Sunday, April 01, 2007

இலங்கையுடன் இனி பேச்சு கிடையாது: விடுதலைப் புலிகள்.

கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. அதை முழுமையாக கைவிட தீர்மானித்துள்ளது. எனேவ இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காமல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை அரசு திட்டமிட்டால், இலங்கையுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை. முழு அளவிலான போருக்கான அழைப்பே இது.

மிகப் பெரிய அளவிலான போருக்கு அரசு விரும்புவதாகவே நாங்கள் எடுத்துக் கொள்வோம். இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவிலான, மிகப் பெரும் உயிரிழப்புகளைப் பார்க்கப் போகிற போராக அது இருக்கும். பெரும் சீரழிவை இந்தத் தீவு சந்திக்க நேரிடும். அதை யாரும் தடுக்க இயலாது.

போர் நிறுத்த ஒப்பந்தம் மிகச் சிறப்பானது. வன்முறைக்கும், தமிழர்களின் துயரங்களுக்கும் அது ஒரு முடிவு கட்டியது. நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வழி வகுத்தது.

அப்படிப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக முறித்துக் கொள்ள இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அப்படிச் செய்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தால் அதை ஏற்க முடியாது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அந்தச் சூழ்நிலையில்தான் பேச்சுவார்த்தையை நடத்த முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால், முதலில் தமிழர்கள் மீதான வன்முறையும், அடக்குமுறை தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்றார் தமிழ்ச் செல்வன்.
http://thatstamil.oneindia.in/news/2007/04/01/ltte.html

No comments: