Thursday, March 29, 2007

விடுதலைப் புலிகளின் வான்படை: இந்தியா விலகி நிற்க முடிவு!!!

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதுடன் அதில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளது என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


இந்தியா, பொதுவாக இடம்பெற்று வரும் வன்முறைகளையே கவனித்து வருகின்றது, வான் தாக்குதலும் அதில் ஒன்றாகும் என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த சில வாரங்களாக சிறிலங்காவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக நாம் கவலை கொண்டுள்ளோம். இந்த சம்பவமும் இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாகவே நாம் பார்க்கிறோம்.

அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள மனித அவலங்கள் எமக்கு கவலையை அளிக்கின்றன. ஒரு தனிப்பட்ட வன்முறைச் சம்பவத்தை எடுப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. இந்த பிரச்சனையின் ஆணிவேர் தான் இன மோதல், அதுவே கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு காரணம்.

வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என விரும்பும் சிறிலங்காவில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள சமூகத்துடன் நாம் இணைந்து குரல் கொடுப்போம். எல்லா மக்களும் அமைதியுடன் இணைந்து வாழும் ஒரு தீர்வு அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் வான்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு பதிலளிப்பதனை அவர் தவிர்த்துவிட்டார். நீண்டகால மோதல்களுக்கான தீர்வே முக்கிய விடயம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் வான்படை தென் ஆசியப் பிராந்தியத்திற்கு குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தானது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்ததாக ரெடிஃப் இணையத்தளம் தெரிவித்திருந்தது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு வேறு நாடுகளின் படையினரையும் பயன்படுத்தி வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேல், உக்கிரென், பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக உக்கிரைன் நாட்டு வானோடிகள் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதான குண்டு வீச்சுக்களில் பங்குபற்றுவதாக சில தகவல்கள் தெரிவிப்பதாக ரெடிப்ஃ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவில் அதிகரித்துவரும் அந்நிய இராணுவ ஆதிக்கங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

இதனிடையே கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த இந்தியாவின் ரடார்கள் விடுதலைப் புலிகளின் வானூர்தியை கண்டறிவதில் தவறிவிட்டதாக கொழும்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதனை மறுத்த மேனன் எங்களுக்கு தெரிந்தவரையில் இந்தியாவின் ரடார்கள் செயற்திறன் அற்றதாகியதில்லை என தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: