Thursday, April 19, 2007
கிளிநொச்சியில் அகழாய்வு: சுடுமண் சிற்பங்கள் கண்டெடுப்பு!
கிளிநொச்சி அக்கராயனை அடுத்த ஆற்றுப்படுக்கையின் ஓரமாக உள்ள சின்னப்பல்லவராயன்கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது தொன்மையான செய்நேர்த்தியுடன் கூடிய பல சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழீழ கல்விக் கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரனின் வழிகாட்டலில் ந.குணரட்ணம் குழுவினரால் இந்த சுடுமண் சிற்பங்கள், உடைந்து சிதைந்த நிலையில், 4 அடி ஆழம் வரையான குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடைந்த நிலையிலான சுடுமண் சிற்பங்களின் துண்டுகளை இக்குழுவினர் தற்போது பொருத்தி முழுமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்டவற்றில் 22 அங்குல உயரம் கொண்ட தியான நிலையுடன் கூடிய பெண்ணுருவ சுடுமண் சிற்பம், 45 அங்குல உயரம் கொண்ட சுடுமண் யானைச்சிற்பம், 12 அங்குலமளவு உயரமான யானைச்சிற்பம், கரடி, பன்றி, நாய் ஆகியனவற்றின் உருவச்சிற்பங்களும் சிறப்பான கலை நேர்த்தியுடன் மண்ணில் உருவாக்கப்பட்டு சுடப்பட்டுள்ளன.
இதில் பெண் உருவச்சிலையின் தியானநிலை அதிகம் துல்லியமான செய்நேர்த்தி கொண்டதாகும். இங்கு தியான நிலைப் பெண் சிலையின் முழுவடிவமும், அதன் பகுதி வடிவங்களும் ஒளிப்படங்களில் உள்ளன. இவற்றுடன் மண்ணினால் செய்யப்பட்டு சுடப்பட்ட விளக்குகள் உட்பட்ட பெருமளவிலான பொருட்களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment