2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும், அதன் அடிப்படையிலான ஜெனீவா இணக்கப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் கோரியுள்ளதை வரவேற்றுள்ள விடுதலைப் புலிகள், மகிந்த ராஜபக்ச அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நெட் இணையத்தளத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது:
இவ்வருடம் பெப்ரவரியில் ஜெனீவாவில் சிறிலங்கா அரசு இணங்கிய இராணுவ இணக்கப்பாடுகளை உறுதி செய்வது அவசியம் என்று இணைத்தலைமை நாடுகள் கோரியுள்ளமை வரவேற்கத்தக்கது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்ததுடன், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ளது.
ஆகவே, யுத்த நிறுத்த சரத்துக்களில் இணக்கப்பாடு காணப்பட்டதற்கு இணங்க, இருதரப்பின் எல்லைகளை மீளவும் அதே நிலைக்கு நகர்த்தி, சமாதானப் பேச்சுக்களை சுமூகமாக முன்னெடுக்க மகிந்த ராஜபக்ச அரசு முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.
விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி, செப்ரம்பர் 6 ஆம் திகதி நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான நோர்வே தூதுக்குழுவினருக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதையே நாம் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கும் தெரிவித்தோம்.
அமைதி முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஏதுவான சூழலை சிறிலங்கா அரசு உருவாக்குவதை, சர்வதேச சமூகமும், அதற்கு அனுசரணை வழங்கும் நோர்வே தரப்பும் உறுதி செய்வது அவசியம் என்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டு மக்களுக்கான உணவு விநியோக சிக்கல்கள் தொடர்பான கேள்வியொன்றிற்குப் பதிலளித்த அவர்,
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இது குறித்து முழுமையான பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும், யுத்த நிறுத்த ஒப்பந்தப்படி இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ள பிரதேசங்களினூடாக, உணவு விநியோகத்தை மேற்கொள்ள, விடுதலைப் புலிகள் முழுமையான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், இராணுவ ஆக்கிரமிப்பையும் தாக்குதல்களையும் முன்னெடுத்து வரும் சிறிலங்கா அரசு, விநியோகப் பாதைகளைத் திறப்பதற்கு மறுத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை தவிர, ஆட்கடத்தல்கள், திட்டமிட்ட கொலைகள் மற்றும் குற்றச் செயல்களையும் சிறிலங்காப் படைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. புதிய கண்காணிப்புக் குழுத் தலைவருடனான சந்திப்பின் போது, இந்த யுத்த நிறுத்த மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஆராயப்படும் என்றார் அவர்.
தற்போதைய களநிலவரத்தைப் புரிந்துகொண்டு, சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ள சர்வதேச சமூகத்தைப் பாராட்டிய தமிழ்ச்செல்வன், முல்லைத்தீவில் 51 பாடசாலைச் சிறுமிகள் மற்றும் 4 உத்தியோகத்தர்கள் மீதான சிறீலங்கா விமானப்படையின் தாக்குதலை கண்டித்ததையும் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
நன்றி>புதினம்.
Thursday, September 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment