தமிழக அரசியல் நுழையாத இடமே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் பிரதமரை சந்திக்க டில்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் விவகாரத்திலும் தமிழக அரசியல் புகுந்து விளையாடியது. விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான இந்த எம்.பி.,க்கள் இந்திய அதிகாரிகளை சந்திக்க காரணமாகயிருந்தவர் ம.தி.மு.க., தலைவர் வைகோ. எப்படியாவது இந்த எம்.பி.,க்களை நீங்கள் சந்தியுங்கள். அப்போது தான் அவர்களுடைய அரசியல் நிலைமை உங்களுக்குத் தெரியவரும் என்று பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டதால் பிரதமர் சற்று தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் சென்னையில் இந்த எம்.பி.,க்களை சந்திக்க தி.மு.க., தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். "பிரதமரைச் சந்தித்து விட்டு வாருங்கள். அப்போது உங்களை சந்திக்கிறேன்' என்று சொல்லிவிட்டாராம். டில்லிக்கு வந்த எம்.பி.,க்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்தனர். பிரதமருடன் சந்திப்பு நிச்சயம் என்று இவர்களுக்கு இந்திய அரசிலிருந்து வாக்குறுதி அளிக்கப்பட்டும், பிரதமர் சந்திப்பு நடைபெறவில்லை. வைகோ எங்கே பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவாரோ என்ற லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாகவே இந்த சந்திப்பை நிறுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இலங்கை எம்.பி.,க்கள் மத்தியிலும் அரசியல் விளையாடுகிறது. ஆறு எம்.பி.,க்கள் இந்தியா வந்தனர். ஐந்து பேர் மட்டுமே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நாராயணனைச் சந்தித்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாவது எம்.பி.,யான சிவாஜிலிங்கம் இந்தக் குழுவிலிருந்து விலக்கியே வைக்கப் பட்டார். தன் சொந்த செலவில் டில்லிக்கு வந்த சிவாஜிலிங்கம், கடந்த இரண்டு வருடங்களாக இந்த சந்திப்பிற்கு முயற்சி எடுத்து வந்தவர். ஆனால், கடைசி நேரத்தில் அவர் கழற்றிவிடப்பட்டார். இந்திய அரசு ஐந்து எம்.பி.,க்களை மட்டுமே அனுமதித்துள்ளது என்று மற்ற எம்.பி.,க்கள் சொல்ல, அவர் தனியாக சென்னைக்கு திரும்பிவிட்டார்.
Thanks:dinamalar
Sunday, September 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment