அம்பாறை மாவட்டம் உல்லைப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று புதன்கிழமையன்றும் முழு அடைப்புப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தை முறியடிக்கும் வகையில் உல்லைப்பகுதியில் கடைகளைத் திறக்குமாறு சிறப்பு அதிரடிப்படையினர் மிரட்டல் விடுத்தனர்.
ஆனால் வர்த்தகர்கள் கடைகளைத் திறக்க மறுத்தனர். கடைகளைத் திறக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர்களை சிறப்பு அதிரடிப்படையினர் தாக்கத் தொடங்கினர். இதனால் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில்
அகமெட் லெப்பை நூர்தீன் (வயது 34)
மொகைதீன் பிச்சை லத்தீப் (வயது 45)
எம்.ஐ.சீனி மொகமெட் (வயது 29)
ஜாஃப்பர் (வயது 35)
ஆகியோர் ஆபத்தான நிலையில் கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்
எம்.ஐ. ஜாஃபொர்தீன் (வயது23)
ஏ. மஜீத் (வயது 28)
ஆர். ஹனீப் (வயது 19)
எம். காசீம் (வயது 33)
ஏ.கே. மொகைதீன் பாபா (வயது 64)
மொகமெட் லெப்பை (வயது35)
ரசீக் (வயது 19)
சுபைர் (வயது 25)
உள்ளிட்ட 10 பேர் பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் படுகொலைக்குக் காரணமான சிறப்பு அதிரடிப்படை அதிகாரியை நீக்க வேண்டும் அல்லது இராத்தல்குளம் பகுதி சாஸ்திரவெளி சிறப்பு அதிரடிப்படை முகாமையே நீக்க வேண்டும் என்று அம்மக்கள் கோரி வருகின்றனர்.
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமை அகற்ற வேண்டும் என்று பொத்துவில் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பொத்துவில் மற்றும் உல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
பொத்துவில் பிரதேசத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை சிறப்பு அதிரடிப்படையினர் பிறப்பித்துள்ளனர்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு, திருக்கோவில், தம்புவில் ஆகிய தமிழர் பகுதிகளிலும் இன்று புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அம்பாறை மாவட்டம் முழுமைக்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
நன்றி>புதினம்.
Wednesday, September 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment