Wednesday, September 20, 2006

ஊடகவியலாளர்களை பலி கொடுக்க இராணுவம் சதி.

எறிகணை வீச்சு நடைபெறும் பிரதேசத்துக்கு அனுமதி பெறாமல் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று உயிரிழக்கச் செய்வதன் மூலம் பழிபோட சிறிலங்கா இராணுவம் திட்டமிடுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முகமாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சில் ஊடகவியலாளர்கள் உயிர் தப்பியதாகவும் 4 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் இடையே உள்ள முகமாலை முன்னரங்க காவலரண் பகுதிக்கு கொழும்பிலிருந்து சர்வதேச செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களை சிறிலங்கா இராணுவம் அழைத்துச் சென்றதாக சில சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
கடந்த ஓகஸ்ட் 10 ஆம் நாள் முதலே முகமாலை முன்னரங்க நிலைகளில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக சிறிலங்கா இராணுவமே கூறியுள்ளது.
வடக்கு - கிழக்கில் இயங்கி வரும் சர்வதேச நிறுவனங்கள் தொடர்பிலான குழுவும் கடந்த செப்ரெம்பர் 18ஆம் நாளன்று கிளிநொச்சியில் வெளியிட்ட அறிக்கையில், "கடந்தவாரம் பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் எறிகணை வீச்சுகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.
அண்மைய எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளிநொச்சியில் பணியாற்றும் நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனையின்றி பணி செய்யும் பகுதிகளுக்குச் செல்வதில்லை.
எறிகணை வீச்சு நடைபெறும் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரிவிக்காமல் ஊடகவியலாளர்களை சிறிலங்கா இராணுவம் அழைத்து வந்தது ஏன்?
இந்த மோதலில் ஒன்றிரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோட சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டுவராமலும் அனுமதி பெறாமலும் ஊடகவியலாளர்களை எறிகணை வீச்சுப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருப்பதானது ஊடகவியலாளர்களின் உயிர்களை அலட்சியம் செய்கிற இரக்கமற்ற செயலாகும்.
ஊடகவியலாளர்களை இத்தகைய இக்கட்டான நிலைமைக்கு தள்ளுவது குறித்து நாம் விசனமடைகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்

No comments: