Thursday, April 12, 2007

'ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்': நிமால் சிறீபால டீ சில்வா!!!

"ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது.

சுகாதார சேவைகள் பிரிவில் ஏற்பட்ட சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியதனால் தான் எம்மை அவர் விசர் நாய் என அழைத்துள்ளார். ஊடகத்துறையினரும் சாதாரண குடிமக்களே எனவே அவர்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் தேவையில்லை.

இந்த சிறப்பு சலுகையும் ஒரு இலஞ்சமே, எங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதனை விட ஊடகத்துறையின் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதுடன், அனைத்துலகத்தின் தரத்திற்கு ஊடகத்துறையினர் மதிக்கப்பட வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: