Monday, April 23, 2007

சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது: தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு.



தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க. மணி:

இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள்ள செய்தி நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

அங்கு முப்படை தாக்குதல் நடக்கின்றது. தமிழர் வீடுகளுக்கு சென்று கணவன் கண்முன்பு மனைவியை சிறிலங்கா இராணுவத்தினர் கற்பழிக்கின்றார்கள். அங்கே சோகமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.

அங்குள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் சமரச தீர்வு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் உட்பட பலர் சொல்கின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் சிறிலங்காவுக்கு இராணுவ உதவியை மத்திய அரசு வழங்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

இதற்காக இங்கு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அனுப்ப வேண்டும்.

(கோ.க. மணி பேசியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பதிலுக்கு பா.ம.க.வினரும் எழுந்து நின்று தாங்கள் பேசுவது சரிதான் என்று குரல் கொடுத்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சபாநாயகர் அமைதிப்படுத்தினார்.)

சுதர்சனம் (காங்கிரஸ்):

பா.ம.க. தலைவர் இங்கு ஒரு விளக்கத்தைச் சொல்லி இருக்கின்றார். மத்திய அமைச்சரவையில் பா.ம.க.வும் பங்கு வகிக்கின்றது. அங்கே அவர்களுக்கு சொல்ல வாய்ப்பு இருக்கின்றது. அதனை விட்டு விட்டு இங்கே தீர்மானம் கொண்டு வர சொல்கின்றார். இதனை விவாதிக்கும் இடம் மத்திய அரசு தான்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு):- இதில் மத்திய அரசு நிலைப்பாடு சரியில்லை.

முதலமைச்சர் கருணாநிதி:

நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் இந்த அவையில் பதிவாகியிருக்கின்றன.

அதே நேரத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் பத்திரிகைகளிலே வந்த கருத்துக்கள் அந்த கருத்துக்களின் அடிப்படையிலே தான் இங்கே நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரும் இங்கே உரையாற்றிருக்கின்றார்கள்.

பத்திரிகையிலே வந்த இந்த கருத்துக்கள், செய்திகள் உண்மையானவைதானா என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். என்ன செய்தி வந்திருக்கின்றதென்றால் இலங்கைக்கு போர்க் கருவிகளை வழங்குவதில்லை என்ற முடிவுக்கு மாறாக இந்திய அரசு தற்போது ஆயுதங்களை வழங்கியுள்ளது என்று செய்தி வந்திருக்கின்றது.

இதனை படிக்கின்ற யாரும் நம்முடைய மணி

துடித்தது போல,

பதைத்தது போல

பதறியதிலே எந்தவிதமான தவறும் இல்லை.

ஆனால் இது உண்மைதானா என்பதனை அறிந்து கொள்ள வேண்டிய அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்தது உண்மைதான் என்றால் நாம் மத்திய அரசுக்கு, இதிலே இன்னும் ஒற்றுமையோடு இருந்து நம்முடைய அழுத்தமான வேண்டுகோளை விடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

- நீங்கள் தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு ஆயுதம் உதவிடக்கூடாது,

- தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள்

என்று கேட்டுக் கொள்கின்ற உரிமை நமக்கு இருக்கின்றது,

பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று மாத்திரம் சொல்லி இந்த அவையில் அமைகிறேன் என்றார் முதலமைச்சர் கருணாநிதி.

தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதம் தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

சிங்கள அரசுக்கு இந்திய அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியிருக்கிறது என்ற செய்தி, தமிழ் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. பல நூறுகோடி ரூபாய் பெறுமான கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள், கரையோர ரோந்துக் கப்பல், எறிகணைகள், உயர்ரக வெடி பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன என்ற செய்தி ஏப்ரல் 20 ஆம் தேதியன்றே வெளிவந்துவிட்டது. உடனடியாக மருத்துவர் இராமதாஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இன்று அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி இப்பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவ. புண்ணியம் அவர்களும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் முதலமைச்சர் "இச்செய்தி உண்மைதானா என்று அறிந்து கொண்டு பிறகு கண்டனம் தெரிவிக்கலாம் என்று தமிழர்களின் கொதிப்புணர்வை அடக்குவதற்கு தண்ணீர்த் தெளித்திருக்கிறார்.

செய்தி வந்து 3 நாட்கள் ஆகியும் இச்செய்தியில் உள்ள உண்மையை மத்திய அரசிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள முதலமைச்சர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது.

சிங்கள அரசுக்குப் போர்க்கருவிகளை வழங்குவதில்லை என பிரதமர் மன்மோகன்சிங் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறும் வகையில் நடைபெற்றுள்ள இச்செயலுக்கு தமிழகம் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய வேளையில் பிரச்சினையை ஆறப்போடுவது ஈழத்தமிழர்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.

உடனடியாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் மூலம் நமது கடும் கண்டனத்தை பிரதமருக்குத் தெரிவிக்க முதலமைச்சர் மு.கருணாநிதி முன்வரவேண்டுமென வற்புறுத்துகிறேன் என்றார் நெடுமாறன்.
நான்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

உலகத்தமிழரின் பலம் ஒன்றாக இணையவேண்டும். தமிழர் ஒன்றானது கண்டு எதிரிகள் படை ஓடி மறையவேண்டும்.