Tuesday, September 12, 2006

ஒஸ்லோவில் ஒக்டோபரில் அமைதிப் பேச்சு: இணைத் தலைமை நாடுகள்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று இணைத் தலைமை நாடுகள் அறிவித்துள்ளது.
பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் பெனிட்டா பெரிரோ வால்ட்னெர் கூறியதாவது:
ஒக்டோபர் தொடக்கத்தில் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வையை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளுக்கு உள்ளது.
ஒக்டோபர் இறுதியில் இணைத் தலைமை நாடுகள் மீண்டும் கூடி நிலைமையை ஆராயும்.
இருதரப்பு யுத்த நிறுத்த ஓப்பந்த மீறல்கள் மற்றும் உரிமை மீறல்களானது பாரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தேவையான சமரசங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
யுத்த நிறுத்தத்துக்கு தனது இராணுவம் கீழ்படிந்து நடக்கிறது என்பதை சிறிலங்கா அரசாங்கமானது உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
ஊடகவியலாளர்களிடம் ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கூறியதாவது:
நோர்வே அனுசரணையாளர்களிடம் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருப்பதாக தெரிவித்துள்ளமையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பேச்சுக்களுக்கான முதல் நடவடிக்கையாக இருதரப்பும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: