Monday, April 16, 2007

அன்று எம்.ஜி.ஆர்... இன்று கலைஞர்!



- குமுதம் ரிப்போர்ட்டர்-
இது வரை வெளி உலகத்தை எட்டிப் பார்க்காத ஒரு செய்தி உண்டு. ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அழைப்பதில் வெற்றி பெற்ற ஜெயவர்தனே, அந்த ராணுவம் தமது சுட்டுவிரல் கட்டளைக்கு அடி பணிந்து செயல்படவேண்டும் என்றார். அதனையும் அன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஈழப் போராளிகளின் கடல் பயணங்களைக் கட்டுப்படுத்த இந்திய_இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து போக வேண்டும் என்றார். அதனையும் ராஜிவ் காந்தி ஏற்கும் நிலையில் இருந்தார். உடன்பாடு தயார். கையெழுத்தாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய முதல்வர் அமரர் எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிந்தது. அவர் மின்னல் வேகத்தில் தலையிட்டார். கூட்டு ரோந்து என்ற உடன்பாடு புதைகுழிக்குப் போனது.

கூட்டு ரோந்து என்ற கூட்டுச் சதியை முறியடிப்பதற்காகவே அவர் டெல்லி பறந்தார். சிங்கள இனவாதிகள் சீற்றம் கொண்டனர்.

அண்மையில் கொழும்பு ராணுவ விமான தளத்தை வான் வெளியில் பறந்து வந்து ஈழப் போராளிகள் தாக்கினர். நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் கவலை தெரிவித்தார். இந்தியா_இலங்கை கடற்படை கூட்டு ரோந்துத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார். திடுக்கிட்டுப் போனோம். எதற்காகக் கூட்டு ரோந்து? யாரைக் காப்பதற்காகக் கூட்டு ரோந்து?

அண்மைக் காலமாக இந்தக் கூட்டு ரோந்துத் திட்டம் வெகுவேகமாக வியாபாரம் செய்யப்படுகிறது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதனைத் தடுக்கக் கூட்டு ரோந்து என்கின்றனர்.

தமிழக மீனவர்களைத் தாக்குவது இலங்கைக் கடற்படையினர் அல்ல. விடுதலைப் புலிகள்தான். ஆகவே அதனை முறியடிக்க கூட்டு ரோந்து என்று சிங்கள இனவாத அரசு பொய்யை விற்பனை செய்கிறது.

தங்களைத் தாக்குவது_சுடுவது இலங்கைக் கடற்படையினர்தான் என்பதனை, ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தமிழக மீனவர்கள் உறுதி படக் கூறுகிறார்கள். தமிழக மீனவர்களை ஈழப் போராளிகள் தாக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதும் இல்லை.

ஈழப் போராளிகளுக்கு பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்கிறார்கள் என்று, முன்னர் தமிழக மீனவர்கள் நமது கடலோரக் காவல்படையினரால் சோதனைகளுக்கு ஆளானார்கள். இப்போது அப்படி ஒரு குற்றச்சாட்டும் எழவில்லை.

அண்மையில் கன்னியாகுமரிக்கும் கொழும்பிற்கும் இடையே தமிழக மீனவர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள்தான் என்று சிங்கள அரசு சேதி சொன்னது. இல்லை இல்லை. தங்களைக் கடத்திச் சென்று தாக்கிச் சுட்டது இலங்கை கடற்படையினர்தான் என்று, நமது மீனவர்கள் சொன்னார்கள். அவர்கள் சாதாரண உடையில் வந்த ராணுவ ரவுடிகள் என்பதனை உறுதி செய்தனர்.

ஆனால், இந்திய மீனவர்களைச் சுடுவதில் விடுதலைப்புலிகளின் பங்கும் இருப்பதாக, நமது கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா சொன்னதாக ‘இந்து’ ஏட்டில் மட்டும் (31 மார்ச் 2007) ஒரு செய்தி வந்தது. இந்தச் செய்தி இலங்கை அரசிற்கு ரொம்ப மகிழ்ச்சி அளித்தது. பாருங்கள். இந்தியக் கடற்படைத் தளபதியே சொல்கிறார் என்று சொக்கிப் போனார்கள்.

இந்திய_இலங்கைக் கடற்படையின் கூட்டு ரோந்துத் திட்டத்தை நியாயப்படுத்துவதற்குப் பல்வேறு தரப்பிலும் முயற்சிக்கின்றனர். ஒரு வாரமாக டெல்லியில் முகாம் போட்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் கூட்டு ரோந்துத் திட்டம் கனியப் போகிறது என்று களிப்படைந்தார். அந்தத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக நமது வெளியுறவுச் செயலாளரே சொல்லும் போது, சிங்கள இனவாதிகளின் சிந்தை குளிரத்தானே செய்யும்?

ஆனால் சரியான நேரத்தில் தட்டி முதல்வர் கலைஞர் தக்க பதிலடி கொடுத்துவிட்டார். கூட்டு ரோந்துத் திட்டம். தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதனை ஏற்கமாட்டோம் என்று சட்டமன்றத்திலேயே அவர் அறிவித்திருக்கிறார்.

சிங்களக் கப்பற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க கூட்டு ரோந்துத் திட்டமாம். மனநோயாளிகள் கூட அதனை ஏற்க மாட்டார்கள்.

தங்கள் ஆவியால் ஈழத்தை ஆராதனை செய்பவர்கள் ஈழப் போராளிகள்.

அவர்களை இன்றுவரை இலங்கை ராணுவம் நேருக்கு நேர் சந்திக்க அஞ்சுகிறது. எனவே, கடந்த முப்பது ஆண்டுகளாக கூட்டு ரோந்து என்று, இந்தியாவை அவர்களுக்கு எதிராகத் திருப்ப முனைகிறது.

இரு நாடுகளின் கடல் எல்லைகளைத் தெளிவாக வரையறுக்க முடியாது. எனவே, பாகிஸ்தான் மீனவர்கள் குஜராத் கடற்பரப்பிற்குள் வந்து விடுகிறார்கள். அப்படி வருகின்றவர்களை இந்தியக் கடற்படையோ, கடலோரக் காவல் படையோ சுட்டு வீழ்த்துவதில்லை. கைது செய்கிறார்கள். அதே போல் எல்லை கடந்து கராச்சி கடற் பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் சுட்டுப் பொசுக்குவதில்லை. கைது செய்கிறார்கள்.

ஆனால், எல்லை தாண்டி வந்து விட்டதாகத் தொடர்ந்து தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொண்டே இருக்கிறது. சிங்கள மீனவர்கள் எல்லை கடந்து இந்தியக் கடல் பகுதிக்கு வருகிறார்கள். நமது கடற்படையோ கடலோரக் காவல் படையோ அவர்களைச் சுட்டுப் பிணமாக்குவதில்லை.

வங்கதேச மீனவர்கள் வழி தவறி சென்னைக்கும் வந்து விடுகிறார்கள். அவர்களை நாம் சுடுவதில்லை. ஏன்? தாய்லாந்து. மியான்மர் நாட்டு மீனவர்களும் சென்னை வரை வந்து விடுகிறார்கள். அவர்களை நாம் சுடுவதில்லை. கைது செய்கிறோம். திருப்பி அனுப்புகிறோம். ஏன்? அண்மையில் சிங்கள மீனவர்கள் கடற் சுழற்சியால் திசை மாறி தேவனாம்பட்டினம் வந்தனர். அவர்களை நமது மீனவர்களே வரவேற்றனர். காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் இவைதான் உலகம் முழுமையும் உள்ள மரபு.

ஆனால், தங்கள் கடல் எல்லையோரம் வரும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொண்டேயிருப்பார்களாம். அந்தக் கடற்படையினரை இலங்கை அரசால் கட்டுப்படுத்த முடியாதா? இலங்கைக் கடற்படையினர் என்ன கட்டுக்குள் அடங்காத ரவுடிகளா? அப்படி அவர்கள் தமிழக மீனவர்களைச் சுடுவதைத் தடுக்க, இரு நாட்டுக் கடற்படையினரும் கூட்டு ரோந்து போக வேண்டுமாம்.

அந்த வாதத்தை வலுப்படுத்தத்தான் கன்னியாகுமரி மீனவர்களை இலங்கைக் கடற்படை ரவுடிகள் சுட்டுக் கொன்றனர். இத்தகைய படுகொலைகளை சிங்கள அரசின் உத்தரவின் பேரில், அதன் கடற்படையினர் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆமாம். கூட்டுரோந்துத் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்கிறார்கள். நல்ல மனச்சாட்சியுள்ள மனிதர்களால்தான் நியாயத்திற்குக் குரல் கொடுக்க முடியும். தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், முதல்வர் கலைஞரின் முடிவு அறியாமல் மைய அரசு எந்த முடிவு எடுத்தாலும். விபரீத விளைவுகளுக்கே வழி வகுக்கும். ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் நமது பிரதமர் அதனை அறிவார்.

ஈழப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு, அதற்கான திட்டம் தயார் என்று ராஜபட்சே அரசு அறிவிக்கிறது. அதே சமயத்தில் விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்கும் நாசவேலைகளைத்தான் செய்கிறது என்று நாம் கூறவில்லை, இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறுகிறார். (இந்து 6.4.2007)

கொழும்பு ராணுவ விமான தளத்தை ஈழப் போராளிகள் தாக்கினர். அதனை இலங்கையின் நட்பு நாடுகள் கூட கண்டிக்கவில்லை. சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு அனுதாபம் தெரிவிக்கவில்லை. காரணம், மனித உரிமைகள் அனைத்தையும் ஒழித்துவிட்டோம் என்று அவரே கூறுகிறார்.

இப்படிச் சொந்த மண்ணிலேயே தனிமைப் பட்டு நிற்கும் ராஜபட்சே அரசு, இன்றைக்கு யாழ் மாவட்டத்தில், குறிப்பாக முல்லைத் தீவுகளைச் சுற்றி 40 ஆயிரம் துருப்புகளைக் குவித்திருக்கிறது. அதே சமயத்தில் இந்தியா_ இலங்கைக் கடற்படை கூட்டு ரோந்து என்கிறது. இதன் விளைவு மன்மோகன் சிங் அரசிற்குத் தெரியாதா என்ன?

கூட்டு ரோந்து என்பது தமிழ் இனத்தையே அழிக்கத் துடிக்கும் சிங்கள இனவாதத்திற்குச் சேவை செய்ததாகவே இருக்கும்.

- குமுதம் ரிப்போர்ட்டர், April 19, 2007

No comments: