Thursday, September 21, 2006

தட்டிக்கேட்க 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - வைகோ

எந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம் அவர்களுக்கொன்று என்றால் அதைத் தட்டிக்கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கா ஆறுகோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். கரூர் மாவட்ட ம. தி. மு. க. செயல் வீரர்கள் கூட்டம் கொங்கு திருமண மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் மா. கட்டையன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, இப்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிற தி. மு. க. அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மாறாக ஊர் தோறும் ஆடம்பர விழா விளம்பரங்களில் தான் அக்கறை காட்டுகிறது. வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டத்தை கூட குடும்ப நலனுக்காக தான் கருணாநிதி செயல்படுத்துகிறார். மக்கள் வரிப் பணத்தில் இலட்சணக்கணக்கான டி.வி. க்களை கொடுத்துவிட்டு குடும்ப கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான இலாபமடைய பார்க்கிறார். அறிவியல் முறையில் மக்களை ஏமாற்றத் தெரிந்தவர் கருணாநிதி.
ஈழத்தில் தமிழ் குழந்தைகள் படுபயங்கரமாக கொல்லப்பட்டபோது அதை கண்டித்து டில்லியில் இலங்கை தூதரகம் முன் எழுச்சியான ஆர்ப்பாட்டம் செய்து 6 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்தோம். ஆனால் எங்களின் ஈழத் தமிழர் ஆதரவை விளம்பரம் என்கிறார் கருணாநிதி. ஆயிரம் கருணாநிதி வந்தாலும் ம. தி. மு. க. வை ஒன்றும் செய்ய முடியாது.
நான் வவுனியா சென்று வந்ததை கூட கிண்டல் செய்தார். என் கடிதத்தை தணிக்கை செய்து சட்ட சபையில் படித்தார். அவர் தணிக்கை செய்த பகுதியை கூறுகிறேன். சிங்கள இராணுவத்தின் கைகளில் சிக்கி பிடிபட நேர்ந்தால் தி. மு. க. அரசுக்கோ மத்திய அரசுக்கோ சேதாரம் ஏற்படாமல் என்னை நான் பலியிட்டுக் கொள்வேன் என்ற 4 வரியை நீக்கி விட்டார்.
அந்த வரியை சட்ட சபையில் படித்தால் என் மீது அனுதாபம் ஏற்படும் என்று பயந்து அப்படி செய்து உள்ளார். எந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் செயல் வீரர்கள் நன்கு செயல்பட்டு கழகத்திற்கு வெற்றியை தேடித்தர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி>பதிவு.

No comments: