Wednesday, September 06, 2006

நிலைமைகளைக் கட்டுப்படுத்த சர்வதேசசமூகம் தவறிவிட்டது.

இலங்கை நிலைமைகளைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் தவறிவிட்டது என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்காவில் நிலவும் படுகேடான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் தவறியதையொட்டி அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கிறது.
சிறிலங்கா அரசின் ஆயுதப் படைகள் திருகோணமலை மாவட்ட சம்பூர் பகுதியை பலவந்தமாக இராணுவ அடிப்படையில் தம்வசப்படுத்திக்கொண்ட கொடுஞ்செயலையே இங்கு கண்டன காரணமாகக் கூறுகிறோம்.
போர் ஓய்வு ஒப்பந்தம் ஐயந்திரிபற வகுத்துக்காட்டும் எல்லைக்கோட்டை பலவந்தமாக மீறி சம்பூர் கொடும் பிடுங்கல் நடந்திருக்கிறது. இந்த நிலையைச் சீராக்கி தவறைத் திருத்தி உடனடியாக ஆவண செய்தாலன்றி ஒப்பந்தம் முற்றாகச் சீர்குலையும் சாத்தியக்கூறும் தோன்றியிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் விதிக்கும் கடப்பாடுகளை கடைப்பிடிப்பதிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதில் தவறில்லை என்று விடுதலைப் புலிகள் முடிவுசெய்யக்கூடிய ஒரு சாத்திதியக்கூறும் சம்பூர் கொடும் பிடுங்கலால் உருவாக வாய்ப்புண்டு என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விழைகின்றது.
சிறிலங்காவின் இந்த நடவடிக்கையால் வசதி ஏற்பாட்டாளர், கண்காணிப்பாளர், ஐரோப்பிய கூட்டமைப்பினர், கூட்டுத் தலைமை நாடுகள் ஆகியோர் புறம்தள்ளப்பட்டு அவமதிக்கப்பட்டு உதாசீனப்டுத்தப்பட்டிருக்கின்றனர். ஆயினும் அனைத்துலக சமுதாயம் சிறிலங்காவைக் கண்டிக்கத் தவறிவிட்டது. தண்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தவறிவிட்டது.
போர் ஓய்வு ஒப்பந்தம் படிப்படியாக நிலைகுலைந்துவிட்டது. அத்தோடு திட்டமிட்டே வேரறுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்திலிருந்து ஐ.நா பட்டயத்தை தூக்கியெறியும் வகையில் தமிழ் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுகள் வீசப்பட்டன. அனைத்துலக சமுதாயத்தின் மௌனத்தை சம்மத அறிகுறியாகக் கருத்தெடுத்த சிறிலங்காவின் வான்குண்டு வீச்சு, வேகப் பெருக்கெடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் கிராமங்களை அழித்தது.
மாவிலாறு நீர் பங்கீட்டுத்தகராறு விதலைப் புலிகளாலும் கண்காணிப்பாளராலும் சுமூகமாகத் தீர்க்கப்படும் தருணத்தை எட்டிய வேளையில் அரச ஆயுதப்படைகள் தாக்குதலைத் தொடுத்து கட்டில்லாக் கொலைகள் புரிந்து பலத்த இடப்பிறழ்வையும் தோற்றுவித்திருந்தன.
இங்கே கூட அனைத்துலக சமுதாயத்தின் மௌனம் சம்மத அறிகுறியாகத் திரிபு படுத்தப்பட்டு போர் தொடுக்கும் துணிச்சலையும் அரசிற்குக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் இலக்குகள் மீது வான் குண்டுத்தாக்குதல்களை அரசு முடுக்கிய ஆரம்ப கட்டத்தில் ஒப்பந்த மீறலை கண்காணிப்பாளர், ஐரோப்பிய கூட்டமைப்பினர், கூட்டுத் தலைமை நாடுகள் ஆகியோர் அடங்கிய அனைத்துலக சமுதாயம் கண்டிக்காது தன் கடமையிலிருந்து தவறிவிட்டதை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அனைத்துலக சமுதாயத்தின் சுரத்தற்ற போக்கே தமிழ் மக்களுக்கெதிராகக் கொடுமை புரிய சிறிலங்கா அரசைத் தூண்டியதோடு ஒப்பந்தத்தை அது மீறவும் இன்றைய உருக்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லவும் காரணமாகியது என்றும் துணிந்து கூறலாம்.
ஒப்பந்த மீறல்களை கணிப்பெடுக்க நிறுவப்பட்ட கண்காணிப்புக் குழு தனக்குரிய அச்சொட்டான பணியை விட மனிதாபிமான மீறல்களைக் கணிப்பிடுவதிலேயே சிரத்தை எடுத்தது. ஓப்பந்த மீறல்களைப் பொறுத்த வரையில் அரசுமீது குற்றம் சார்த்த கண்காணிப்புக் குழுவிற்கு என்றுமே துணிச்சல் இருந்ததில்லை.
விதிகளைக் கடைப்பிடிக்குமாறு இரண்டு பிரிவினருக்கும் பொதுவாகப் போதகம் செய்யும் நழுவல் போக்கையே அது கடைப்பிடித்தது. தங்கு தடையின்றி அரசு குற்றம் புரிய இதுவே இடமளித்தது.
இன்னொன்றை நாம் இங்கே சுட்டிக்காட்டத் தவறக்கூடாது. ஐரோப்பித் தடையே அது.
விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் அது குற்றத் தண்டக் கறைச்சேறு பூசியது. போர் ஓய்வு ஒப்பந்தம் நிலைகுலைந்து போவதற்கு அடிநாதக் காரணமும் இதுவே. மறைமுகக் காரணமும் இதுவே.
பணி முடித்துப் பிரியும் கண்காணிப்புத் தலைவர் உல்வ் கென்றிக்சன் அவர்களும் நோர்வேயின் சிறப்பு அமைதித் தூதர் ஜோன் அன்சன் பவர் அவர்களும் இதையே நீதிவழி நின்று சுட்டிக்காட்டினார்கள்.
சம்பூர் கொடும்பிடுங்கலை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு மீண்டும் கண்டிப்பதோடு சிறிலங்காவைச் சட்டத்தின் முன் நிறுத்துதற்கு வேண்டிய செவ்வையானதும் நீதியானதுமான நடவடிக்கையை அனைத்துலக சமுதாயம் மேற்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் போர் ஓய்வு ஒப்பந்தம் கைநெகிழவிடப்படாது அதைக் காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டு நிற்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

சம்பூர் சம்பவத்தை 'கொடும்பிடுங்கல்'என்று வர்ணிக்கும் அ.த.கூட்டமைப்பு மாவிலாறு நீர் தேக்கத்தின் மதகுகளை மூடியவர்களை கண்டித்து ஒரு வார்த்தை வெளியிட்டதாக தெரியவில்லை.இப்படியே ஒரு சாராருக்கு ஆதரவாக 'ஜால்ரா' அடிக்கும் கூட்டத்தில் இதுவும் ஒன்று.

அரசியல் நகர்வுகளை தப்பும் தவறுமாக செய்ய வேண்டியது...பழியை அனைத்துலக சமுதாயத்தின் மீது அல்லது இந்தியாவின் மீது போடவேண்டியது.நல்ல திட்டம்தான்.