Monday, April 23, 2007

பி.பி.சி செய்திக்கு எதிராக புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழ் மக்கள் திரண்டெழுகின்றனர்!!!

பிரித்தானியாவில் இடம்பெறும் வங்கிக் கடனட்டை மோசடியில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதரகம் தெரிவித்த குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மிக வன்மையாக மறுத்துள்ளனர்.

பி.பி.சி தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் செவ்வி வழங்கிய பிரித்தானியாவிலுள்ள சிறீலங்காத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் மக்ஸ்வெல் கீகல், பிரித்தானியாவில் இடம்பெறும் வங்கிக் கடனட்டை மோசடிக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேற்படி பி.பி.சி செய்தியில் இக்குற்றச்சாட்டு தொடர்பான விடுதலைப்புலிகளை இணைக்கும் சான்றாதாரங்களை வழங்கப்படவில்லை அதேசமயம் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் சமூகத்திடம் இருந்தான வெளிப்பாடுகள் இந்நிகழ்ச்சியில் இணைக்கப்படவில்லை. இக்காரணங்களால் மேற்குறிப்பிட்ட செய்தியாசிரியர் சிறீலங்கா அரசின் தமிழர் மீதான விசம பிரசாரத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ பக்கச்சார்பாக உதவியுள்ளார் என்றே தமிழ்சமூகம் வேதனையடைகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் கடைகளில் பாவிக்கப்படும் வங்கிக் கடன் அட்டைகளின் விபரங்கள், அங்கு பணி புரியும் தமிழர்கள் ஊடாகப் பெறப்பட்டு, அதன் மூலம் ஆசிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக நேற்று கருத்துரைத்த தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலக சமூகம் சிறீலங்கா அரசு மீது சுமத்தியுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில், இந்தப் பொய்யான பரப்புரையை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பாக, பி.பி.சி போன்ற பொறுப்பான ஊடகங்கள், மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும், சு.ப. தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்.

தமிழீழ தாயகத்திலுள்ள மக்கள் உயரிய ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்து வருவதுடன், குற்றமற்ற சூழல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தமிழ்ச்செல்வன், இதனை வெளிநாட்டு இராஜதந்திரிகள் நன்கு அறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும், தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள் அனைவரும் வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபகின்றார்கள் என்ற பாணியில் பி.பி.சி நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி, அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை உண்டாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல தமிழர்கள் பி.பி.சி தொலைக்காட்சி சேவையை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொலைபேசி வாயிலான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் பி.பி.சி தொலைக்காட்சி சேவையினர், மக்களின் குற்றச்சாட்டுக்களை எழுத்தில் தருமாறு கேட்டதற்கு அமைவாக, பலர் தமது கண்டனத்தினை எழுத்து மூலம் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்துக் கூறிய பிரித்;தானியாவிலுள்ள தமிழ் மக்கள், அனைத்துத் தமிழர்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் இந்தச் செய்தி தொடர்பாக பி.பி.சி, மற்றும் பிரித்தானியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம் என்பவற்றைக் கண்டித்து. தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனக் கூறினர்.

இதேவேளை, வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபடுவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கான பிரித்தானியக் காவல்துறையின் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும், பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சியின் செய்தி பற்றிக் கருத்துக்கூறிய அரசியல் ஆய்வாளர் ஒருவர், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும், ஆதரவாளர்களையும் ஒடுக்கும் முயற்சிக்கு பி.பி.சி அடியெடுத்து வைத்திருப்பதாகக் கூறினார்.

பி.பி.சியின் இந்தச் செய்தி உள்நாட்டுச் சேவையான பி.பி.சி-1, பி.பி.சி-24 (24 மணி நேர செய்திச் சேவை), மற்றும் பி.பி.சியின் உலகச் சேவை என்பவற்றில் முதன்மைச் செய்தியாக தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டதால், உலக அளவில் தமிழ் மக்களுக்கும், அவர்களின் தலைமைக்கு இழுக்கை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் பி.பி.சி கச்சிதமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நன்றி>பதிவு.

No comments: