Sunday, September 24, 2006
தென்னாபிரிக்காவில் அமைதிக்கான பிரார்தனை நிகழ்வு.
தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் அமைதிக்கான பிரார்த்தனை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.09.06) டேர்பன் நகரில் உள்ள அருட்பா கழகத்தில் நடைபெற்றது.
இப்பிரார்த்தனை நிகழ்வானது சிறிலங்கா அரசாங்கத்தால் அடக்கி ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் அவலநிலையை நினைவுகூர்ந்தும் சிறிலங்கா விமானப்படையால் கடந்த மாதம் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை இல்ல மாணவிகளை நினைவுகூர்ந்தும் நடத்தப்பட்டது.
வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதை வெளிப்படுத்தி, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது முடிவிற்கு வரவேண்டியும் போர் நிகழும் உலகின் ஏனைய பகுதிகளில் பாதிப்புற்ற மக்களுக்காகவும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தென்னாபிரிக்க இஸ்லாமிய சபையைச் சேர்ந்த என் கான், குறொப்டினி பள்ளிவாசலைச் சேர்ந்த மௌலானா சாயிக் இஸ்மாயில், அருட்தந்தை டீனா முத்தன் மற்றும் அருட்பாக் கழகத்தைச் சேர்ந்த திருமதி கே.சோதிநாதன் ஆகியோர் பிரார்த்தனைகளை நடத்தினர்.
இந்நிகழ்வில் டேர்பன் நகர துணை மேயர் லோகநாதன் நாயுடு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றியும் 61 சிறுமிகள் சிறிலங்கா விமானப்படையால் கொல்லப்பட்டமை பற்றியும் 17 உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றியும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மோசமான இந்நிலையை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கத்திற்குக் காத்திரமாக அமைதி வழியில் தெரிவிக்க வேண்டும் எனவும் ஈழத்தில் பாரதூரமான அளவிற்குச் சென்றுள்ள வன்முறைகள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சற்ஸ்வேத்தில் இருந்து சென்னை வரையுள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இனப்பிரச்சினைக்கு அமைதி வழித்தீர்வைக் கொண்டு வருவதற்காக ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிவதாகப் பிரார்த்தனையில் கலந்துகொண்டோருக்குக் கூறி அவர் தனது உரையை நிறைவுசெய்தார்.
நன்றி>புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment