Sunday, September 17, 2006

தமிழக ஊடகங்களின் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சிமாற்றமா?

ஈழப்போராட்டத்துக்குத் தமிழ்நாட்டு மக்களிடையே பெருகி வரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்றி வருகிறது ! பேராசிரியர் கு.அரசேந்திரன் (சென்னை கிறித்துவக் கல்லூரி)

தமிழ்த்தேசியக் கொள்கை பேசிய திராவிட இயக்கங்கள் இந்திய அரசியலில் கரைந்துபோன காரணத்தால் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த முன்வரவில்லை. பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியுள்ள ஊடகங்களும் ஈழப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்யவே விரும்புகின்றன. இந்த இரு நிலைகளையும் தாண்டித் தமிழீழ மக்களின் துன்பங்கள,விடுதலைப் போராட்ட வெடிப்புகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் சில பல நேரங்களில் வெளிவந்துவிடுகின்றன. இந்நிலைக்குக் காரணம் தமிழ்த் தேசியத்தை அரசியலுக்கு அப்பால் உறுதியாக முன்னெடுக்கின்ற தலைவர்களும் தொண்டர்களும் தான். இவர்கள் மக்களுடன்

சேர்ந்து வேலை செய்கின்றபோது ஊடகங்கள் எங்கே தங்களின் பொய்முகம் மக்கள் மத்தியில் முழுதாக வெளுத்துவிடுமோ என்ற அச்சத்தில் செய்திகளை வெளியிட்டு விடுகின்றன.

தமிழீழத் தேசியத் தலைவர் கிளிநொச்சியில் நடத்திய உலகப் பத்திரிகையாளர் மாநாட்டு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. தமிழ் நாட்டில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் அப்பொழுது அந்த நிகழ்ச்சியைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள். பெரும்பான்மையான மக்கள் தமிழீழப் போராட்டத்தின் பக்கமே இருக்கிறார்கள். ்தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் 'என்பார்களே, அதுபோல ஈழத்தமிழர்கள் படுகின்ற துன்பங்களில், பெறுகின்ற வெற்றிகளில் இவர்களும்

சொந்தம் கொண்டாடிக் கலந்து போகிறார்கள். இவர்களிடையே ஈழ ஆதரவுக்குரலை ஒலிக்கின்ற செய்தி ஏடுகளின் விற்பனை பெருகுவதைக் காணமுடிகிறது. பிரபாகரன் அவர்களைச் சந்தித்தது தொடர்பான இயக்குநர் மகேந்திரனின் நேர்காணலைத் தாங்கி வந்த குமுதம் இதழ் வெளியானவுடனேயே விற்றுத் தீர்ந்துவிட்டது. இந்த நிலையும் தமிழீழச் செய்திகளைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.

ஸ்ரீலங்கா அரசு தருகின்ற தகவல்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த தமிழ் நாட்டு ஊடகங்கள் இன்று பெரும் சிக்கல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல்வேறு இணையத் தளங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலைவரங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திவிடுகின்றனர். இந்த நெருக்கடியும் தமிழீழத்தின் நடப்பினை ஊடகங்கள் ஓரளவுக்கு நடுநிலையுடன் வெளியிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது.

தமிழீழம் என்பது தமிழ் நாட்டின் ஒரு உறுப்பாகவே தமிழக மக்கள் நெஞ்சில் இப்பொழுது பதிந்திருக்கிறது. அல்லைப்பிட்டிப் படுகொலைகளும், செஞ்சோலைப் பிஞ்சுகளைக் கொன்றொழித்த நிகழ்வும் அவர்கள் குடும்பத்தின் துயரங்களாகவே கனத்துத் தொங்குகின்றன. இந்திய

அரசாங்கம் சிங்கள அரசுக்குத் துணை போகுமேயானால் தமிழ் நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக அதை எதிர்க்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த உணர்வலைகளுக்கு விரும்பியோ, விரும்பாமலோ ஊடகங்கள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. மொத்தத்தில் தமிழீழப் போராட்டத்துக்கு தமிழ் நாட்டு மக்களிடையே பெருகிவரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்குத் தள்ளி வருகிறது.

ஈழத்தமிழர்களுக்காக இன்று எல்லாப் பத்திரிகைகளுமே கண்ணீர் வடித்தாலும் கண்ணீரின் நோக்கம் ஒன்றல்ல !

ஆர் .கோபால் ஆசிரியர் - நக்கீரன்

இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற போர் பற்றி, அங்கு தமிழர்கள் படுகின்ற அவலங்களைப் பற்றி, இராமேஸ்வரத்தில் கரையேறுகின்ற அகதிகளைப் பற்றி இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளுமே எழுதிக் கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்த, அவர்களது போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஏடுகள் கூட இவற்றில் அடக்கம். தங்களுடைய பழைய முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு ஈ ழ ஆதரவு என்ற முகமூடியை மாட்டியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கின்ற ஆட்சிமாற்றம்தான்.

கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பத்திரிகைகளால் நிறைவாகச் சுவாசிக்க முடிகிறது. அதனால்தான் ஜெயலலிதாவினுடைய ஆட்சிக் காலத்தில் ஈழத்துக்குச்

சென்று பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டுத் திரும்பிய பாரதிராஜாவிடம் அதுபற்றி இப்போது ஆனந்தவிகடனால் பேட்டி காணமுடிகிறது. அவராலும் பிரபாகரன் அவர்களை எட்டாவது அதிசயம் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. அதேபோல இயக்குநர் மகேந்திரனாலும் குமுதத்தில் தன்னுடைய ஈழப்பயணம் பற்றி ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்யமுடிகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்க முன்னர், மே- 12, 2006க்கு முன்னர் இவற்றைப் பிரசுரித்திருந்தால் பாரதிராஜாவையும் மகேந்திரனையும் சிறையில்தான் பார்த்திருக்க முடியும்.

அதேசமயம், ஈழத்தமிழர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கின்ற பத்திரிகைகள் எல்லாவற்றினது நோக்கமும் ஒன்றல்ல. தமிழகத்தின் பத்திரிகைச் சூழலில் மேற்தட்டு கீழ்த்தட்டு என்று, வெளிப்படையாகச்

சொல்வதானால் பிராமணர்களது பத்திரிகைகள்- பிராமணர்கள் அல்லாதவர்களது பத்திரிகைள் என்று தெளிவான எல்லைகளைப் பார்க்க முடியும். இதில் பிராமணர்களது பத்திரிகைகள் இலங்கையில் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவாக என்றுமே இருந்ததில்லை. ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு எழுச்சியை ராஜீவ் கொலையைக் காட்டி அடக்கவே முயன்று வந்திருக்கின்றன. ஆனால் இன்று ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? சொல்லு என்று கலைஞரின் சட்டையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தலையங்கங்கள் தீட்டுகின்றன. இதில் ஈழத்தமிழர்களின் மீதான அனுதாபம் என்பதைவிட அவர்களின் அரசியல்தான் அதிகம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸுடன் கூட்டுவைத்துள்ளது. கூட்டணியில் முறிவை ஏற்படுத்தி ஜெயலலிதா அம்மையாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்தப் பத்திரிகைகள் விரும்புகின்றன. நெருக்குதல்களை ஏற்படுத்திக் கலைஞரின் வாயாலேயே ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்லவைத்துவிட்டால் இதனைச் சாதித்து விடலாம் என்று நினைக்கின்றன.

தமிழகத்தின் தேர்தல் அரசியல் ஒன்றுபட்டிருந்த ஈழ ஆதரவு அரசியல் சக்திகளைத் திசைக்கொன்றாகப் பிரித்து வைத்துள்ளது. பரபரப்புச் செய்திகளுக்காக பத்திரிகைகள் இந்தத் தலைவர்களது பேட்டிகளைப் பிரசுரித்து ஆளாளுக்கு சேறுபூசவைக்கும் கைங்கரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றன. இது வேதனையான ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு உதவுவது என்பது ஊர் கூடித் தேர் இழுக்கும் செயல். இதில் நக்கீரன் தன்னுடைய பொறுப்பை இது காலவரை சரியாகவே செய்து வந்திருக்கிறது. இனியும் செய்யும்.

தமிழகப் பத்திரிகைகளின் பார்வை அரசின் நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

தளவாய் சுந்தரம்(பத்திரிகையாளர், ஊடகவியல்ஆய்வாளர்) தமிழக மக்களும் தமிழகப் பத்திரிகைகளும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு நோக்குகின்றன என்பதை பார்க்கத் தொடங்கும் முன், தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டு பிராமணர், பிராமணரல்லாதார் அரசியலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பிராமணர், பிராமணரல்லாதார் அரசியல், சரியாகவோ அல்லது தவறாகவோ இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து தமிழகப் பிராமணர்களால் பார்க்கப்படுகிறது. பிராமணரல்லாதார் எழுச்சி, பெரியார் என்ற ஆளுமை, திராவிடர் கழகம் உருவானது, திராவிட முன்னேற்றக் கழகமும் அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆட்சியைக் கைப்பற்றி தமிழகத்தில் செய்துவரும் மாற்றங்கள், இடஒதுக்கீடு அமுல் செய்யப்பட்டது என்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் அனைத்தையும் பிராமணர்கள் தங்கள் வாழ்வுரிமைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கிறார்கள். ஒரு வருடத்துக்கு முன்பு எழுத்தாளர் அசோகமித்திரன், அவுட்லுக் ஆங்கில வாரப் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் வாழும் பிராமணர்கள், ஹிட்லரின் கீழே வாழ்ந்த யூதர்கள் போல்தான் வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இது அசோகமித்திரன் என்ற தனி ஒருவரின் குரல் மட்டுமல்ல. பெரும்பான்மை தமிழகப் பிராமணர்களின் குரலும் இதுதான்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ் உணர்வாளர்களால் ஆதரிக்கப்படும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் தமிழகப் பிராமணர்கள் அணுகுகிறார்கள். இலங்கையில் தனி ஈழம் அமைவது மீண்டும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழச் செய்யும் என்பது அவர்கள் எண்ணம். அப்படி நிகழ வாய்ப்பில்லை என்பதும், இது தேவையில்லாத அச்சம் என்பதும் ஒருபுறமிருக்க தேசியப் பார்வையுடைய பிராமணரல்லாதவர்களுக்கும் இந்த எண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பின்னணி இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்த தமிழக பத்திரிகைகளின் பார்வையில் முக்கிய பங்காற்றுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கிடைத்த ஸ்கூப் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு தினமலர் நாளேடு மகிழ்ச்சியடைந்ததும், அது தவறான செய்தி என்று அதற்குப் பிறகு உறுதியான பின்னர் இன்றைக்கு வரைக்கும் அச்செய்திக்கு மறுப்பு வெளியிடாததும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் முடிவில், 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது பிரபல வார இதழ் ஒன்றில் எழுதப்பட்ட தலையங்கமும் இங்கே கவனிக்க வேண்டியது. தண்டனை நிறைவேற்றப்படும் போது, தூக்குக் கயிறு கழுத்தை முறிக்கும் சத்தம் கேட்டு ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்னும் அர்த்தம் தொனிக்கும் வகையில் அந்த தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அது பிராமணரல்லாத ஒரு முதலாளியால் நடத்தப்படும் பத்திரிகையில் வெளியானது என்றாலும் பத்திரிகையின் ஆசிரியர் பிராமணர்.

பிராமணர் ,பிராமணரல்லாதார் அரசியல் போலவே இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றிய தமிழகப் பத்திரிகைகளின் பார்வையில் முக்கிய பங்காற்றுவது ராஜீவ்காந்தி கொலை. 1980களில் தமிழகப் பத்திரிகைகள் மத்தியில் ஈழப் போராட்டத்துக்கு உணர்ச்சிமயமான ஒரு ஆதரவு இருந்தது. அக்காலத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள், ஊர்வலங்களுக்கு, அப்போது பத்திரிகைகளில் வெளியான செய்திகள், கட்டுரைகள் முக்கிய காரணம். அந்த அளவுக்குக் கொந்தளிப்பான, உணர்வு ரீதியான ஒரு பார்வையைத் தமிழகப் பத்திரிகைகள் கொண்டிருந்தன. அக்காலகட்டத்தில் தமிழக மக்களிடையே ஈழப்போராட்டத்துக்கு இருந்த அபரிமிதமான ஆதரவையும் ஈடுபாட்டையும் பத்திரிகைள் பிரதிபலித்தன என்றும் இதனைப் பார்க்கலாம். அப்படியொரு உணர்ச்சிப் பெருக்கு ஏற்படத்தக்க வகையில் பத்திரிகைகள் செயலாற்றின என்றும் இதனைப் பார்க்கலாம். உண்மையில் தமிழக மக்கள், பத்திரிகைகள் இரண்டு பேருக்கும் இடையே பரஸ்பரம் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் சரியாக இருக்கும்.

நன்றி-தினக்குரல்

2 comments:

மஞ்சூர் ராசா said...

எப்படியோ ஈழத்தமிழர்களின் இருண்ட வாழ்வு ஒளிப்பெற வேண்டும். அதற்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு மிக மிக முக்கியம். இந்த விசயத்தில் பாரபட்சம் பாராது அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்கவேண்டும்.

ஈழபாரதி said...

வணக்கம் மஞ்சூர் ராசா வருகைக்கு நன்றி. நல்லது நடக்கவேண்டும் என்பதே எமது அவா.