"தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது."
ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு:
"போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு.
கடந்த மார்ச் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் சிறிலங்காவின் பிரதான வான்படைத் தளத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கத்துடன் போராடி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் வான்படை வலு இடம்பெற்று வரும் போரில் பயங்கரமான புதியவகை உத்தி.
5 ஆண்டு கால போர்நிறுத்த உடன்பாடு பேச்சளவில் மட்டும் இருக்கும் போது போர் தீவிரமடைந்து வருகின்றது.
தமது வான்படையின் இரு வானூர்திகள் கொழும்பு அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையாக உள்ள சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவருடன் வானோடிகள் நின்று எடுத்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தளத்தில் தரித்து நின்ற வான்படையினரின் வானூர்திகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக இரு தரப்பும் முரண்பாடான தகவல்களை தெரிவித்தனர்.
சிறிலங்காவின் தெற்குப்பகுதி பெருன்பான்மையாக சிங்கள மக்களைக் கொண்ட பகுதியாகும். அங்கு இடம்பெற்ற இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதுவாக நகரும் இலகுரக வானூர்தி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியின் மேலாக 400 கி.மீ (250 மைல்) தூரத்திற்கு யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு பயணித்து வந்தது பெரும் சவாலாகும்.
இந்த தாக்குதலில் பாதிப்படைந்த படையினர் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மேலும் மார்ச் 28 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது விடுதலைப் புலிகளுக்கு ஒரு பின்னடைவாகும். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு முன்னரும் விடுதலைப் புலிகளின் பகுதி கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி 155,000 மக்கள் கடந்த 6 வாரங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் கிழக்கின் முழுப்பகுதியையும் விடுவித்து விடலாம் என அராங்கம் நம்புகின்றது.
சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மற்றுமொரு களமுனையையும் திறந்துள்ளது. அதன் பிரதான நோக்கம் மடு தேவாலயத்தை கைப்பற்றுவது தான். அதன் நோக்கம் கிறிஸ்தவர்களின் ஆதரவை பெறுவதாகும்.
தற்போதும் அரசாங்கத்தின் பேச்சாளர்கள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக வாயை திறப்பதில்லை. ஆனால் எதிர்வரும் 3 வருடங்களில் போரில் வெற்றிபெற்று விடலாம் என அதிகாரிகள் பேசுகின்றனர். இந்த போரில் 70,000 மக்களின் உயிரிழந்துள்ளனர். இதில் 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்த மோதல்களில் உயிரிழந்த 4,000 மக்களும் அடங்குவர்.
எப்போதும் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. அவர்கள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் (இங்கு அவர்களிடம் சிறிய கடற்படையும் உண்டு), வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும்.
யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி தெற்கில் வந்து குண்டுகளை வீசிச் சென்ற விடுதலைப் புலிகளின் வான்படையின் வலிமை தென்பகுதிக்கு மற்றுமொரு வடிவில் போரை கொண்டு சென்றுள்ளது. இது கடும் போக்காளரான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்குகான ஆதரவை மழுங்கடித்து விடும். கடந்த கால இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது.
நன்றி>புதினம்.
Saturday, March 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment