Sunday, March 04, 2007

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீதான எறிகணை வீச்சு: சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு.

கடந்த மாதம் 27 ஆம் நாள் மட்டக்களப்பில் இடம்பெற்ற மோர்ட்டார் எறிகணைத் தாக்குதலில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மயிரிழையில் உயிர்தப்பியது தொடர்பாக சிறிலங்கா அரசாங்க தரப்புக்களுக்கிடையில் பெரும் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன.
பேரனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமது ஆலோசனைகளை கேட்கவில்லை என பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் குற்றம் சுமத்தியிருக்கின்றன.
எனினும் இராஜதந்திரிகளின் உயிருக்கு ஆபத்தான சம்பவத்துக்கு யார் பொறுப்பானவர்கள் என்பது தொடர்பாக வாக்குவாதங்கள் பல மட்டங்களில் எழுந்தியிருக்கின்றன. தாம் பயணத்திற்கு அனுமதி வழங்கியிருந்த போதும் ஆரம்பத்திலேயே அதற்கு எதிராக ஆலோசனைகளை கூறியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் 23 ஆம் படைப்பிரிவுத் தளபதி பிரிக்கேடியர் தயா ரட்நாயக்காவும் மட்டக்களப்பு பயணத்திற்கு எதிராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், களநிலைமைகள் முக்கிய அதிகாரிகளின் பயணத்துக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்திருந்ததாக மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
இதனிடையே மட்டக்களப்பு பயணத்தின் போது பாரம்பரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நாட்டின் தலைநகரை விட்டுச் செல்லும் இராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை மாத்திரமே பெற்றிருந்தனர் என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு பயணத்தில் கலந்து கொண்ட தனது பெயரை குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்ததாவது:

அது ஒரு கவனமற்ற மற்றும் புத்திசாலித்தனமற்ற நடவடிக்கை. நீங்கள் தவறாக போனால் எல்லாம் தவறாகவே நடக்கும். இது ஒரு முட்டாள்த்தனமான செயல். சிறிலங்கா அரசிற்கு அது ஒரு பிரதிகூலமான நிகழ்வு. அரச ஊடகங்களால் மேற்கொள்ளப்படடிருந்த பிரச்சாரங்களுக்கு இது ஒரு பின்னடைவாகும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் மட்டக்களப்பு பயணம் தொடர்பாக தனக்கு எந்தவிதமான எதிரான ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை எனவும் அப்படி வழங்கப்பட்டிருந்தால் தான் அந்த பயணத்தை தவிர்த்திருப்பேன் எனவும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மட்டக்களப்பு நகர் பயணம் தொடர்பாக தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற ரோகித போகல்லாகமவின் கருத்து தவறானது. பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் கடந்த மாதம் 20 ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அன்று தான் பயண ஏற்பாடுகள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் எமது பயணத்தின் போது பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகமும் எம்முடன் உலங்குவானூர்தியில் இருந்தார். எனவே தங்களுக்கு தெரியாது என எவ்வாறு வெளிவிவகார அமைச்சு கூறலாம் என அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் இவ் வார முற்பகுதியில் கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் இது தொடர்பாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது ஒரு வழமையான பயணமே. மட்டக்களப்பு தாக்குதல் தொடர்பான விளக்கங்களுக்காக தமது தூதுவர் கிளிநொச்சிக்குச் செல்லவில்லை என நோர்வே தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி>புதினம்.

No comments: