Sunday, April 08, 2007

சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது: பழ. நெடுமாறன்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு தீர்வு காண முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் சார்பில் "ஈழத் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும்-தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
மனித உரிமை இயக்க மாநிலத் தலைவர் பூமொழி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார்.

இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது:
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்தே அங்கு இனப்பிரச்சினை நீடிக்கிறது. ஈழத்தமிழர்களை சிறிலங்கா அரசு இரண்டாம்தர குடிமக்களாக நடத்தி வருகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினர் உயர்பதவிக்கு வரமுடியும். ஆனால் சிறிலங்காவிலோ கடற்படை, விமானப் படைகளில் தமிழர்கள் சேர முடியாது.

சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு உள்பட்டு ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று பிரணப் முகர்ஜி கூறியுள்ளது சாத்தியமில்லை.

அங்கு மனித உரிமை மீறல் அதிகம் நடக்கிறது. உலக நாடுகள் இந்த மனித உரிமை மீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, பெரியார் தி.க.தலைவர் தா.செ.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக 50 மூட்டை அரிசியும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மருந்துப் பொருள்களும் வழங்கப்பட்டன.

சிறிலங்கா ராணுவத்தைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு இந்திய அரசு உதவிகள் எதுவும் செய்யக் கூடாது எனவும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு பயிற்சியளித்து, ஆயுதங்களை வழங்க வேண்டும், மீனவர்களின் பாதுகாப்பில் இந்திய கடற்படையினர் அக்கறை காட்ட வேண்டும், அனைத்து பொடா வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக வெள்ளிக்கிழமை கடலூரில் நடைபெற்ற ஈழத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் பழ. நெடுமாறன் பேசியதாவது:

இலங்கையில் ஈழத் தமிழர்கள் நடத்தும் விடுதலைப் போராட்டம், பிற நாடுகளில் நடைபெறும் போராட்டம் போன்றது அல்ல.

இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நாடும் ஆதரவு அளிக்கவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமுதாயம் தலையிட்டு இருக்க வேண்டும். ஆனால் எந்த நாடும் சிங்கள அரசைக் கண்டிக்க முன்வரவில்லை.

இந்திய அரசும் அந்த மக்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவி அளித்து வருகின்றன. இந்த நிலையில் விடுதலைப் புலிகள், சிறிலங்கா விமான நிலையம் மீது விமானத் தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை மலைக்க வைத்தது.

சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக ராடார் சாதனங்களை இராமேஸ்வரத்தில் இந்திய அரசு நிறுவி இருக்கிறது. இது இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க, சிறிலங்கா அரசுக்கு இந்தியா துணைபோவதாக அமையும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படவே விடுதலைப் புலிகள் போராடுகிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லாவிட்டால், இலங்கையில் அன்னிய நாட்டுத் தளம் அமைக்கப்பட்டு இருக்கும். அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து இருக்கும். ஈழத் தமிழர்களுக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் உதவி செய்ய வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் அனைத்தையும், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொடுக்க முடிவு செய்தோம்.

ஆனால் இதற்கு இந்திய அரசு ஒப்புதல் தர வேண்டும், பலமுறை கடிதம் எழுதியும் இந்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்றார் பழ.நெடுமாறன்.

கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தடா நல்லரசன் தலைமை தாங்கினார். பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தி.வேல்முருகன், கடலூர் நகாரட்சி துணைத் தலைவர் பழ.தாமரைச்செல்வன், ம.தி.மு.க. வெளியீட்டு அணி செயலர் வந்தியத்தேவன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நிர்வாகி புகழ்மங்கான், கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தி பஞ்சமூர்த்தி, மாவட்ட பா.ம.க. அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி>புதினம்.

No comments: