Tuesday, September 05, 2006

சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள்.

திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும்சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும்-
மூதூரில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து இறங்குதுறை வரை நகர்ந்ததையிட்டு ஆனந்தப்படுவது
தமிழ் மக்களின் விடுதலை ஏக்கத்தின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம்.
இருப்பினும் எமது ஊடகங்களும் ஏதோ இறுதிப் போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டதாக எண்ணி, ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று அதீதமான ஆசைச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.
எழிலன், இளந்திரையன் கூறும் அதிகாரத் தரப்புச் செய்திகளுடன் ஏனைய ஊடக நிறுவனங்களால் வெளியிடப்படும் ஊகச் செய்திகளையும் இணைத்துத் தொகுப்பதனால் மக்கள் மனங்களில் ஒருவித அதீதமான எதிர்பார்ப்புக்களை எமது ஊடகவியலாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ செய்திகளும் அதற்கான அவர்களின் விளக்கங்களுமே மக்களுக்குப் போதுமானதாக இருக்கும்.சம்பூர் தந்திர யுத்தம் சம்பூரில் நடைபெறும் சமர் தற்காப்புச் சமாராக விடுதலைப் புலிகள் கூறினாலும் அடிப்படையில் ஒரு தந்திர யுத்தம் தான்.
இச்சமரில் புலிகளின் இராணுவ நகர்வுகள் எவ்வகையில் அமைந்தாலும் அடிப்படையில் மேற்குலக அனுசரணையாளர்களுக்கு உருவாக்கப்படும் ஒரு பாரிய பொறியாகவே கருத இடமுண்டு.
சண்டே லீடரின் இவ்வார ஏட்டில், விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியதாக வெளிவந்த செய்தியில், சம்பூரை இராணுவம் கைப்பற்றினால் போர் நிறுத்த ஒப்பந்தம் செயலற்றுப் போகும் என்று கூறியிருக்கும் விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
சிறிலங்கா அரச விமானப் படையினரின் குண்டு வீச்சுக்களும் மாவிலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பாரிய படையெடுப்புகளும் அப்பட்டமான போர் நிறுத்த மீறல்களாக இருந்தும் கண்காணிப்புக் குழுவோ அனுசரணையாளர்களோ வாய்மூடி மௌனியாக இதுவரை காலம் கடத்திய வரலாற்றுக்கு முடிவுரை எழுதும் நேரம் நெருங்கிவிட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மகிந்த வெளியிட்ட சம்பூர் செய்தியானது, தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பூர் ஆக்கிரமிப்பால் திருமலைத் தளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அரசியல் செய்தியையும் மகிந்த கூறியுள்ளார்.
இந்நிலையில் திருகோணமலை கடற்படைத் தளத்தின் மீது புலிகளின் ஒரு எறிகணைக் குண்டு வீழ்ந்தாலும் அவரின் வெற்றிச் செய்தி அர்த்தமற்றுப் போகலாம்.
ஆயினும் புலிகளின் தந்திரோபாய நகர்வுகள், அதற்கிசைவாக அமையும் வாய்ப்பினை உருவாக்காது.அடுத்த நகர்வுகள்புலிகளின் அழுத்தங்கள் இனி அதிகமாகவே அனுசரணையாளர்கள் மீது திரும்பலாம். போர் நிறுத்த ஒப்பந்த சரத்துக்களை பலமுறை அரசு மீறினாலும் இம்முறை சம்பூர் பிரதேச மீறலானது சாட்சியங்கள் தேவையற்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.
சம்பூரை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று புலிகள் கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் பதில் நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?
இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது என்று நோர்வேக்குத் தெரியும்.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள் நிராகரித்தால் சர்வதேச உலகம் கூறும் பதிலென்ன என்பதில் அடுத்த கட்ட நகர்வு அமையும்.
இப்பொறிக்குள் அகப்பட்டுள்ள நோர்வே, சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்குமா அல்லது தானாகவே வெளியேறுமா என்பதைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியாவிடமும் இல்லை. மேற்குலகிடமும் இல்லை.
பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இப்போதே மகிந்த கூறத் தொடங்கிவிட்டார்.

இலங்கைத் தீவின் கள நிலைமையைத் தீர்மானிக்கும் பந்து நோர்வேயின் காலடியின் உள்ளது.
நன்றி>புதினம்