Tuesday, April 10, 2007

போரில் பாதிக்கப்பட்டது உல்லாசப் பயணத்துறையே: ரொய்ட்டர்ஸ்.

சிறிலங்காவில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு உல்லாசப் பயணத்துறையில் மிகவும் ஒரு முன்னேற்றமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது ஆரம்பித்துள்ள மோதல்களில் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துறையாக உல்லாசப் பயணத்துறையே இருப்பதாக அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் சிறிலங்காவில் உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் தினமும் இடம்பெறும் கடல், வான், தரை தாக்குதல்கள் அதற்கு சாதகமாக இல்லை.

இப்படிப்பட்ட நிலைமைகளில் உல்லாசப் பயணத்துறையே முதலாவதாக பாதிக்கப்படுவதாக சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை சபை தலைவர் ரென்ரன் டீ அஸ்விஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பெப்ரவரி மாதம் 18.3 விகிதத்தால் உல்லாசப் பயணிகளின் வரவு வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து வீழ்ச்சி காண ஆரம்பித்திருந்தது. மேலும் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரனர்த்தத்துடன் வீழ்ச்சி கண்ட உல்லாசப் பயணத்துறை அதன் பின்னர் மீளவே இல்லை.

கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைகளில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்புக்களில் 25 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

சிறிங்காவில் அமைதி ஏற்படாத வரை மக்களின் அச்சம் நீங்கப்போவதில்லை. உதாரணமாக சில நாடுகளின் பணய எச்சரிக்கைகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. இவை உல்லாசப் பணயத்துறையை கடுமையாக பாதிக்கும் என பயண முகவர் சபையின் தலைவர் வி.மகாதேவன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகளவில் பயணிகள் வரும் காலப்பகுதியான ஜனவரியில் அது சிறிதளவு முன்னேற்றம் கண்டிருந்தது. எனினும் கடந்த 4 மாதங்களை கடந்த ஆண்டின் மாதங்களுடன் ஒப்பிடும் போது அது இரட்டை எண்ணில் அது வீழ்ச்சி கண்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலின் பின்னர் ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட ஆசியாவின் மூன்றாவது பெரிய கதே பசுபிக் வானூர்தி நிறுவனம் சிறிலங்காவிற்கான தனது தினசரி வானூர்தி சேவையை நிறுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தாக்குதலை தொடர்ந்து உல்லாசப் பயணத்துறைக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. விடுதிகளில் பதிவு செய்யப்பட்ட அறைகளின் முற்பதிவுகள் மிகவும் அதிகளவில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனினும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்கள் போன்றவற்றின் வரவினால் இவை ஒரளவு நிரப்பப்படுகின்றன.

நாங்கள் எவ்வளவை இழந்துள்ளோம் என எமக்கு தெரியாது, தற்போது பயணிகள் பெருமளவில் வரும் காலம். ஆனால் நாம் எமது இலக்கை அடையவில்லை என சிறிலங்காவின் விடுதிகள் சபை தலைவர் கிரன் கூரே தெரிவித்துள்ளார்.

நாம் சில வியாபார உத்திகளை மேற்கொண்டுள்ளோம் அதில் இந்தியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் எமது வியாபாரங்களை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் கதே பசுபிக் தனது வானூர்தி சேவையை எதிர்வரும் 22 ஆம் நாளில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அது ஒரளவு முன்னேற்றகரமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்.

No comments: