்டையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தலையங்கங்கள் தீட்டுகின்றன. இதில் ஈழத்தமிழர்களின் மீதான அனுதாபம் என்பதைவிட அவர்களின் அரசியல்தான் அதிகம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸுடன் கூட்டுவைத்துள்ளது. கூட்டணியில் முறிவை ஏற்படுத்தி ஜெயலலிதா அம்மையாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்தப் பத்திரிகைகள் விரும்புகின்றன. நெருக்குதல்களை ஏற்படுத்திக் கலைஞரின் வாயாலேயே ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்லவைத்துவிட்டால் இதனைச் சாதித்து விடலாம் என்று நினைக்கின்றன.

தமிழகத்தின் தேர்தல் அரசியல் ஒன்றுபட்டிருந்த ஈழ ஆதரவு அரசியல் சக்திகளைத் திசைக்கொன்றாகப் பிரித்து வைத்துள்ளது. பரபரப்புச் செய்திகளுக்காக பத்திரிகைகள் இந்தத் தலைவர்களது பேட்டிகளைப் பிரசுரித்து ஆளாளுக்கு சேறுபூசவைக்கும் கைங்கரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றன. இது வேதனையான ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு உதவுவது என்பது ஊர் கூடித் தேர் இழுக்கும் செயல். இதில் நக்கீரன் தன்னுடைய பொறுப்பை இது காலவரை சரியாகவே செய்து வந்திருக்கிறது. இனியும் செய்யும்.

தமிழகப் பத்திரிகைகளின் பார்வை அரசின் நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

தளவாய் சுந்தரம்(பத்திரிகையாளர், ஊடகவியல்ஆய்வாளர்) தமிழக மக்களும் தமிழகப் பத்திரிகைகளும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு நோக்குகின்றன என்பதை பார்க்கத் தொடங்கும் முன், தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டு பிராமணர், பிராமணரல்லாதார் அரசியலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பிராமணர், பிராமணரல்லாதார் அரசியல், சரியாகவோ அல்லது தவறாகவோ இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து தமிழகப் பிராமணர்களால் பார்க்கப்படுகிறது. பிராமணரல்லாதார் எழுச்சி, பெரியார் என்ற ஆளுமை, திராவிடர் கழகம் உருவானது, திராவிட முன்னேற்றக் கழகமும் அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆட்சியைக் கைப்பற்றி தமிழகத்தில் செய்துவரும் மாற்றங்கள், இடஒதுக்கீடு அமுல் செய்யப்பட்டது என்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் அனைத்தையும் பிராமணர்கள் தங்கள் வாழ்வுரிமைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கிறார்கள். ஒரு வருடத்துக்கு முன்பு எழுத்தாளர் அசோகமித்திரன், அவுட்லுக் ஆங்கில வாரப் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் வாழும் பிராமணர்கள், ஹிட்லரின் கீழே வாழ்ந்த யூதர்கள் போல்தான் வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இது அசோகமித்திரன் என்ற தனி ஒருவரின் குரல் மட்டுமல்ல. பெரும்பான்மை தமிழகப் பிராமணர்களின் குரலும் இதுதான்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ் உணர்வாளர்களால் ஆதரிக்கப்படும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் தமிழகப் பிராமணர்கள் அணுகுகிறார்கள். இலங்கையில் தனி ஈழம் அமைவது மீண்டும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழச் செய்யும் என்பது அவர்கள் எண்ணம். அப்படி நிகழ வாய்ப்பில்லை என்பதும், இது தேவையில்லாத அச்சம் என்பதும் ஒருபுறமிருக்க தேசியப் பார்வையுடைய பிராமணரல்லாதவர்களுக்கும் இந்த எண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பின்னணி இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்த தமிழக பத்திரிகைகளின் பார்வையில் முக்கிய பங்காற்றுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கிடைத்த ஸ்கூப் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு தினமலர் நாளேடு மகிழ்ச்சியடைந்ததும், அது தவறான செய்தி என்று அதற்குப் பிறகு உறுதியான பின்னர் இன்றைக்கு வரைக்கும் அச்செய்திக்கு மறுப்பு வெளியிடாததும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் முடிவில், 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது பிரபல வார இதழ் ஒன்றில் எழுதப்பட்ட தலையங்கமும் இங்கே கவனிக்க வேண்டியது. தண்டனை நிறைவேற்றப்படும் போது, தூக்குக் கயிறு கழுத்தை முறிக்கும் சத்தம் கேட்டு ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்னும் அர்த்தம் தொனிக்கும் வகையில் அந்த தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அது பிராமணரல்லாத ஒரு முதலாளியால் நடத்தப்படும் பத்திரிகையில் வெளியானது என்றாலும் பத்திரிகையின் ஆசிரியர் பிராமணர்.

பிராமணர் ,பிராமணரல்லாதார் அரசியல் போலவே இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றிய தமிழகப் பத்திரிகைகளின் பார்வையில் முக்கிய பங்காற்றுவது ராஜீவ்காந்தி கொலை. 1980களில் தமிழகப் பத்திரிகைகள் மத்தியில் ஈழப் போராட்டத்துக்கு உணர்ச்சிமயமான ஒரு ஆதரவு இருந்தது. அக்காலத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள், ஊர்வலங்களுக்கு, அப்போது பத்திரிகைகளில் வெளியான செய்திகள், கட்டுரைகள் முக்கிய காரணம். அந்த அளவுக்குக் கொந்தளிப்பான, உணர்வு ரீதியான ஒரு பார்வையைத் தமிழகப் பத்திரிகைகள் கொண்டிருந்தன. அக்காலகட்டத்தில் தமிழக மக்களிடையே ஈழப்போராட்டத்துக்கு இருந்த அபரிமிதமான ஆதரவையும் ஈடுபாட்டையும் பத்திரிகைள் பிரதிபலித்தன என்றும் இதனைப் பார்க்கலாம். அப்படியொரு உணர்ச்சிப் பெருக்கு ஏற்படத்தக்க வகையில் பத்திரிகைகள் செயலாற்றின என்றும் இதனைப் பார்க்கலாம். உண்மையில் தமிழக மக்கள், பத்திரிகைகள் இரண்டு பேருக்கும் இடையே பரஸ்பரம் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் சரியாக இருக்கும்.

நன்றி-தினக்குரல்

Saturday, September 16, 2006

அக்சன் பாம் பணியாளர்களின் உடல்கள் தோண்டியெடுப்பு.



மூதூர் அக்சன் பாம் நிறுவன பணியாளர்கள் இருவரின் உடலங்கள் இன்று தோண்டியெடுக்கப் பட்டுள்ளன. மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் வசந்த தினசேனவின் முன்னிலையில் இந்த உடலங்கள் திருகோணமலை உப்புவெளி இந்து மயானத்தில் இருந்த தோண்டியெடுக்கப்பட்டன.
ரகசிய காவல்துறையினரின் கோரலின் பேரில் ரசாயன பகுப்பாய்வுக்காக இந்த உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட மாதவராஜா கேதீஸ்வரன்,முத்துலிங்கம் நர்மதன் ஆகியோரின் உடலங்கள் கொழம்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளன.
இதேவேளை ஏனைய 15 பேரின் உடலங்கள் தொடர்பிலும் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் நேற்று நீதிவான் அனுமதி வழங்கினார்.
கடந்த மாதம் மூதூரில் ஏற்பட்ட மோதல்களின் போது இவர்கள் 17 பணியாளர்களும் கொலை செய்யப்பட்டனர். எனினும் இவர்களின் உடலங்கள் மூன்று நாட்களின் பின்னரே மீட்கப்பட்டன.
இந்தநிலையில் இவர்கள் கொலை சம்பவமானது சர்வதேச கவனத்திற்கு உட்பட்ட விடயமாக மாறியதை அடுத்து விசாரணைக்காக அவுஸ்திரேலிய நிபுணர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.

சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும்!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முழுவதும் முரணான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர்ப் பிரதேசத்தை சிறிலங்கா தேசம் தமது உச்ச வலுவைப் பயன்படுத்தி ஆக்கிரமித்து வெற்றி முரசு கொட்டி நிற்கின்றது. பல பொது மக்களை கொன்றழித்து. தமிழ் மக்களின் வாழ்விடங்களை நிர்மூலம் செய்து ஒட்டு மொத்தமாக அந்தப் பூமியை இடுகாடாக்கி விட்டு அதில் தமது வீரப் பிரதாபங்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றது.

அது மாத்திரமின்றி சம்பூர் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பேரினவாதிகளிடம் இருந்து வரும் கருத்துக்களை அவதானிக்கின்ற போது இனி எந்த விதத்திலும் சமாதான வழிமுறைகள் நடைமுறைக்கு வராது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

சிறிலங்கா அரசியலில் மிகப் பெரிய இனவாதிகளில் ஒருவரான இரட்ணசிறி விக்கிரமநாயக்கா அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துப் படி படையினரால் மீட்கப்பட்ட நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட இனி விட் டுக் கொடுக்க முடியாது எனக் கூறியிருப்பதிலிருந்தும் சிறிலங்காப் பேரின வாதிகள் ஒரு போதும் போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ஒத்திசைவினை வழங்கமாட்டார்கள் என்பது உறுதி.

அதுமாத்திரமின்றி இன்னும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலங்கள் மீட்கப்படும் எனத் தெரிவித்ததிலிருந்து சிங்கள அரசு இன்னும் நில ஆக்கிரமிப்புப் போரை தீவிரப்படுத்துவதற்கான நோக்கில் செயல்படுவது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த நிலையில் சமாதான வழிமுறைகள் இனி நடைமுறைப்படும் என்பது சாத்தியமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்திருக்கும் கருத்து ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம். தமிழர் தாயகப் பகுதியான சம்பூரை ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும். இல்லாது விடின் போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அவர்கள் வெளியேறா விடின் அவர்களை வெளியேற்றுவதற்கான போரை ஆரம்பிப்பது தவிர்க்க முடியாததொன்றாகி விடும் எனப் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து சம்பூர் ஆக்கிரமிப்பு எதிர் காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தப் போகும் விடயமாக மாறியுள்ளது.

இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தீர்க்கமான கருத்து எதனையும் இது வரை தெரிவிக்காதது வேதனைக்குரியது. ஏன் எனில் போர் நிறுத்த உடன்படிக்கை சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் கைச்சாத் திடப்பட்டதாகும்.

அவ்வாறான உடன்படிக்கையை அமுல்படுத்துவது என்பதில் சிறிலங்கா அரசு இன்று எதிர் மாறாக நிற்கின்றது. உடன்படிக்கையின் அனைத்து விதி முறைகளையும் மீறி தற்போது உச்சக்கட்டமாக நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிங்கள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இது போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்துள்ள நிலையில் இன்னும் இன்னும் சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பான செயற்பா டுகளுக்கும் கருத்துரைகளுக்கும் சர்வதேச சமூகம் எவ்வளவு தூரம் செவிமடுக்கப் போகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை விட்டு சிறிலங்கா அரசு விலகிவிட்ட நிலையில் தமிழ் மக்கள் தமது இறுதி யுத்தத்திற்கு முகம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.

சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை செயலிழந்து தமிழ் மக்கள் படுகொலை செய்ய ப்படுவது மாத்திரமின்றி பெரும் இடப்பெயர்வைச் சந்தித்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி அவலங்களை சந்தித்து நிற்கின்ற இன்றைய நிலையில் இனி இறுதி உபாயம் போர் தான் என்பது தற்போது தமிழர் தாயகம் உணர்ந்து கொண்ட விடயம்.

தற்போது புலம் பெயர் உறவுகளும் தமிழகத்திலும், ஈழத்தமிழனின் உரிமை முழக்கம் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் சர்வதேச சமூகம் சரியான கண்ணோட்டத்தில் இலங்கை விவகாரத்தில் தமது அணுகுமுறைகளைக் கையாண்டு போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தாது விடின் தமிழீழ விடுதலைப்புலிகள் கூறியிருப்பது போன்று சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும் என்பது மறு பேச்சுக்கு இடமில்லை.

நன்றி - மட்டு ஈழநாதம்.

Thursday, September 14, 2006

யுத்த நிறுத்தத்தை சிறிலங்கா அரசு உண்மையில் மதிக்கிறதா?

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும், அதன் அடிப்படையிலான ஜெனீவா இணக்கப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் கோரியுள்ளதை வரவேற்றுள்ள விடுதலைப் புலிகள், மகிந்த ராஜபக்ச அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நெட் இணையத்தளத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது:
இவ்வருடம் பெப்ரவரியில் ஜெனீவாவில் சிறிலங்கா அரசு இணங்கிய இராணுவ இணக்கப்பாடுகளை உறுதி செய்வது அவசியம் என்று இணைத்தலைமை நாடுகள் கோரியுள்ளமை வரவேற்கத்தக்கது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்ததுடன், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ளது.
ஆகவே, யுத்த நிறுத்த சரத்துக்களில் இணக்கப்பாடு காணப்பட்டதற்கு இணங்க, இருதரப்பின் எல்லைகளை மீளவும் அதே நிலைக்கு நகர்த்தி, சமாதானப் பேச்சுக்களை சுமூகமாக முன்னெடுக்க மகிந்த ராஜபக்ச அரசு முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.
விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி, செப்ரம்பர் 6 ஆம் திகதி நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான நோர்வே தூதுக்குழுவினருக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதையே நாம் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கும் தெரிவித்தோம்.
அமைதி முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஏதுவான சூழலை சிறிலங்கா அரசு உருவாக்குவதை, சர்வதேச சமூகமும், அதற்கு அனுசரணை வழங்கும் நோர்வே தரப்பும் உறுதி செய்வது அவசியம் என்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டு மக்களுக்கான உணவு விநியோக சிக்கல்கள் தொடர்பான கேள்வியொன்றிற்குப் பதிலளித்த அவர்,
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இது குறித்து முழுமையான பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும், யுத்த நிறுத்த ஒப்பந்தப்படி இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ள பிரதேசங்களினூடாக, உணவு விநியோகத்தை மேற்கொள்ள, விடுதலைப் புலிகள் முழுமையான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், இராணுவ ஆக்கிரமிப்பையும் தாக்குதல்களையும் முன்னெடுத்து வரும் சிறிலங்கா அரசு, விநியோகப் பாதைகளைத் திறப்பதற்கு மறுத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை தவிர, ஆட்கடத்தல்கள், திட்டமிட்ட கொலைகள் மற்றும் குற்றச் செயல்களையும் சிறிலங்காப் படைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. புதிய கண்காணிப்புக் குழுத் தலைவருடனான சந்திப்பின் போது, இந்த யுத்த நிறுத்த மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஆராயப்படும் என்றார் அவர்.
தற்போதைய களநிலவரத்தைப் புரிந்துகொண்டு, சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ள சர்வதேச சமூகத்தைப் பாராட்டிய தமிழ்ச்செல்வன், முல்லைத்தீவில் 51 பாடசாலைச் சிறுமிகள் மற்றும் 4 உத்தியோகத்தர்கள் மீதான சிறீலங்கா விமானப்படையின் தாக்குதலை கண்டித்ததையும் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
நன்றி>புதினம்.

Wednesday, September 13, 2006

ஒஸ்லோ பேச்சுக்கு சிறீலங்கா அரசு இணக்கம் தெரிவிப்பு.

ஒஸ்லோப் பேச்சுக்கு சிறீலங்கா அரசு இணக்கம் தெரிவிப்பது உண்மை என சிறீலங்காவின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்கள் என்றால் நாங்களும் வருவதற்கு தயார் எனத் கோகன்ன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும் என்ற உண்மையான நோக்கோடு வருவார்கள் எனவும் பேச்சுக்கான சூழலைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தையும் ஆள் பலத்தையும் அதிகரிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் கோகன்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக அரசாங்க சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

எனினும் தமிழீழ விடுதலைப்புலகள் வன்முறைகளையும் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என சமாதான செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெறும் திகதி மற்றும் இடம் என்பன தொடர்பாக அரசாங்கம் நோர்வே அனுசரணையாளர் இடையில் கருத்து பரிமாற்றங்கள் மூலம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சமாதான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒஸ்லோ நகரில் நடைபெற உள்ளதாகவும் அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என நோர்வே தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க சமாதான செயலகம் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

இதேவேளை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் தயார் என நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது பொதுமக்களை பிழையான வழியில் இட்டு செல்ல வழிவகுக்கும் என பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் கேலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய பாதுகாப்பு மையம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்ற விடயம் தொடர்பாகவோ அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பேச்சுக்கள் ஒஸ்லோவில் நடைபெறும் என்பது தொடர்பாகவோ அரசாங்கம் நோர்வே ஏற்பாட்டாளர் தரப்புடன் கலந்தாலோசனை எதனையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் கேலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
சொல்ஹெய்ம் தமது அறிவித்தலின் போது வடக்குகிழக்கு இணைப்பை பற்றி கருத்துரைத்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு: இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி தங்காலிமாக இணைக்கப்பட்ட வடக்குகிழக்கு மாகாணம் தொடர்பில் தற்சமயம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் ஏற்பாட்டாளர் தலையிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றும் கேலிய ரம்புக்வெல இவ்வாறு முரண்பட்ட கருத்தினைத் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

நோர்வேயின் அனுசரணைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும் என்று தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை நெருக்கடிக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பது முன்கூட்டியே தேவையெனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

நோர்வே அனுசரணையாளரின் சமாதான முயற்சியை ஏற்று இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சுகளை நடத்த வேண்டுமெனக் கூறிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதையே இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஜெர்மனியின் பிராஸ்க்பர்ட் நகரில் இருந்து பிரேசில் செல்லும் வழியில் விமானத்தில் பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

இலங்கை பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டும். நோர்வே குழுவின் சமாதான முயற்சியை ஏற்று இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் சமரச பேச்சு நடத்த வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது.
நன்றி>பதிவு.

Tuesday, September 12, 2006

நிபந்தனையற்ற பேச்சா?: சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது குறித்து அசோசியேற்றட் பிரஸ் எனும் சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது:
நாம் எமது நிபந்தனைகளை தெரிவிக்க உள்ளோம். பேச்சுக்கான நாள் மற்றும் இடம் குறித்து எம்மிடம் நோர்வே அனுசரணையாளர்கள் ஆலோசிக்கவில்லை.
எதுவித பேச்சுக்கள் குறித்தும் அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. நோர்வேயோ இதர தரப்பினரோ பேச்சுக்கான நாளையோ இடத்தையோ அறிவிக்க இயலாது.
நாம் ஒரு இறைமையுள்ள அரசாங்கம். நோர்வே தரப்பு அனுசரணையாளர்கள்தான். இது பாரதூரமான விடயம் என்று கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

ஒஸ்லோவில் ஒக்டோபரில் அமைதிப் பேச்சு: இணைத் தலைமை நாடுகள்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று இணைத் தலைமை நாடுகள் அறிவித்துள்ளது.
பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் பெனிட்டா பெரிரோ வால்ட்னெர் கூறியதாவது:
ஒக்டோபர் தொடக்கத்தில் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வையை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளுக்கு உள்ளது.
ஒக்டோபர் இறுதியில் இணைத் தலைமை நாடுகள் மீண்டும் கூடி நிலைமையை ஆராயும்.
இருதரப்பு யுத்த நிறுத்த ஓப்பந்த மீறல்கள் மற்றும் உரிமை மீறல்களானது பாரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தேவையான சமரசங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
யுத்த நிறுத்தத்துக்கு தனது இராணுவம் கீழ்படிந்து நடக்கிறது என்பதை சிறிலங்கா அரசாங்கமானது உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
ஊடகவியலாளர்களிடம் ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கூறியதாவது:
நோர்வே அனுசரணையாளர்களிடம் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருப்பதாக தெரிவித்துள்ளமையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பேச்சுக்களுக்கான முதல் நடவடிக்கையாக இருதரப்பும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சரிக்கை!!!

தமிழர் தாயகத்தின் மீதான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலும் அதனால் தமிழ் மக்கள் பாரிய அவலங்களுக்குள் தள்ளப்படுவதும் தொடர்ந்தால் இலங்கைத் தீவு முழுமைக்கும் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாதது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்சுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் மின்னஞ்சல் ஊடாக அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

கேள்வி: வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து நடத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை என்ன?

பதில்: சிறிலங்கா இராணுவம் தனது வலிந்த தாக்குதலைத் தொடர்ந்தால்- யுத்த நிறுத்த மிகவும் பாரதூரமான வகையில் தொடர்ந்து மீறினால் எதிர்பாராதவிதமாக தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாறி தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர். இது ஒரு முழு அளவிலான யுத்தத்துக்குச் செல்ல நேரிடும் என்று நாம் கருதுகிறோம்.

கேள்வி: யுத்த நிறுத்த ஒப்பந்தம் முற்றாக செத்துவிட்டதா? அதனை செல்லுபடியற்றதாக்குவது குறித்து விடுதலைப் இப்போது பரிசீலிக்கின்றீர்களா?

பதில்: சிறிலங்கா இராணுவமானது தனது வலிந்த தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்வதும் தமிழர் தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதுமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அர்த்தமற்றது என்று நாம் கருத வேண்டியதாகும். இருந்தபோதும் அனுசரணையாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தரப்பினர் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில் முனைப்புடன் உள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக அனுசரணையாளர்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அனுசரணையாளர்கள் மீண்டும் பேச்சுக்கள் நடத்த புலிகள் தயாராக உள்ளனரா?

பதில்: பேச்சுக்கள் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளனர். இருப்பினும் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை முழுமையாக மதித்துச் செயற்படுத்தினால்தான் பேச்சுக்களுக்கான சந்தர்ப்பங்கள் வலுப்படும்.

கேள்வி: தற்போதைய யுத்த நிலைமையை எப்படி நிறுத்துவது?

பதில்: தற்போதைய யுத்த நிறுத்தமானது இருதசாப்த கால யுத்தம் நடைபெற்று வந்த இந்தத் தீவில் அமைதியை உருவாக்க பாரிய பங்களிப்புச் செய்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகாலம் முழு அளவிலான யுத்தம் நடைபெறுவதைத் தடுக்க உதவியுள்ளது. புறத்தோற்றத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனுசரணையாளர்களின் முயற்சியும் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமானது 100 விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படும்போது தற்போதைய நிலைமையானது முடிவுக்கு வரும்.

கேள்வி: தமிழர் தாயகக் கோட்பாட்டை மகிந்த ராஜபக்ச நிராகரித்திருப்பதன் மூலம் இந்த அரசாங்கத்துடனான அமைதிப் பேச்சுகள் தோல்வியடையும் என்று கருதியுள்ளீர்களா?

பதில்: பரிசீலனைகளுக்கு அப்பால் எது உதவும்- எது உதவாது என்பவற்றை நடைமுறையில்தான் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் அத்தகைய ஒரு உண்மையான- நடைமுறைச் சாத்தியமான நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தாக வேண்டும். அந்த நடைமுறைச் சாத்தியமான நிலைமை உருவாவதற்கான சந்தர்ப்பங்களை நாம் அனைவரும் தேடுவதே அர்த்தமுள்ளதாக இருக்கும். மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமான நிலையில் உள்ளார். தமிழ் மக்களினது உரிமையை எவராலும் மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்கின்றனர். ஆகையால் இது விடயத்தில் ஒரு நாகரீகமான நிலைப்பாட்டை மகிந்தவும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கேள்வி: சம்பூரிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகாவிட்டால், புலிகளின் நிலை என்ன?

பதில்: யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் ஆக்கிரமித்துள்ளது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழான எமது நிர்வாகப் பகுதிகளை மீட்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: புலிகள் மீதான தாக்குதலை இராணுவம் நடத்தினால் கொழும்புக்கும் யுத்தம் விரிவடையுமா?

பதில்: தமிழர் தாயகப் பிரதேசம் முழுமைக்கும் ஒரு கொடூரமான யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் நடத்தி, தமிழர் தாயகத்திலே வாழுகிற எம்மக்களை பாரிய அவலங்களுக்குள் தள்ளிக் கொண்டிருந்தால் இந்த யுத்தமானது இந்தத் தீவு முழுமைக்கும் விரிவடையும் என்றே நான் கருதுகிறேன். அது தவிர்க்க முடியாதது என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

Monday, September 11, 2006

சிறீலங்காவிற்கு இணைத்தலைமை நாடுகளின் அச்சுறுத்தல்.

மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசுப் படைகளைக் குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் கூட்டத்தொடரில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்படவிருக்கிறது.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அதன் லண்டன் செய்தி யாளர் அனுப்பிய செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கொழும் புக்கான தூதர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டதன் விளைவாக இந்த நகர்வு முன் னெடுக்கபடுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இந்த முயற்சியின் ஆரம்பக் கட்டக் கலந்தாலோசனை கடந்த புதனன்று பிர ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் "ஆசியாவுக்கான கமிட்டி'யின்
அதிகாரிகள் சந்திப்பின்போது இடம் பெற்றதாக பிரஸல்ஸில் இலங்கை விவகாரத் து டன் தொடர்புபட்ட இராஜதந்திர வட்டாரங் கள் தெரிவித்தன.
இலங்கையைக் கடுமையாக விமர்சிக்கும் பிரேரணை ஒன்றை முன்வைக்க அக்கமிட்டி ஏகமனதாகத் தீர்மானித்தது.
இலங்கைப் பிணக்குக்கு அடிப்படையான சிக்கல்களைத் தீர்த்துவைப்பதற்குத் தேவை யான போதுமான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை தவறிவிட்டது என்ற தீவிர மான கருத்து நிலைப்பாடு அந்த அதிகாரி கள் மட்டத்தில் நிலவுவதால் சாட்டையடி கொடுப்பதற்கான நேரம் இது என அவர்கள் கருதுகின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையின் பிந்திய போர்க்கால நிலைமை குறித்து ஆராய்வதற்காக இலங் கைக்கு உதவும் நாடுகளின் இணைத்தலை மைகள் இவ்வாரம் பிரஸல்ஸில் கூடும்போது, மேற்படி பிரேரணையின் நகல் வடிவம் குறித்து அந்த இணைத் தலைமைகளோடும் விரிவாக ஆராயப்படக் கூடும்.
இனப்பிரச்சினைக்கான அனுசரணைத் தரப்பான நோர்வேயும், ஐரோப்பிய ஒன்றி யமும் அந்த இணைத் தலைமைகளில் இடம் பெற்றுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நோர்வே இடம்பெறாவிட்டாலும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசுப் படைகளை யும், அரசையும் விமர்சிக்கும் பிரேரணை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் மூலம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் முன் வைக்கச் செய்வதில் நோர்வே முழு முனைப்புடன் செயற்படுகின்றது.
அதேசமயம், விடுதலைப் புலிகளை அண்மையில் தடை செய்த ஐரோப்பிய ஒன் றியத்தை விரைவில் அத்தடையை நீக்கும் என்ற முக்கிய நிலைப்பாட்டை எடுக்கவைக் கச் செய்வதிலும் நோர்வே முனைப்பாக உள்ளது.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிச் சென்ற உல்ப் ஹென்றிக்ஸனின் அறிக்கையின் அடிப்படையிலேயே இலங்கை அரசுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை கொழும்பை மையமாகக் கொண்ட ஐரோப் பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்பாக மேற்படி இலங்கை அரசுக்கு எதி ரான பிரேரணை கொண்டுவரப்படும் போது, அதற்கு ஆதரவாக இணைத் தலைமைகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கக்கூடிய ஐக் கிய நிலைப்பாட்டை எடுக்கச் செய்யும் முயற்சியில் ஒஸ்லோ ஈடுபட்டுள்ளது. மற் றைய இரு இணைத்தலைமை நாடுகளான அமெரிக்காவையும், ஜப்பானையும் இம்முயற்சிக்கு இணங்க வைப்பதற்கும் நோர்வே முழுப் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டாமல் இராணுவ நடவடிக்கைப்போக்கில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டம் கொண்டுள் ளார் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கொழும்புத் தூதுவர்கள் பொதுவாகக் கருது கிறார்கள்.
எனவே, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இரண்டு வித அழுத்த வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் கையாள முனைகிறது.
அதில் ஒன்றே ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன் இலங்கை அரசைக் கண் டிக்கும் பிரேணையை நிறைவேற்றுவது.
மற்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங் கத்துவ நாடுகளினால் இலங்கைக்கு வழங் கப்படும் உதவிகள் வெட்டப்படும் என அச்சு றுத்துவது.
இவ்வாறு அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இணைப்பு : newstamilnet.com
Monday, 11 Sep 2006 USA

Sunday, September 10, 2006

மன்னார் வளைகுடாவில் சீனா:என்ன செய்யும் இந்தியா?

மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணிக்காக சீனாவையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் பாரிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தில் 2 ப்ளொக்குகளில் இந்தியாவும் சீனாவும் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தின் இரு பெரும் போட்டி வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன.

இராஜதந்திர களத்தில் மோதுநர்களாக உள்ள இந்த இரு வல்லரசுகளும் தங்களது ஆளுமையையும் வலுவையும் வெளிக்காட்டுவதற்கான வியூகங்களை தொடர்ச்சியாக கையாண்டு வருகின்றன.

இப்படியான நிலையில் மன்னார் வளைகுடாவில் சீனாவை சிறிலங்கா இறக்கிவிட்டிருப்பது என்பது இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் விடுக்கப்பட்டிருக்கிற பாரிய அச்சுறுத்தல்தான்.

மன்னாரும் எண்ணெய் அகழாய்வும்
மன்னார் வளைகுடாவை அண்மித்திருப்பது "காவேரி பேசின்" எனப்படுகிற பாரிய எண்ணெய்படுகையாகும். காவேரி படுகையானது தமிழ்நாட்டில் 65 விழுக்காடு அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியானது தெற்கே மன்னார் பிரதேசத்தில் இலங்கைப் பகுதியில் 35 விழுக்காடு உள்ளது.

தமிழ்நாட்டின் காவேரிப் படுகையில் எண்ணெய் வளமிருப்பதாகவும் அதனை ரஸ்யா உறுதி செய்துள்ளதாகவும் கடந்த 1956 ஆம் ஆண்டு யூன் 12ஆம் நாளன்று இந்திய அமைச்சர் கே.டி.மாலவியா பெங்களுரில் அறிவித்தார். அதன் பின்னர் இந்தியாவின் பிரதான எண்ணெய் படுகைகளில் ஒன்றாக காவேரிப்படுகை உருவெடுத்தது.

ஈரானிய எல்லையோரம் பாகிஸ்தானில் உள்ள கத்வார் துறைமுகத்தை பெருந்தொகையில் உருவாக்கி அரபிக் கடல் பகுதியிலும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலை சீனா ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான ஒரு முற்றுகைப் பின்னலில் இந்தியாவை சுற்றி சீனா நிற்கிறது.
இந்தியாவின் பாரிய சந்தையாகக் கருதப்படுகிற தென்னிந்தியாவை இலக்கு வைத்துத்தான் ஏற்கனவே சிறிலங்காவில் சீனா முதலீடு செய்து வருகிறது.

தமிழீழ மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தெரிவித்திருந்தது போல், தென்னிந்திய சந்தையினூடாக சீனாவுக்கு கிடைக்கப் போகும் இலாபத்தை கணக்கிடுகையில் சிறிலங்காவில் சீனா செய்யும் செலவானது ஒரு "முதலீடு"தான்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் தென்னிந்தியாவை எளிதில் அவதானிக்கக் கூடிய- இந்தியப் பாதுகாப்புத்துறையின் மையமாக விளங்கக் கூடிய தென்னிந்தியாவை அவதானிக்கக் கூடிய- ஊடுருவக்கூடிய வாய்ப்புள்ள மன்னாரில்தான் சீனாவை சிறிலங்கா அனுமதித்திருக்கிறது.

இந்தியாவும் சிறிலங்காவும்
இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களும் இந்திய பிரதேசத்தில் வாழுகிற தமிழர்களும் தொப்புள்கொடி இரத்த உறவுகள். வரலாற்றுக் காலங்களில் தமிழர் இராச்சியங்களும் சிங்களவர் இராச்சியங்களும் வெவ்வேறாக இருந்தமையால் தமிழ்நாட்டுடனான தமிழீழ இராச்சியங்களின் உறவானது நல்லுறவாக இருந்தது.
ஆனால் இங்கிலாந்து நாட்டவரின் காலனி ஆதிக்க முடிவின் கீழ் நிறைவேற்றப்பட்ட அரச அதிகார மாற்றத்தில் சிங்களவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தமிழர்கள் வாழ வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலும் தமிழ் மன்னர்களால் நிர்வகிக்கப்பட்ட பிரதேசங்களும், ஆங்கிலேயர் உள்ளிட்ட அன்னியர் வருகையால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியப் பகுதியாக்கப்பட்டது.
இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இருதரப்புக்கும் எந்தவித நல்லுறவுக் காலம் என்பது எப்போதும் இருந்ததாக இல்லை.
இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி லெப். கேணல் தாக்குர் குல்தீப் எஸ்.லுத்ரா தனது கட்டுரை ஒன்றில் இந்தியாவுக்கு எதிரான சில சிறிலங்காவின் நடவடிக்கைகளை இப்படிப் பட்டியலிடுகிறார்....

- 1977 ஆம் ஆண்டுக்கும் 1983 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க பாகிஸ்தானிடமிருந்தும் இஸ்ரேலிடமிருந்தும் சிறிலங்கா ஆயுதக் கொள்வனவு செய்தத
- சிறிலங்காவின் மேற்குக் கடலோரப் பகுதியான சிலாபத்தில் வொய்ஸ் ஒப் ஆப் அமெரிக்கா ஒளிபரப்புக்கான வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்தது. அது பெயரளவிலான ஒளிபரப்பு. ஆனால் இலத்திரனியல் உளவுப் பணிகளுக்காக அமைக்கப்பட்டத
- திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளை சீரமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு சிறிலங்கா ஒப்புதல் அளித்தது. இதற்காக இந்தியாவின் ஒப்பந்த கோரலானது சிறப்பாக இருந்தபோதும் அமெரிக்க நிறுவனத்தை அனுமதித்தது.
- இந்தியத் தலைவர்களை சிறிலங்கா தலைவர்கள் இழிவுபடுத்தும் செயலையும் செய்தனர். உதாரணமாக பிரேமதாசவை நரசிம்மராவ் சந்திக்கச் சென்றபோது தேவையின்றி காக்க வைத்திருந்தனர் என்று பட்டியலிடுகிறார்.
மேலும்
1947-48 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிவிட்டு அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் சேர்.ஜொன் கொத்தலாவல, பாகிஸ்தானை ஆதரித்தார்.

இதே "நடுநிலை" நிலைப்பாடுதான் 1962 ஆம் ஆண்டு இந்திய-சீன யுத்தத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவினால் உருவாக்கப்பட்ட வங்கதேசத்தை 1972 ஆம் ஆண்டு வரை சிறிலங்கா அங்கீகரிக்க மறுத்தே வந்தது.
அண்டை நாடான இந்தியாவுக்கு எதிரி நாடுகளாக- யுத்த களத்திலே மோதிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனேயே நல்லுறவு கொண்ட நாடாக சிறிலங்கா தொடர்ச்சியாக இன்னமும் இருந்து வருகிறது.

தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவிடமிருந்து தமக்கு இராணுவ உதவி கிடைக்கவில்லை என்றதும் சிறிலங்காவில் உள்ள இந்திய நிறுவனங்களை வெளியேற்ற முயற்சிப்பதும், இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தானுக்கு இராணுவ தளம் அமைக்க உதவுவதுமான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவது என்பது சிங்களத்தின் வரலாற்றுப் புத்திதான்.

சிறிலங்காவும் சீனாவும்
சிறிலங்காவுக்கும் சீனாவுக்குமான நல்லுறவானது 1952 ஆம் ஆண்டு அரிசி மற்றும் ரப்பர் வர்த்தகத்தினூடாகத் தொடங்குகிறது.
1957 ஆம் ஆண்டுகளில் இரு நாடுகள் என்கிற அடிப்படையிலான இராஜதந்திர உறவாக வளரத் தொடங்கியது இது.
1961 ஆம் ஆண்டு திருமதி பண்டாரநாயக்க சீனா பயணம் மேற்கொண்டார். 1964 ஆம் ஆண்டு அப்போதைய சீனாவின் அரச தலைவர் சிறிலங்காவுக்கு நல்லுறவுப் பயணம் மேற்கொண்டார்.

1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழகம் அதிர்ந்தது. தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். முழுமையாகவே தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார். தமிழீழத்தின் மூலை முடுக்கெல்லாம் பேரெழுச்சியும் கொந்தளிப்புமாக இருந்தது. சிறிலங்கா அரசாங்கம் மீது சீற்றத்துடன் இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் அப்போது ஏற்பட்ட சூழ்நிலைக்கு அமைவாக தமிழர் போராட்டத்தை ஆதரித்து நின்றது.
தமிழீழத்தின் ஆயுதப் போராட்டத்துக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்தது. சிங்களம் நடுங்கிப் போனது. அப்போதைய அரச தலைவர் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்த்தன வெளிநாடுகளின் உதவி கோரி ஓடிப்போனார். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, தென்கொரியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என ஒட்டுமொத்த தென்கிழக்காசிய நாடுகளிடம் முட்டிப் பார்த்தார். இதில் சீனாதான் ஆதரவாக நின்றது.

ஜே.ஆர். அத்துடன் நிற்கவில்லை.
தனது வெளிவிவகார அமைச்சராக ஏ.சி.எஸ். ஹமீதை அமெரிக்காவின் இராணுவ உதவி கோரி அனுப்பினார். மலேசியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். இதற்கும் அப்பால் 1984 ஆம் ஆண்டு யூன் 14 ஆம் நாளன்று ஜே.ஆர். ஜயவர்த்தனவே சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு நேரடியாகச் சென்று பேச்சுக்களை நடத்தினார். சீனாவின் அரச தலைவராக இருந்த லி சியான் நன்னிடம் புலம்பித் தள்ளினார். சீனாவின் பிரதமராக இருந்த ஜயோ ஜிங் யங்கிடமும் பேசினார்.

இந்தியாவுடன் மல்லுக்கு நின்ற சீனா இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறிலங்காவை ஆதரித்து நின்றது.

சீனாவுக்கான கதவுகளை அகலத்திறந்து வைப்பதாகக் கூறி கடற்படைக்கான இராணுவ உதவிகள் வேண்டும் என்றும் கேட்டார். சீனாவின் சக்திவாய்ந்த நபராக இருந்த கம்யூனிச இராணுவத்தின் தலைவர் டெங்க் ஜியாபோங்கையும் ஜயவர்த்தனா சந்தித்துப் பேசினார்.
ஜயவர்த்தன மற்றும் அவரது சகோதரரின் பயணத்திற்குப் பின்னர்தான் சிறிலங்காவுக்கான தனது ஆயுத உதவியை பெருந்தொகையாக சீனம் வழங்கியது. சீனா குழுவினரும் 1984 ஆம் ஆண்டு யூலையில் கொழும்பு வந்தது. அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத் முதலியும் 1985 ஆம் ஆண்டு யூலை சீனா சென்றார்.

1984, 1990 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளின் இருதரப்பு பயணங்களினூடாக சீனாவும் சிறிலங்கா உறவில் மிக நெருக்கமான உறவு வளர்ந்து மிகப் பாரிய ஆயுத உறவாக விரிவடைந்தது.

2001 ஆம் ஆண்டில் சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டு மதிப்பானது 13 மில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்ந்தது.

மன்னார் பிரதேசத்தில் சேதுக்கால்வாய் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தின் வர்த்தகத்துக்கு பேரிழப்பு ஏற்படும் என்ற நிலையில் சேதுக்கால்வாய் திட்டத்துக்குப் போட்டியாக அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்துக் கொண்டிருக்கிறது சீனா என்கிற வகையில் சீனாவும் சிறிலங்காவும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன.

ஆம். சீனாதான் இப்போது சிறிலங்காவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலன்.

(பாகிஸ்தான், சிறிலங்கா இடையேயான உறவு நிலை குறித்த புதினத்தின் செய்திகளையும் இந்தப் பின்னணியில் படிப்பாளர்கள் உள்வாங்கிக் கொள்ளவும்)

இந்தியா செய்ய வேண்டியது என்ன?
இந்தியா ஒரு நாடாக உருவாக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் பிரதேச பாதுகாப்பு நலன் கருதி நேபாளம், சிக்கிம், பூட்டான், மாலைதீவு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை மறைமுகமாக தன் வசமே இந்தியா இன்றளவும் வைத்திருக்கிறது. சிறிலங்காவைப் பொறுத்தவரையில் எச்சரிக்கை மனோநிலையில் விட்டு வைத்திருந்தது.

வங்கதேசத்தின் போரின்போது பாகிஸ்தானுக்கு சிறிலங்கா பகிரங்கமாக உதவி செய்து தனது "துணிச்சலை' வெளிப்படுத்திக் கொண்டது.

1980 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் தொடக்க உரையில், "கடந்த காலத்தில் இந்து சமுத்திரமானது ஆங்கிலக்காரர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இன்று இப்பிராந்தியம் ஓர் அபாயகரமான கொந்தளிப்பாகக் காட்சியளிக்கிறது. இந்து சமுத்திரத்தில் கட்டு மீறியளவு அதிகரித்து வருகின்ற தீவிர இராணுவ மயமாக்கத்தின் வேகமானது 5,600 கிலோ மீற்றர் நீளமான இந்தியாவின் கடற்கரையோர எல்லைப்புறப் பாதுகாப்பை மிகப் பலவீனமாதாக ஆக்கியுள்ளது. எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அந்நிய நாடுகளின் இராணுவத் தளங்கள் இப்பிராந்தியத்தில் அமைந்திருப்பதையும் இப்பிராந்தியத்தில் அந்நிய யுத்தக் கப்பல்கள் பவனி வருவதையும் நியாயப்படுத்தக் கூடிய எந்த ஒரு கோட்பாட்டினையும் எம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பியவர் இந்திரா காந்தி அம்மையார்.

இந்திரா காலத்தில் 1981 ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார அமைச்சின் ஆண்டு அறிக்கையில், உலகப் பதற்ற நிலையின் மையம் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது இந்து சமுத்திரத்தில் கட்டுமீறி நிர்மாணிக்கப்படுகின்ற இராணுவ, கடற்படைத் தளங்களும் புதிய அணிச்சேர்வுக்கான தேடல்களும் மேற்காசியாவில் உள்ள பொதுவான பதற்ற நிலைமையும் பாகிஸ்தான் உட்பட இந்நாடுகளுக்கு விநியோகப்படும் நவீன ரக ஆயுதங்களும் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இந்தியாவின் பாதுகாப்பை பெரிதும் பாதுகாப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் அமைந்துள்ளன என்று எச்சரித்தது.

அதேபோல் 1980-1981 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையிலும் கூட, "டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள இராணுவத் தளம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன் இப்பிராந்தியத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது" என்று அமெரிக்காவை அச்சுறுத்தியது.
திருகோணமலை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் குதங்கள் (கிடங்குகளை) சீர்படுத்தும் பணியூடாகவும் வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா வானொலித் தளம் அமைப்பதற்கும் அமெரிக்காவுக்கு சிறிலங்கா சமிக்ஞை கொடுத்த போதும் அதிரடியாக பகிரங்கமாக இந்திரா அம்மையார் நிலைப்பாடு மேற்கொண்டார்.

இந்திராவின் கடுமையான நிலைப்பாட்டினால் திக்கித் திணறிப் போன சிறிலங்கா அமெரிக்காவிடமும் சரணாகதி அடையத் தவறவில்லை. அப்போதைய அமெரிக்க அரச தலைவர் றீகனுடன் பேச்சுக்கள் நடத்தினார் ஜயவர்த்தன. அமெரிக்காவிடம் இந்தியாவை காட்டிக் கொடுத்து இராணுவ உதவி கோரினார். அமெரிக்காவுக்கு வானொலி ஒளிபரப்புத் தளம் என்று சொல்லப்படுகிற உளவுத்தளம் அமைக்க திருகோணமலையில் 250 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு வந்தார் ஜயவர்த்தன.

திருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படுகிற செய்தி அறிந்த இந்திரா அம்மையார், இந்திய நாடாளுமன்றத்திலேயே கடுமையாக சிறிலங்கா எச்சரித்தார். வேறு வழியின்றி சிறிலங்காவும் அமெரிக்காவும் வாலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டன.
இந்திராவைத் தொடர்ந்து அவரது மகன் ராஜீவ் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலும் இது இன்னமும் வலுவடைந்து ஒப்பந்த அளவிற்கும் சென்றது.

திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்கக் கூடாது என்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலேயே இடம்பெற்றது.
ஆனால் இந்திரா காந்தியைப் போல் இந்திய அரச கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. இந்திரா காலத்தில் இலங்கைப் பிரச்சனையில் தூதுவராக செயற்பட்ட ஜி.பார்த்தசாரதி மாற்றப்பட்டு அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு குழப்பகரமான நபரான ரொமேஷ் பண்டாரி நியமிக்கப்பட்டார்.

எந்த அமெரிக்காவை எந்த இந்திரா எதிர்த்து முழக்கமிட்டு வந்தாரோ அந்த இந்திராவின் மகன் ராஜீவ் அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலேயே சிறப்பிக்கப்பட்டு குளிரூட்டப்பட்டார்.

சிறிலங்காவோ சும்மாவும் இருக்கவில்லை. ராஜீவ் வலுவற்றவர் என்பதை உணர்ந்து கொண்ட சிறிலங்கா அரசாங்கமும், ராஜீவை பலவீனப்படுத்திய இந்திய கொள்கை வகுப்பாளர் குழுவும் கரம் கோர்க்க தடுமாற்றமுள்ள பிரதமராக ராஜீவ் மாற்றப்பட்டார்.

அதன் பின்னர் அரசியலின் போக்குகள் மாறிவிட்டன.
இலங்கை இனப்பிரச்சனையில் தமிழ்நாட்டின் எழுச்சியை மனதில் கொண்டு அரசியல் ரீதியாக காய்கள் நகர்த்தப்பட்டு- அதற்கு அமைவாக ஒட்டுமொத்த இந்திய அரச கட்டமைப்பும் இயங்கி வந்த முன்னைய முதிர்வு நிலைமை மாறி கொள்கை வகுப்பாளர்களின் கோட்பாடே இந்திய அரசின் கோட்பாடாக ஏறக்குறைய 15 ஆண்டு காலத்துக்கும் அதிகமாக உருவெடுத்து இறுக்கமடைந்து நிற்கிறது.
இந்த இறுக்கமான நிலைப்பாடு என்பது இந்தியாவை எதிர்த்து- இந்தியாவின் எதிரி சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிற சிறிலங்காவுக்குச் சார்பானதாக இருக்கிறது என்பதுதான் வேடிக்கை.

ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக எதிரி நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும் போட்டி நாடான சீனாவும் ஒருங்கிணைந்து சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன.

சிறிலங்கா-சீனா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா தொடர்பில் இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி லெப். கேணல் தாக்குர் குல்தீப் எஸ். லுத்ரா எழுதிய மற்றொரு கட்டுரையில் இடம்பெற்றுள்ள விடயங்களை இந்த விடயத்துக்குச் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்கும் என கருதுகிறோம்.
அவர் கள எதிர்கூறல்கள் என்ற அடிப்படையில் முன்வைக்கிறார்....

- சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்படும் போது சிறிலங்காவனது அமெரிக்காவின் பக்கம் நிற்குமாக இருந்தால் இந்த பிரதேசம் பாரிய போர்க்களமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக தனது டிகோ கார்சியா, சிறிலங்காவின் கொழும்பு, திருகோணமலை மற்றும் சிங்கப்பூர் தளங்களிலிருந்து அமெரிக்கா இயங்கும். அந்த நிலையில் சிறிலங்கா- அமெரிக்கக் கூட்டை எதிர்ப்பதில் பிரதான பங்கேற்பாளர்களாக ஈழத் தமிழர்கள்தான் இருப்பார்கள.

- ஆசிய பிராந்திய அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்படும் நிலையில் சிறிலங்காவானது சீனாவின் பக்கம் நிற்கும் போது பாகிஸ்தானும் அந்த அணியில் இணைந்து முக்கூட்டு உருவாகும். அப்போது இந்தியாவின் கப்பற்படையை அந்த அணி வீழ்த்தும் சாத்தியம் உள்ளது. அந்த அணிக்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட களமுனைகளை இந்தியா உருவாக்க வேண்டியதிருக்கும்.

- பிரதேச அளவில் சிறிலங்காவும் பாகிஸ்தானும் இணைந்து நிற்பதானது இந்தியாவுக்கு சிக்கலானதாக இருக்கும். அந்த நிலைமையில் இலங்கையில் உள்ள தமிழர்களை இந்தியா ஆதரிக்க வேண்டும். சிறிலங்காவோடு சீனா இணையாமல் திருகோணமலை துறைமுகத்தை இந்தியா காப்பாற்ற வேண்டியதிருக்கும் என்கிறார் அவர்.

ஈழத் தமிழர்களை ஆதரித்து இந்திரா அம்மையார் நின்ற நிலைப்பாடு மிகச் சரியானது என்பதையும் ஈழத் தமிழர்கள்தான் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதையும் ஒரு "கோட்பாடாக" அன்று இந்திரா புரிந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் தற்போதும் எழுந்திருக்கிற 1980-களின் எழுச்சியானது இந்திய கூட்டரசு அரசியலில் ஒருவித தாக்கத்தை உருவாக்கியிருக்கிறதுதான்.

ஆனால் இறுக்கமடைந்து நிற்கும் ஒரு வினோதமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்களோ குழப்பவாதத்திலும் இந்திய இறைமைக்கு எதிராகவுமே செயற்பட்டு வருகின்றனர்.
இப்போதும் தமிழீழத்தை இந்தியாவின் "றோ" முற்றுகையிட்டு குழப்பகரமான வேலைகளைச் செய்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சக்திகள் இருப்பதான தோற்றத்தை உருவாக்குவதற்காக இப்பவும் இந்தியாவின் "றோ" வானது, ஈ.என்.டி.எல்.எஃப். போன்ற குழுக்களுக்கு ஆட்சேர்க்கும் பணியில் தமிழ்நாட்டில் ஈடுபட்டு வருகிறது.
தன்னால் எந்த வகையான குழப்பங்களை எல்லாம் ஈழத் தமிழ் மண்ணில் உருவாக்க முடியுமோ அப்படியான செயற்பாடுகள் அனைத்தையும் "றோ" அதிகரித்துள்ளது.
ஆனால் இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடானது வினோதமானது மட்டுமல்ல- இந்தியாவின் இறைமைக்கே விரோதமானதுதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் எந்த சிறிலங்காவுக்கு ராடார்களை அள்ளிக் கொடுக்க அறிவுறுத்தினார்களோ அந்த சிறிலங்காவேதான் இந்தியாவின் மன்னார் பிரதேசத்திலேயே போட்டி நாடான சீனாவை அகழ்வுப் பணிக்கு அனுமதித்திருக்கிறது.

இந்திய இறைமைக் காப்பாளர்களாக இருக்க வேண்டிய "றோ" போன்ற கொள்கை வகுப்புக் கோட்பாட்டாளர்கள் ஆயுத சந்தையில் இறைமையை கூவி விற்கும் கேடாளர்களாக் மாறியிருக்கிறார்கள்.

சிறிலங்கா விடயத்தில் முன்னைய இந்திய பிரதமர் "இந்திரா"வின் நிலைப்பாட்டை- இந்தியா மேற்கொள்வதுதான் தனது இறைமைக்கு விடுக்கப்பட்டிருக்கிற சவாலை முறியடிப்பதாக இருக்கும் என்கிற வரலாற்று ரீதியான கோட்பாட்டை "மன்னார்- சீனா" உள்நுழைவு இனியேனும் புரியவைக்கட்டும்.
நன்றி>புதினம்.

Saturday, September 09, 2006

வைகோவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு.

கேள்வி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்: காலப்போக்கில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.
கேள்வி: இடையில் இந்தியா தீர்வுத்திட்டம் ஒன்று கொடுத்ததாக வெளியான தகவல்; குறித்து?
பதில்: இறுதியில் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்தத்தீர்வு அமையும் என நினைக்கிறோம். அப்படி இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். இதைத் தவிர இவ்விடயம் குறித்து விசேடமாக மேற்கொண்டு கூறுவதற்கு ஒன்றுமில்லை.
கேள்வி: தமிழக முதல்வர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் உட்பட மற்றைய தமிழகத் தலைவர்களைச் சந்திக்கப் போகிறீர்களா?

பதில்: இரண்டொரு நாட்களில் தமிழகத் தலைவர்கள் அனைவரையும் சந்திப்போம். அதேநேரம் முதல்வரை சந்திக்க நீங்கள் நேரம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க சம்பந்தன் மறுத்துவிட்டார். தமிழகத்தில் உள்ள இதர அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரையும் தாம் இரண்டொரு நாட்களில் சந்திப்பு பேசவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராவுக்கு வைகோ கண்டனம்

இதேவேளை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் முடிந்தவுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடக்கலாம்.

சிங்கள அரசின் இனவெறியும் தமிழர்களுக்கு எதிரான அராஜக மனப்பான்மையும் சிறிலங்கா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் வாக்குமூலத்தில் வெளிப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தனது இராஜிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் செயற்பட்டுள்ளார். அதற்காக அவரைக் குறை கூறிய விதம் கண்டனத்துக்குரிய என்றார்.
வைகோவுடனான சந்திப்பில் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதியை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 8 ஆம் திகதி சந்திப்பது என்றும் அதைத் தொடர்ந்து அன்று மாலையோ அல்லது 9 ஆம் திகதி காலையிலோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவது என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அத்திட்டத்தின் படி தமிழக முதல்வரைச் சந்திக்க இயலவில்லை என்றும் தெரிகிறது.
தமிழக முதல்வரைச் சந்திக்க முன் அனுமதி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாறுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் வைகோ மூலமாக பிரதமரைச் சந்திக்கும் அவர்களது திட்டம் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் அதிருப்தி அடைந்ததாகவம் இதன் விளைவாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தள்ளிப்போட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி மதியம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிவு எடுத்திருப்பதாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோ பிரதமரின் தனிச்செயலாளருடன் பேசி இச்சந்திப்புக்கு அனுமதி பெற்றுவிட்டதாகவும் 8 ஆம் திகதி மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பார் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால் மாகராஸ்டிரா குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் கியூபா பயணம் குறித்த கடைசி நிமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் பிரதமருடனான சந்திப்பு கைகழுவப்பட்டதாககத் தெரிகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைவில் தாம் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழக முதல்வரைச் சந்திப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
தமிழகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தேசிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆதாரம்: வீரகேசரி.

திருமலை நோக்கி கப்பல் 600 தமிழ் மக்கள் மனிதகேடயங்கள்.

படையினர் 1200 பேருடன் திருமலை நோக்கி கப்பல் 600 தமிழ் மக்கள் மனிதகேடயங்கள்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து லங்கா முடித எனும் பெயருடைய கப்பல் ஒன்று 1200 படையினரை ஏற்றிக் கொண்டு 6 டோராக்கள் பாதுகாப்பு வழங்க சர்வதேச கடல் வழியாக திருமலை நோக்கி செல்கிறது.

படையினரிற்கு பாதுகாப்பாக 600 தமிழ் மக்கள் மனிதக் கேடயங்களாக கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத் தமிழ் மக்கள் அனைவரும் யாழ்பாணத்தில் இருந்து தென்இலங்கைக்கு செல்லவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

இந்தியா, சிறிலங்கா அரசியலில் தலையிடக்கூடாது: அனுரா

சிறிலங்கா அரசியலில் இந்திய தூதுவர் நிருபமா ராவ் தலையிடுவதை சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது:
இனப்பிரச்சனைக்கு அரசியல் வழித்தீர்வுதான் காணப்பட வேண்டும். இராணுவ நடவடிக்கை தேவையில்லை.
இப்போது புலியை காயப்படுத்திருயிருக்கிறீர்கள். புலியை காயப்படுத்தினால் அது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அது திருப்பித் தாக்கும்.
7 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் சரவதேச தலைவர்கள் பட்டியலில் 32 ஆம் இடத்திலிருந்து 63 ஆம் இடத்துக்கு ஜோர்ஜ் புஸ் தள்ளப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு யூலை மாதத்தில் ரொனி பிளேயர் பொறுப்பிலிருந்து விலக உள்ளார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் அவர்களது மதிப்பு குறைந்துவிட்டன.
இனப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களும் ஒரு முக்கியமான அங்கம். 1938 ஆம் ஆண்டே கூட்டரசு முறையை பண்டாரநாயக்க வலியுறுத்தினார். கூட்டரசு முறையை வலியுறுத்திய முதல் சிங்களர் அவர்.
சம்பூரை கைப்பற்றியிருக்கலாம். ஆனால் அதனை தக்கவைக்கும் திறமையோடு இருக்க வேண்டும்.
ஒரு நாட்டை பிடிப்பது எளிது. அதனைத் தக்கவைப்பது கடினம் என்பார் நெப்போலியன்.
பாகிஸ்தானிய முன்னாள் தூதுவர் பசீர் வாலி மொகமெட் தன் மீதான தாக்குதலுக்கு இந்திய றோவை குற்றம்சாட்டியுள்ளார். எதுவித ஆதாரமுமில்லாமல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியலில் இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் தேவையில்லாமல் தலையிடுகிறார். எமது நாட்டை நாம் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் தூதரகப் பணியை பார்க்கவும்.
இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் முன்னைய இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிட் நடவடிக்கையால் ராஜீவ் காந்தியை விலை கொடுக்க நேரிட்டது.
சிறிலங்கா அரசாங்கம் யாருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை இந்தியத் தூதுவர் கூறக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட மகிந்த ராஜபக்ச ஏற்கனவே முடிவு செய்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவும் புத்திசாலித்தனமாக இந்த நட்புறவை அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார் அனுரா பண்டாரநாயக்க.
நன்றி>புதினம்.