Wednesday, April 25, 2007

தென்னாப்பிரிக்காவைப் போல் சிறிலங்காவுக்கும் துடுப்பாட்டத் தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிரம்!




இனவெறி கொண்ட சிறிலங்காவுக்கு அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிர திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர்.


விளையாட்டும் அரசியலும் பின்னிப்பிணைந்தவையாகவே காலங்காலமாக இருந்து வருகின்றது. இந்த வகையில் தென்னாபிரிக்க அணி தனது வரலாற்றில் சந்தித்த துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தடை பற்றிய விழிப்புணர்வு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்காவின் பிரச்சாரப் போரிற்கு முழுமையான ஆதரவைத் தருவதாக இங்கிலாந்தின் முக்கிய கட்சியான லிபரல் டெமோக்கிரட்ஸ் அறிவித்துள்ளது.

சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டித் தடைகளை எதிர்காலத்தில் பெறலாம் என்ற நிலையிலேயே தமிழர்களும் இது குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இனவெறி மற்றும் தமது குடிமக்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நாடுகள் நடத்தும் போது இத்தகைய விளையாட்டுக்களில் அந்நாடுகள் பங்கேற்பதற்கு தடைகள் ஏற்படுத்தும் நிகழ்வுகள் அனைத்து விளையாட்டுக்களிலும் இடம்பெற்று வந்திருக்கின்றன.

துடுப்பாட்டத்திலும் சிறிலங்காவுக்கு எதிராக தற்போது அனைத்துலக மன்னிப்புசபையால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரமானது ஏதோவொரு புதிய நடவடிக்கையல்ல.

ஏனெனில் நிறவெறியில் தென்னாபிரிக்கா மேலாண்மை பெற்றிருந்த காலப்பகுதியில் அது அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

1970 ஆம் ஆண்டு அனைத்துலக துடுப்பாட்டச் சபையால் மேற்கொள்ளப்பட்ட இத்தடை தென்னாபிரிக்காவை மிகவும் பாதித்ததுடன் அதன் பொருளாதாரத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு வீரர்கள் கூட தேசப்பற்றைத் துறந்து வேறு நாட்டு அணிகளில் இணைந்து அந்த நாடுகளுக்காக விளையாடும் நிகழ்வும் அரங்கேறியது.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா தனது நிறவெறிக் கொள்கையை கைவிடும் நிலையையடைந்ததும் சுமார் 21 வருடங்களுக்குப் பின்னர் இத்தடை 1991 ஆம் ஆண்டே அனைத்துலக துடுப்பாட்டச் சபையால் நீக்கப்பட்டது.

இது போலவே பல லட்சக்கணக்கான மக்களை அவர்களது மண்ணிலிருந்து அகதிகளாக வெளியேற்றியும், தனது குடிமக்கள் எனக் கூறிக் கொள்ளும் தமிழ் மக்கள் மீது இலக்கற்ற முறையில் வான் மற்றும் ஆட்டிலெறித் தாக்குதல்களை மேற்கொண்டு கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 3,000-க்கும் மேலான எமது உறவுகளைக் கொண்றுள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இத்தகைய தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.

ஈராக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக காணமல் போவோர் பட்டியலைக் கொண்டுள்ள சிறிலங்கா, மேற்படி இலக்கற்ற கொலைகளிற்கும் மேலாக தமிழ்மக்கள் மீதான பொருளாதார, உணவு மற்றும் மருந்துத் தடையையும் தொடர்ச்சியாக அமுல்படுத்தி வருகிறது.

இந்த விவகாரங்களை எமது நாடுகளிலுள்ள அரசியற் கட்சிகள் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து சிறிலங்கா மீது பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மேலும் இணையத்தளங்கள், செய்தி ஊடகங்களினூடாக இப் பிரச்சாரத்தை பலமாக முன்னெடுத்து நமது மக்களின் இன்னல்களை உலகறியச் செய்வோமானால் சிறிலங்காவிற்கான தென்னாபிரிக்காவை ஒத்த தடை தானாகவே ஏற்படும்.

நன்றி>புதினம்.

No comments: