Sunday, April 22, 2007

சிறிலங்காவிற்கான நிதியை முடக்க வேண்டாம்: புஸ்சுக்கு மகிந்த அவசர கடிதம்!

சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை முடக்க வேண்டாம் என அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை தாம் விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் தனது கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களால் ஏறத்தாழ 300,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். எனவே இதனை கட்டுப்படுத்த அழுத்தங்களை கொண்டு வருமாறு அமெரிக்காவிற்கு அதன் செனட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய அமைப்புக்களிடம் இருந்து அதிக அழுத்தங்கள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து மகிந்த இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

மகிந்தவின் கடிதம் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் வெளிவிவகாரதுறை அமைச்சின் ஊடாக அமெரிக்காவிற்கான சிறிலங்காவின் தூதுவர் பேர்னாட் குணதிலக்க மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனை குணதிலக்க உறுதிப்படுத்திய போதும் மேலதிக தகவல்கள் எதனையும் வழங்க மறுத்துவிட்டார். எனினும் தாம் வெள்ளை மாளிகையின் பதிலுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் மோசமான மனித உரிமை மீறல்களால் தமது செனட் குழுவில் பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக கடந்த மாதம் அமெரிக்காவின் வெளிவிவகார உறவுகளுக்கான செனட் குழுவின் உயர் அதிகாரியான றிச்சாட் ஜீ லூகர் மகிந்தவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் நாள் சிறிலங்காவில் 'மனித உரிமைகள் மோசமடைந்து வருவது மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதாக' குடியரசுக் கட்சியை சேர்ந்த லூகர் தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

நீதி, பொதுமக்களின் உரிமைகள், அரசியல் உரிமை, சுதந்திரமாக குரல் கொடுக்கும் உரிமை, அரசின் செயற்திறன், சட்டத்தை நிலைநாட்டுதல் போன்ற செயற்பாடுகளின் நற்பெறுபெறுகளின் அடிப்படையில் தான் இந்த நிதி வழங்கப்படுவது உங்களுக்கு தெரிந்த விடயம்.

இந்த செயற்பாடுகளில் ஏற்படும் பாதிப்புக்கள் மிலேனியம் சலஞ் கணக்கு நிதியம் சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் என தெரிவித்தார்.

லூகரிடம் இருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டதாக குணதிலக்க உறுதிப்படுத்தியதுடன், அதற்கு மகிந்த பதில் அளித்தாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்காவின் நாடாளுமன்றம், மற்றும் காங்கிரஸ் சபை என்பன மீளாய்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவின் வலிமை மிக்க அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏப்ரல் 6 ஆம் நாள் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளமை என்பன மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை பெறும் தகமைகளில் இருந்து சிறிலங்காவை நீக்குவதற்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமது நிறுவனம் சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக மீளாய்வு செய்து வருவதாகவும் அங்கு நடைபெறும் மோதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தமக்கு கவலையை அளிப்பதாகவும் மிலேனியம் சலஞ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி<புதினம்.

No comments: