சிறிலங்கா பேரினவாத அரசு தற்போது தமிழர் தாயகத்தில் மிகப் பெரியதொரு இன அழிப்பு நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் தினமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவரும் படுகொலை செய்யப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி தமிழர்களின் தாயக மண் இன்று ஆட்லறித் தாக்குதலாலும் பல்குழல் பீரங்கித் தாக்குதலாலும் விமானக்குண்டு வீச்சுக் களாலும் அழிந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு மூர்க்கத்தனமான மிக மோசமான இன அழிப்பை சிங்களப் பேரினவாதப் படைகள் மேற்கொள்கின்ற சூழலில் சமாதானம் என்பது இனி கிட்டவரக்கூடிய சாத்தியமில்லை.
இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் மௌனமாக இருப்பது கவலைக்கும், கண்டனத்துக்கும் உரியது. ஏனெனில் இரு தரப்புக்கும் இடையில் யுத்தம் நிகழக்கூடாது என்பது தான் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென சர்வதேச சமூகம் விரும்புகின்றது. அது மாத்திரமன்றி போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
ஆனால் கள நிலைமைகளை அவதானிக்கின்ற போது சமாதானம் எனக்கூறிக் கொண்டு சிங்களப் பேரினவாத அரசு முழு அளவிலான யுத்த முனைகளைத்திறந்து விட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டினை முழுமையாக மீறி தமது முப்படைகளின் வலுவையும் பயன்படுத்தி தமிழ் மக்களை கொன்றொழிக்கின்ற போது சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசு மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதது ஏன்?
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டால் சிறிலங்காப் படைத் தளபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டால் சர்வதேச சமூகம் அனுதாப மும்,கண்டனமும் தெரிவிப்பதுடன் விடுதலைப்புலிகளைத் தடை செய்யும் தீர்மானத்துக்கு வந்து விடுகின்றனர்.
ஆனால் பிஞ்சுக் குழந்தைகளை, பெண்களை, வயோதிபர்களை எவ்வித ஈவிரக்கமுமற்ற முறையில் இனச்சுத்திகரிப்பு செய்யும் சிங்கள அரசை சர்வதேச சமூகம் கண்டிக்காது இறமையுள்ள நாடாக ஜனநாயக நாடாக பார்க்க நினைப்பது மனிதாபிமானத்தினை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
லெபனான் - இஸ்ரேல் மோதல் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச சமூகம் தலையிட்டு யுத்தத்தைத் தற்காலிகமாவது நிறுத்தி அமைதியை ஏற்படுத்த எடுத்த அதே அக்கறையையும் கரிசனையையும் இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து இன்னும் தாங்கள் விலகி விடவில்லை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதாகக்கூறும் சிறி லங்கா அரசு மாறாக தொடுத்திருக்கும் போரினால் இதுவரை பல இலட்சம் மக்கள் வரை போர் அவலத்தைச் சந்தித்துள்ளனர். யாழ்.குடா நாட்டில் சிறிலங்கா அரசு அமுல்படுத்தி வரும் தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவால் சுமார் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இன்று பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த தேர்தல்களைப் புறக்கணித்த யாழ் குடா மக்கள் மகிந்தரின் கொடும்பாவியை எரித்ததற்குப் பழிவாங்கும் வகையில் தான் இன்று குடா நாட்டில் சிங்களப் படை மக்களைக் கொடுமைப்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி தமிழர் தாயகத்தில் போக்குவரத்துத் தடை களை விதித்து இடம்பெயர்ந்து அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள மக்களுக் கான உணவு, வைத்திய சேவைகளை முடக்கி கொடுமைப்படுத்தும் பேரின வாத அரசை இன்னும் சர்வதேச சமூகம் கண்டிக்காதது மாத்திரமின்றி சிங்கள அரசுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது இரு ப்பது இன்னும் சிறு பான்மையினமான தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதம் நசுக்கும் சூழலையே ஏற்படுத்தும்.
எனவே சர்வதேச சமூகம் இனியும் பாராமுகமாக பக்கசார்பாக நடந்து கொள்ளாது ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி>ஈழநாதம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment