Monday, September 25, 2006

கூர் மழுங்கிய ஆயுதத்தை கையிலெடுக்கும் இந்தியா.

துணை இராணுவக் குழு டக்ளசை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறிமுகம் செய்து வைக்கும் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்துவிட்டதாக இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.

இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுடில்லியில் முகாமிட்டு, அவரின் தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் சென்னைக்கும் திரும்பியுள்ளனர்.

அதேவேளையில் தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் வேறு சிலர் புதுடில்லி வந்திருப்பதாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் வழியாக அறிய முடிகின்றது.
தினமணி நாளேடு தமிழர் தலைவாகளான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் புதுடில்லிக்கு வந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசின் தெளிவற்ற கொள்கையையும் தடுமாற்றத்தையும் குறிப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அத்துடன் இலங்கை இனப்பிரச்சனையில் நீண்டகாலமாக மௌனம் காத்துவந்த இந்திய அரசு வழமைபோல் குட்டையை குழப்புகின்ற வேலையை தொடர்கின்றதோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கின்றது.

ஏனெனில் சிறிலங்கா அரசு வெறுப்படையும் வகையில் இந்திய அரசு தனது அழுத்தத்தை பிரயோகிக்கின்றது என்ற தோற்றப்பாடே அண்மைக்காலமாக தென்பட்டு வந்தது.
அதனடிப்படையில்தான் மகிந்தர்களும் பண்டாரநாயக்கர்களும் ஏன் அனைத்து சிங்கள ஊடகங்களும் இந்தியாவைச் சீண்டி பிறாண்டிக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வரவழைத்திருந்தது இந்தியா.

இச்செய்திகள் வெளிவந்தபோதே இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் சுறுசுறுப்பான செயற்பாடுகளில் இறங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் எனப்படுவோர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான புதுடில்லியின் மாற்றம் கண்டு குழம்பி விட்டனர் போல் தெரிகின்றது.

இந்நிலையில் புதுடில்லியில் இலங்கை இனப்பிரச்சனை ஆலோசனைகள் மீளத் தீவிரமடையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் கொள்கை வகுப்பாளர்கள் என்றழைப்போரிடம் இந்திய அரசாங்கம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் என்ற பட்டியலில் பல நிறுவனங்கள் புதுடில்லியில் முகாமிட்டு தங்களது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், வெளிவிவகாரத்துறையினர், ஊடகவியலாளர்கள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் கூடும் மையங்களாக இவை உள்ளன.

அண்மையில் இவ்வகையான கொள்கை வகுப்புக்குழுக்கள் என்றழைக்கப்படுவோரின் கூட்டத்தில் அரசியல் அரங்கில் காணாமல் போயிருந்த வரதராஜப்பெருமாளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் என்.என்.ஜா, லெப்.ஜெனரல் வி.கே.சிங் மற்றும் நாராயணசுவாமி ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இதில் என்.என்.ஜா கடும் போக்காளர். இந்தியாவின் "பிரதான கொள்கை வகுப்பாளர்"(!) சுப்பிரமணியசுவாமி, "சிங்கள ரத்னா" இந்து ராம் மற்றும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கூட்டணியில் வலம் வருகின்றவர்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்ட இந்த கொள்கை வகுப்புக்குழுக்கள்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு புதுடில்லியிலே சுப்பிரமணியசுவாமியின் தலைமையில் மாநாடும் போட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தங்கள் ஆலோசனைக்கு கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அறியமுடிகின்றது.

- இலங்கை இனப்பிரச்சனையின் பின்புலம்
- ஆயுதக்குழுக்கள் உருவாக்கம் ஏன்?
- இந்திய- இலங்கை ஒப்பந்தம் மீதான விமர்சனங்கள்
- சந்திரிகா காலத்து அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள்
- தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமை
- இந்தியாவின் பங்களிப்பு
- கிழக்கு மாகாண நிலைமை
- தமிழீழக் கோரிக்கையில் விடுதலைப் புலிகள் உறுதியாக உள்ளமை
- அகதிகள் பிரச்சனை
- சிறிலங்காவுக்கான இராணுவ உதவி
- சிறிலங்காவின் இரு பிரதான கட்சிகளுடன் இந்தியாவின் உறவு
என்றெல்லாம் விவாதித்து இறுதியில்
"ஐக்கிய இலங்கைக்குள் பேச்சு மூலமாக இறுதித் தீர்வு- அனைத்து இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்ற கொள்கை முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.
புதுடில்லியில் கொள்கை வகுப்பாளர்கள் எனப்படுவோர் இப்படியாக செயற்படும் நிலையில்தான் கியூபாவில் சிறிலங்கா அதிபர் மகிந்தவும் முக்கயமான ஒரு பணியை ஆற்றிவிட்டு வந்திருக்கின்றார்.

மேலே உள்ள இந்தப் படத்தை பார்த்தால் அவர் ஆற்றிய பணி புரியும்.


அமைதியை உருவாக்க இராணுவ வலுச் சமநிலையை விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர். அமைதி முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

பேச்சும் யுத்தமும் யுத்தமும் பேச்சுமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் மற்றும் இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் இன்னமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது செத்துவிட்டதாக அறிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது.

ஆனால் நீண்டகாலாமாக இந்திய உளவு அமைப்பின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும்- கடந்த 15 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழீழ அரசியலில் எதுவித தொடர்புமற்று ஆனால் பெயருக்கு சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஒரு துணை இராணுவக்குழுவை நடமாட விட்டுள்ள வரதராஜப்பெருமாள் புதுடில்லியில் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

அல்லைப்பிட்டியில் நடந்தேறியது போன்று அப்பாவி பொதுமக்களை- புத்திஜீவிகளை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தொடர்ச்சியாக கொன்று குவித்து வரும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவை மகிந்தர் இந்தியப் பிரதமருக்கு அறிமுகம் செய்தது தற்செயலானதா?

தற்போது தினமணி நாளேடு குறிப்பிடும் தமிழர் தலைவர்களான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் போன்ற வகையறாக்கள் புதுடில்லி அழைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

இவ்வகையானோரை முன்னிலைப்படுத்துவதில் கொள்கை வகுப்புக் குழப்பவாதக் குழுக்கள் முயற்சியாலும் அழுத்தத்தாலும் இந்திய அரசு தடுமாறுகின்றதா?

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழத் தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என்ற இந்திய பிரதமரின் முடிவிற்கும் இவைக்கும் தொடர்பிருக்கும் என்ற சந்தேகமே ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி இருக்கின்றது.

பல தடவைகள் தோற்றுப்போன இந்திய கொள்கை வகுப்பாளரின் திட்ட வரைவையே மீளவும் இந்திய அரசு ஏற்கப் போகின்றதா?
நன்றி>புதினம்.

2 comments:

Anonymous said...

இந்தியாவின் போக்கு தமிழகத் தமிழர்களுக்கு மிகுந்த வேதனை தரக்கூடியதாகவுள்ளது. ஈழ தமிழர்களின் பிரதிநிதியை சந்திப்பதை தவிர்த்து சிங்கள பேரினவாதத்தின் பிரதிநிதிகளைச் (கைகூலிகளை) சந்திப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

Anonymous said...

இந்த கொள்கை வகுப்பாளர்கள் அனியாயமாக இன்னொரு ராஜீவ்காந்தியை பலியிட தயாராகிவிட்டார்கள்.