Sunday, September 24, 2006

யாழ் மக்களை சாகடிக்கவே யாழ். ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது!!!

குண்டுகளை வீசி தமிழ் மக்களைக் கொல்வதற்கு அப்பால் ஏ-9 வீதியை மூடியதன் மூலமும் தமிழ் மக்களை சாகடிக்க சிறிலங்கா அரசாங்கம் எண்ணுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான்
அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்குமா என்பது குறித்து எனக்கு உறுதியான சந்தேகம் உள்ளது.
நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயாராக இருப்பதாக நோர்வே அனுசரணையாளர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்முறை தெரிவித்துள்ளனர். எரிக் சொல்ஹெய்ம் மற்றும் யசூகி அகாசி ஆகியோரது அறிக்கைகளின்படி சிறிலங்கா அரசாங்கமும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டதாக இருந்தது. ஆனால் எரிக் சொல்ஹெய்மின் அறிக்கை வெளியான பின் சிறிலங்கா அரசியல்வாதிகளிடமிருந்து பல்வேறு பதில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
சிறிலங்கா அரசாங்கத்தை நிபந்தனைகளைக் கைவிடுமாறு யாரும் கூற முடியாது என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்புப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நிபந்தனையற்ற பேச்சுக்கள் நடைபெறும் என்று இணைத் தலைமைத் தலைமை நாடுகள் வெளியிட்ட அறிக்கையையும் நிராகரித்துள்ளார்.
வழக்கம்போல் மகிந்த ராஜபக்ச தனது வாயை இறுக்கமாக மூடிக்கொண்டுள்ளார். மகிந்தவின் அரசாங்கம் நடத்தும் முறையே யாரும் எதனையும் செய்து கொண்டே இருக்கலாம். தவறாக இருந்தாலும் அமைதி காப்பது என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.
இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஒருபக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் கொண்ட குழுவினருடன் வெளிநாட்டுப் பயணத்தை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். மக்களுக்கான பாதிப்புகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் நிபந்தனைகளை கைவிட்டு விட்டுப் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையுடன் எமக்கு கடந்த 6 மாத காலமாக எதுவித தொடர்பும் இல்லை. இருப்பினும் ஊடகச் செய்திகளின் படி எதுவித முன் நிபந்தனைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை எவருமே ஏற்கமாட்டார்கள்.
எந்த ஒரு தமிழ் பேசுகிற தமிழரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
வேடிக்கைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தவில்லை. தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகத்தான் ஆயுதமேந்தினர். தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை எந்த ஒரு தமிழனும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.
சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல முதலில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் கற்பனையான செய்திகளைத்தான் பேசுகிறார். பொத்துவில் படுகொலை தொடர்பில்கூட தமிழீழ விடுதலைப் புலிகளைத்தான் அவர் குற்றம்சாட்டினார்.
பொத்துவிலுக்கு போய் மக்களின் கருத்தைக் கேட்கவேண்டும். ஆனால் அப்படியில்லாத ஒரு பேச்சாளர் இதான் இங்குள்ளார்.
கேகலியவோ ரட்ணசிறியோ வரவேண்டும் என்று புலிகள் கேட்கிறார்களா?

பேச்சுக்களுக்குச் செல்வது என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குழுவை அறிவிக்கின்றனர். மகிந்தவும் ஒரு குழுவை அறிவிக்கின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு ரட்ணசிறி விக்கிரமநாயக்கவோ கேகலிய ரம்புக்வெலவோதான் வரவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோருவதில்லை.
யாரை அனுப்ப வேண்டும் என்பது விடுதலைப் புலிகள் முடிவு செய்வர். கடந்த காலங்களைப் பார்த்தால், எந்த ஒரு பேச்சுவார்த்தையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நேரடியாக கலந்து கொண்டதில்லை. அவர் ஒரு குழுவை நியமிப்பார். அக்குழுவினருடன் தொடர்பில் இருப்பார். விவாதிப்பார்.
சர்வதேச பிரதிநிதிகளையும் ஊடகத்தாரையும் இரண்டொரு முறைதான் சந்தித்துள்ளனர். எங்களுடன் பல முறை சந்திப்புகளை நடாத்தியுள்ளார்.
பேச்சுக்களுக்குச் செல்லும்போது பிரபாகரன்தான் வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியாது. அரசியல்துறைப் பொறுப்பாளருடன் பேச்சு நடத்தலாம்.
வெளிநாட்டுப் படையை வரவழைத்தமைக்கு ஜே.வி.பி.தான் முதல் காரணம்
சிறிலங்காவின் வரலாற்றைப் பார்த்தால் முதலில் யார் சர்வதேச சமூகத்தை இந்த நாட்டுக்கு அழைத்தது என்பது தெரியும்.
1949 ஆம் ஆண்டு தொடக்கம் எத்தனையோ ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு செயற்படுத்தப்படாத நிலையில் தலையிடுமாறு நோர்வே தரப்பினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நோர்வே தரப்பினருடன் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சனையும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தமையால் ஐரோப்பிய ஒன்றியத்தினர் அல்லாத கண்காணிப்புக் குழுவினர் இருக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
ஆனால் பிரிகேடியர் விமல் வீரவன்ச மற்றும் அவரது மேஜர் ஜெனரல்கள்- யாரென்று சொல்ல விரும்பவில்லை அவர்களெல்லாம் சர்வதேச சமூகத்தை அழைத்தமை குறித்து பேசுகிறார்கள். பயங்கரவாதம் குறித்து பேசுகிறார்கள்.
1971ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை விமல் வீரவன்ச அறிய வேண்டும். பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க இரருந்தபோது இந்திய இராணுவம் இங்கே அழைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு வெளிநாட்டுப் படை வந்திறங்கியது அப்போதுதான். காரணம் என்னவெனில் விமல் வீரவன்ச குழுவினரால்தான்....பிரபகாரனால் அல்ல.
அதன் பின்னர் 1987ஆம் ஆண்டுதான் இந்திய அமைதிப்படை இங்கு வந்தது. அவருக்கு முன்னாள் இருந்த றோகண விஜெவீரவுக்கு இது நன்கு தெரியும். அப்போது விமல் வீரவன்ச மிகவும் இளவயதுக்காரராக இருந்திருக்கலாம்.
றோகண விஜெவீர மீது நாம் மதிப்பு வைக்கிறோம். தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை ஒப்புக்கொண்ட முதல் சிங்களத் தலைவ அவர். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அந்தப் பாதையிலிருந்து விலகிவிட்டனர்.

யாழ் அவலம்...

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய வெளிப்பாடாக இருந்தது ஏ-9 வீதி திறப்புதான். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு அப்போதைய அரசாங்கம் செயற்பட்டது.
இராணுவ நடவடிக்கை மூலமாக (ஜெயசிக்குறு) முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஏ-9 வீதியை திறக்க முயன்று என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். சிறிலங்கா இராணுவத் தரப்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் இரத்தகளரியின்றி ஏ-9 வீதியானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் திறக்கப்பட்டுவிட்டது.
தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஏ-9 வீதியை மூடியுள்ளது. ஏ-9 வீதியைத் திறப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று ஒரு மாத காலத்துக்கு முன்பே தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சரத்து 2.1-இல் ஏ-9 வீதி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்பற்ற தன்மையில் செயற்பட்டு மக்களை பாரிய துன்பத்திற்குள்ளாகியுள்ளது.
யாழில்,
ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ. 250
ஒரு கிலோ மாவின் விலை ரூ. 200
ஒரு லிற்றர் மண்ணெண்ணெய் விலை ரூ. 150
ஒரு லிற்றர் பெற்றோல் கிடைக்குமேயானால் ரூ. 500 என்ற நிலைமைதான் உள்ளது.
மருத்துவமனைகளில் பிராணவாயு கலன்களும் மருந்துகளும் பற்றாக்குறையான நிலையில் உள்ளன.
இதுவே யாழ்ப்பாணத்தின் உண்மை நிலை. ஏ-9 வீதியை மூடியிருப்பது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக மீறிய செயல்.
வடபகுதிக்குச் செல்ல முடியாமல் வவுனியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் தவிக்கின்றனர்.
ஏ-9 வீதியைத் திறக்காதிருப்பதானது தமிழ் மக்களை சாகடிக்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது.
குண்டு வீசி மக்களைக் கொல்வதற்கு அப்பால் இப்படியும் மக்களைக் கொல்கிறது சிறிலங்கா அரசாங்கம். மக்களின் வாழ்வுரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் இச்செயற்பாடானது பாரிய மனித உரிமை மீறலாகும்.
கொழும்பு நகரில் ஒவ்வொரு மூலைக்கு மூலையும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் வெள்ளை வான் குழுவினரால் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களில் இப்படியாக கடத்திக் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான ஆவணங்களை எம்மால் வெளியிட முடியும்.
இத்தகைய நிலைமைகளைத்தான் இந்தியாவிடம் எடுத்துச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சென்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களிடம் இங்குள்ள தமிழர்களின் அவலத்தைச் சொல்லுவதற்கும் அவர்கள் சென்றுள்ளனர்.
எதுவித காரணமுமின்றி பொத்துவிலில் 11 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதைப் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துரைப்பர்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை சிறிலங்கா கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைப்பது இல்லை. அப்படியான நிலையில் அது அனைத்துக் கட்சிக் கூட்டமா?
சிறிலங்கா நாடாளுமன்றில் 22 பேர் உறுப்பினர்களாக வடக்கு கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் உள்ளனர். எதுவித அழைப்பும் இந்த உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்காமல் நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகின்றீர்கள்? யாரை முட்டாளாக்குகிறீர்கள்?
இதனை இந்தியாவுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துச் செல்லுவோம். அதற்காக நாம் கடுமையாக உழைப்போம்.

எங்கே போனார்கள் முஸ்லிம் பிரதிநிதிகள்?

எனக்குத் தெரிந்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நிராகரித்தது இல்லை. இனப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காணப்படும் நிலையில் கண்டிப்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படுவர்.
தற்போது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேதான் யுத்தம் நடைபெறுகிறது. ஆகையால் தற்போதைய நிலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகளை பேச்சுக்களில் உள்ளடக்க வேண்டிய தேவையில்லை.
உண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தில் ஏராளமான முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளனர். அமைச்சர்களாக உள்ள அவர்கள் வாய்மூடி உள்ளனர்.
தங்களது இனத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறையிருக்குமானால் ஏன் அவர்கள் உண்மையை வெளிக்கொணரவில்லை?
பொத்துவில் படுகொலைக்கு யார் காரணம் என்பதை அந்த மக்கள் நன்கு அறிந்துள்ளனர். எந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது அது பற்றி பேசினார்களா? அம்பாறை மாவட்டத்திலிருந்து 5 பேர் உள்ளனர் என்று நினைக்கிறேன். எங்கே போனார்கள் அவர்கள்? என்று அந்த நேர்காணலில் ரவிராஜ் கூறியுள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: