தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மூலம் ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சிறிலங்காவுக்கான சென்னை துணைத் தூதுவராக உள்ள ஹம்சா சதித்திட்டம் தீட்டுவதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.
நக்கீரன் வாரமிருறை ஏட்டில் வெளியாகி உள்ள கட்டுரை விவரம்:
"இப்போதுள்ள சூழலை அதிபர் ராஜபக்ச பயன்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும்'' என அதிபரிடமே நேரில் வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கைக்கு வந்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். பிரேசில் பயணத்தின்போது விமானத்திலேயே பேட்டியளித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இலங்கைப் பிரச்சினை குறித்துப் பேசினார்.
ஈழ விவகாரத்தில் இந்தியா காட்டி வரும் அக்கறையை கொழும்பு அரசியல் வட்டாரம் உன்னிப்பாக கவனித்து எதிர்வினை நிகழ்த்தி வருகிறது.
"எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அனாவசியமாகத் தலையிடுகிறார்'' என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் நிருபமாராவ் மீது இலங்கை அமைச்சர் அனுரா பண்டாரநாயகா அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்தூதர் ஹம்சாவுக்கு ராஜபக்ச அரசு ஸ்பெஷல் அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறது.
"இதை இந்திய உளவுத்துறையினர் எந்தளவு மோப்பம் பிடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை'' என்றார் கொழும்பில் நம்மிடம் பேசிய அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர்.
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா, ஏற்கனவே தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு, ஈழத்தமிழர்களுக்கு இதரவாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்தவர்.
இப்போது அவர், தமிழகத்திலுள்ள முஸ்லிம் மதராசாக்கள், உலமாக்களை ஒருங்கிணைக்கும் அசைன்மெண்ட்டில் தீவிரமாக இருக்கிறார் என்பதே கொழும்பு அதிகாரி நம்மிடம் தெரிவித்த முக்கியத் தகவல்.
"உலமாக்கள் ஒருங்கிணைந்து விரைவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறார்கள். அந்த சந்திப்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள அமைப்புகளுக்கு தர்மசங்கடத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்'' என்றது கொழும்பு வட்டாரம்.
இலங்கைத் தலைநகரில் உள்ள தமிழர் அமைப்பினருக்கும் ஹம்சா மேற்கொண்டிருக்கும் "அசைன்மெண்ட்" பற்றித் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் பேசினோம்.
"இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் முஸ்லிம் ஜிகாத் அமைப்பு இரகசியமாக செயல்பட்டு வருகிறது. இதனை உருவாக்கி, நிதியுதவி செய்து வருவது பாகிஸ்தான். இலங்கையில் பயிற்சி எடுத்து, தென்னிந்தியாவுக்குள் இவர்கள் நுழைய வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் திட்டம். அதே நேரத்தில், இலங்கை அரசோ இந்த ஜிகாத் அமைப்பை விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் குறிக்கோளுடன் இலங்கையில் ஜிகாத் அமைப்புகள் வளர்த்து விடப்பட்டு வருகின்றன'' என்றவர்கள், அண்மையில் மூதூர் பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டையில் இராணுவத்துக்கு இதரவாக ஜிகாத் அமைப்பினர் களமிறங்கியதையும் சுட்டிக்காட்டினர்.
"மூதூர் சண்டையில் முஸ்லிம்கள் தரப்பில் இறந்து போனவர்கள் ஜிகாத் அமைப்பினர்தான். இதனால் புலிகள் மீது பாகிஸ்தானின் கோபம் அதிகரித்துள்ளது. அதிபர் ராஜபக்சவும் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரும் சமீபத்தில் சந்தித்து நீண்டநேரம் விவாதித்துள்ளனர்.
அந்த சந்திப்பின்போதுதான் ஹம்சாவுக்கு தரப்பட்டுள்ள அசைன்மெண்ட் இறுதி வடிவம் பெற்றிருக்கிறது'' என்கிறது அதிபர் அலுவலக வட்டாரமே!
"இலங்கையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக முஸ்லிம்களிடமிருந்து பெரிய அளவில் கண்டனங்களையும், கருத்துக்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும். தமிழர்கள் வேறு, முஸ்லிம்கள் வேறு என்ற எண்ணத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். அதற்கேற்றபடி தமிழ்நாட்டில் கல் எறிய வேண்டும்.
தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரல் ஒங்கும்போது, அங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புகளுக்கு சங்கடம் எற்படும். அவர்களின் குரல் மெல்ல தணியும். தமிழகத்தில் ஈழ ஆதரவுக் குரல் குறைந்தால், இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீடும் நிர்ப்பந்தமும் குறைந்துவிடும்'' என்பதுதான் அதிபர் ராஜபக்ச- பாகிஸ்தான் தூதுவர் சந்திப்பின் சாரம்சம்.
இதுபற்றி சென்னையிலுள்ள இலங்கை துணை தூதுவர் ஹம்சாவிடம் தெரிவிக்கப்பட, "அசைன்மெண்ட்"டை உடனடியாக செயல்படுத்தும் முடிவுடன் களமிறங்கி, உலமாக்களை அவர் சந்தித்து வருகிறார். அவர்களை ஒருங்கிணைத்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும்படி வலியுறுத்துகிறார். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட்படி பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும்போது., "மூதூரில் நடந்த சண்டையில் முஸ்லிம்களை கொன்றது புலிகள்தான். இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். புலிகள் பிரதேசத்தில் முஸ்லிம்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதில் இந்தியஅரசு தலையிட வேண்டும்'' என்ற "வாய்ஸ்' உலமாக்களிடமிருந்தும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதில் ஹம்சா கவனமாக இருக்கிறார்.
தமிழகத்தில் "தமிழர்- முஸ்லிம்" என்ற புதிய மோதலை உருவாக்க வேண்டும் என்கிற இலங்கை அரசின் திட்டத்துக்கான முதல் கட்டம் விரைவில் வெளிப்படும் என்கிற கொழும்பு வட்டாரம்,
"இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புக்களின் நிலைதான் மிகவும் கவனத்திற்குரியது. அரசியல் சார்ந்த தமிழக முஸ்லிம் அமைப்புக்கள் ஈழ விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தாவிட்டாலும், அந்த அமைப்புக்கள் தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாக தங்கள் கருத்துக்களை வெளியிட்டதில்லை. ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுடன் இணக்கமாகவே இருக்கிறார்கள். உலமாக்கள் மூலம் தமிழக முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிர்பந்தத்தை உண்டாக்க ஹம்சா முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தமிழக முஸ்லிம்கள் இதை ஏந்தளவு அனுமதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை'' என்கிறார்கள் என்று நக்கீரன் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது
நன்றி>புதினம்.
Sunday, September 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment