Sunday, April 01, 2007

கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி!!!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்?

தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது.

அதனால்தான் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை மத்திய உளவுத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

1. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கவே சென்னைச் சங்கமம் என்ற கலைநிகழ்ச்சியை அருட்தந்தை ஜகத் கஸ்பார் அடிகளார் நடத்தினார் என்றும் இளையராஜாவின் சிம்பொனி குறுந்தகட்டையும் புலிகளுக்காகவே அருட்தந்தை ஜகத் கஸ்பார் வெளியிட்டார் என்றும் அண்மையில் தீவிர பரப்புரை ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசின் முதல்வரான கருணாநிதியின் மகள் கனிமொழி அவர்களையும் இந்த சர்ச்சையில் இணைத்திருந்தனர்.

இதன் பின்னணி குறித்து தமிழ்நாடு அரசாங்கத்தின் தரப்பினர் மேற்கொண்ட விசாரணையில், புதுடில்லியிலிருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகரும் இந்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநருமான எம்.கே.நாராயணன் வழிகாட்டுதலிலேயே இப்பரப்புரை மேற்கொள்ளப்பட்டதாக ஊடக வட்டாரங்களிலும் அரசியல் உயர்நிலை வட்டாரங்களிலும் செய்திகள் கசிந்தன.

எம்.கே.நாராயணனுக்கு புலிகள் மீது என்ன கோபம் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது அல்லவா?

ஈழப் பிரச்சனைக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எம்.கே.நாராயணனுக்கும் உள்ள "உறவானது" 25 ஆண்டுகால வரலாற்றுக்குரியது.

அ. 1982ஆம் ஆண்டு இந்தியாவின் உளவுத் துறை (ஐ.பி.) மூத்த அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார் எம்.கே.நாராயணன். அப்போதுதான் சென்னை தியாகராய நகர் பாண்டி பசார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை அப்போதைய தமிழ்நாடு அரசு கைது செய்து சென்னை பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்திருந்தது. பிரபாகரன் தலைக்கு அப்போது விலை வைத்திருந்த சிறிலங்கா அரசாங்கம் தனது காவல்துறை தலைவரை இந்தியாவுக்கு அனுப்பியது. அவர் புதுடில்லி செல்லும் வழியில் சென்னையில் இறங்கி பிரபாகரனை பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் பார்த்தார். (சந்திக்கவில்லை). சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடையே நாடு கடத்தும் ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை. பிரபாகரன் கைது செய்யப்பட்ட மறுநாளே சென்னைக்கு விரைந்து வந்தார் எம்.கே.நாராயணன். பிரபாகரனுக்கு சிறிலங்கா அரசாங்கம் விலை வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய எம்.கே.நாராயணன், பிரபாகரன் மீதான நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு காவல்துறைத் தலைவராக இருந்த மோகன்தாசுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார். (ராஜீவ் இறப்பு தொடர்பான ஜெயின் ஆணையத்தில் பதிவாகி உள்ளது)

ஆ. 1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்த சூத்திரதாரியான ஜே.என்.டிக்சிற்கு உடந்தையாக இருந்தவர் இதே எம்.கே.நாராயணன். அப்போது இந்திய உளவுத்துறையின் துணை இயக்குநராக இந்த நாராயணன் பதவி உயர்வு பெற்றிருந்தார். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்று பிரபாகரனை டில்லி அசோகா விடுதியில் நிர்பந்தித்த முக்கியமானவர்களில் இந்த எம்.கே.நாராயணனும் ஒருவர்.

இ. சுதந்திரமாக எதுவித நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் சுயமரியாதையைக் காப்பாற்றி இன விடுதலைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒட்டுப் படையாக ஆக்க முடியாத நிலையில்தான் புளொட் அமைப்பைக் கொண்டு 1989 ஆம் ஆண்டு "மாலைதீவு புரட்சி(!)" நடத்தியது இந்திய அரசு. அந்த மாபெரும் "புரட்சியின்" சூத்திரதாரியாளர் இதே நாராயணன்தான்.

1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசும் மத்தியில் வி.பி.சிங் அரசும் இருந்த போது தமிழீழத்தில் அட்டூழியமும் கோரப் படுகொலைகளையும் நிகழ்த்திய இந்தியப் படை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை விரும்பாத அப்போதைய இந்திய உளவுத் துறையின் தலைவரான இதே எம்.கே.நாராயணன், தி.மு.க. ஆட்சியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக அறிக்கைகளை தயார் செய்து வைத்துக் கொண்டார். அதனை பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களுக்கு அனுப்பவில்லை. வி.பி.சிங் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு சந்திரசேகர் பிரதமரான போது கலைஞரின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. கலைஞரின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதாரமே இந்த எம்.கே.நாராயணணின் அறிக்கைகளே. இந்த உண்மைகளை ராஜீவ் இறப்பு தொடர்பான ஜெயின் ஆணைய விசாரணையில் வி.பி.சிங் அம்பலப்படுத்தினார்.

இந்தியாவின் இளம்பிரதமர் ராஜீவை தவறாக வழிநடத்திய "மாமேதைகளில்" இந்த எம்.கே.நாராயணனும் ஒருவர்.

இன்னும் இந்தப் பட்டியல் நீட்சிக்குரியது.

இப்போது ஏன் எம்.கே.நாராயணனை இழுக்கிறீர்கள்?

அந்த எம்.கே.நாராயணன்தான் தற்போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.

தமிழ்நாட்டில் நீறுபூத்த நெருப்பாக கொடூர அடக்குமுறைகளுக்கும் அப்பால் எமது தமிழக உறவுகள் எம் விடுதலைக்காக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சிறிலங்காவில் ஒடுக்குமுறையாளர் மகிந்த ராஜபக்ச ஆட்சி பொறுப்பேற்ற காலம் முதல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சமாதானத்தின் பெயராலேயே படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் "தமிழ்" என்றாலே தடா- பொடா என்ற சட்டாம்பிள்ளைத் தனம் செய்த ஒரு ஆட்சி அகற்றப்பட்டு முதல்வர் கலைஞர் ஆட்சிக்கு வந்தார்.

செஞ்சோலையில் அப்பாவித் தமிழ்க் குழந்தைகள் கொல்லப்பட்டபோது தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பதை நிரூபிப்பது போல் கலைஞரின் ஆட்சி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடுமையான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.

ஈழத் தமிழன் சாய்ந்து அழ எங்கள் தாய் தமிழகத்தின் தோள் மீளக் கிடைத்தது. தொடர்ந்து தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். இந்தியப் பிரதமர் அவர்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்தார் கலைஞர்.

தமிழ்நாடு எங்கும் ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான கண்டனக் குரல் 1980-களின் மத்தியைப் போல் வீறு கொண்டு எழ வெலவெலத்துப் போனது எம்.கே.நாராயணன் குழு.

அதே தி.மு.க. ஆட்சி-

அதே கலைஞர் முதல்வர்-

அதே எம்.கே.நாராயணன் (இப்போது பிரதமருக்கே ஆலோசகர்)

அதே ஊளைச் சப்தம்

எனும் வகையில்

"தமிழ்நாட்டிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தல்"

"அலுமினியம் கடத்தல்- பால்ரசு கடத்தல்- தமிழ்நாடு மீண்டும் புலிகளின் தளமாகிவிட்டது."

ஆனால் அசைத்துப் பார்க்க முடியவில்லை எம் தமிழக உறவுகளின் ஆதரவுப் பலத்தை.

அத்துடன் வான்புலிகளின் வானில் வட்டமிட்ட செய்தியானது தமிழ்நாட்டின் முன்னெப்போதையும் விட பெருத்த ஆதரவுப் பேரலையை உருவாக்கி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பாராட்டாத தமிழக ஏடுகளே இல்லை-

ஒட்டுமொத்த "தமிழர்" ஊடகமும் மாறிவரும் போது "தமிழர் விரோத குழுக்கள்" என்ன பாடுபடும்.

இப்பேராதரவை சீர்குலைக்கவே எம்.கே.நாராயணன் குழுவினர் தற்போது கையிலெடுத்திருக்கும் கொடூர ஆயுதமே "தமிழ்நாட்டு மீனவர் படுகொலைகள்".

ஏன் இப்போது கையிலெடுக்கின்றனர்?

புதுடில்லியில் கூடுகிறது- தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாடு.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்தவை ஒப்பாரி வைக்கச் சொல்லி அந்த ஒப்பாரியில் குளிர்காயத்தான் 5 அப்பாவித் தமிழ்நாட்டு உறவுகளை மாற்று உடையில் வந்து சிங்களப் படை படுகொலை செய்திருக்கிறது.

சுட்டுக் கொன்றது சிங்களவன் என்று தப்பி வந்த தமிழக மீனவ உறவுகள் பக்கம் பக்கமாய் நாள்தோறும் ஏடுகளில் பேட்டிகள் அளித்து வருகின்றனர்.

ஆனால் டில்லிச் சட்டாம்பிள்ளைகளோ இந்திய கடற்படை தளபதி மூலமாக "புலிகள் செய்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது" என்று கோடிட்டுக் காட்டுகிறார்களாம்.

இதற்கு மூலமாக இருக்கும் எம்.கே.நாராயணன் குழுவினரும், "இதோ நம் கடற்படைத் தளபதியே சொல்லுகிறார். சிறிலங்கா அரசாங்கம் சொல்லுகிறது. அதோ மகிந்த வருகிறார். புலிகளைக் கண்டித்து தீர்மானத்தைப் போடுவோம். எச்சரிப்போம். தமிழ்நாட்டு சனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தது போலிருக்கும்" என்று புதுடில்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களுக்கு தூபம் போடும் கேவலத்தைச் செய்து வருகிறது.

அண்மையில் தமிழக நாளேடான ஜனசக்திக்கு தமிழக மீனவ உறவுகளின் படுகொலை குறித்தும் இத்தகைய சதிகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணலில்,

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழ் மக்களும் எப்பொழுதும் தொப்புள்கொடி உறவுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இவ் உறவை சீர்கெடுக்கும் நோக்கோடு சிறிலங்காப் படைகள் தாங்களே தமிழக உறவுகளை சுட்டுக்கொன்றுவிட்டு அந்தப் பழியை எம்மீது சுமத்தி ஈழத்தமிழ் மக்களுடனான தமிழக மக்களின் உறவை இல்லாமல் செய்ய முனைகிறது.

இச்சதிச் செயலை தமிழக உறவுகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சிறிலங்காப் படைகளினுடைய இத்தகைய அட்டூழியங்களுக்கு இதுவரையும் ஈழத்தமிழ் மக்கள் முகங்கொடுத்து வந்தார்கள். தற்போது தமிழக மக்களை நோக்கியும் தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருக்கிறார்கள். இதனைத் தமிழகத் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்பிரச்சார உத்தியை எவருமே நம்பப்போவதில்லை.

அத்துடன் இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஒரு கூட்டுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறிக்கொண்டு எமக்கும் இந்திய படைக்கும் இடையில் மோதல் நிலையை உருவாக்கி இந்திய அரசோடு முரண்பாட்டை உருவாக்கிவிட்டு அதனால் நன்மையடைய சிறிலங்கா அரசாங்கம் ஒரு சதியைச் செய்கின்றது.

நிச்சயமாக இந்தச் சதிக்குள் இந்திய அரசு விழுந்துவிடாதென்றே நாம் நம்புகின்றோம்.

தமிழ் மக்களின் நலன் கருதி தமிழகத் தலைவர்களும் தமிழக மக்களும் கூட இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன் என்று தெரிவித்திருந்தார்.

இச்சதியை நிறைவேற்ற தில்லியிலே சகுனிகள் சார்க்கின் பெயரால் கூடுகிறார்கள்.

ஓ!

நல்லது மாமன்னர்களே!

சார்க் சபையை கூட்டுங்கள்- தீர்மானம் போடுங்கள்!

ஐக்கிய நாடுகள் சபையையும் கூட்டுங்கள்- தீர்மானம் போடுங்கள்!

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

நீதியான போராட்டம் நிர்மூலமானது இல்லை- இதுபோல் தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் தாண்டாதவர்கள் தமிழர்களும் அல்லர்.

நன்றி>புதினம்.

2 comments:

இவன் said...

இது என்ன புது கதை?

தமிழ் மீனவர்கள் மீது ஆண்டு ஆண்டு காலம்மாக தாக்குதல் நடத்தியது சிங்களப்படைகள்தான்.

திடீர் என்று புலிகள்தான் கொண்றனர் என்று கதைகட்டினால், அதை நம்ப தமிழன் என்ன இழிச்சவாயனா ?

நான் இதை நம்பவில்லை.

இவன் said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20070331124259&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0

இதை கொஞ்சம் பாருங்கள்.