பொடா வழக்கிலிருந்து பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோரை விடுதலை செய்து இன்று செவ்வாய்க்கிழமை பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13 ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் பிணையில் வெளிவந்த போதும், பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசக்கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.
அம்மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.
பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதராமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.
அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
நன்றி>புதினம்.
Tuesday, April 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல செய்தி வந்திருக்கிறது சந்தோஷம்.
Post a Comment