Sunday, March 25, 2007

சிறிலங்காவை எவரும் பயமுறுத்த முடியாது: சிறிலங்காவிற்கான ஜெனீவா தூதுவர்?

சிறிலங்கா தொடர்பாக சில நாடுகளும், சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்த கருத்துக்களுக்கு தாம் கடும் எதிப்பை தெரிவிப்பதாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத் தொடரில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவிற்கான ஜெனீவாவின் புதிய தூதுவர் தயான் ஜயதிலக்க தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

சிறிலங்கா அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றது, அனைத்துலக சமூகத்துடனான அதன் பணிகளும் அப்படியானவையே. ஒரு மிகவும் தரம்வாய்ந்த ஜனநாயக நாட்டை அதன் விருப்பங்களுக்கு மாறாக சில செயற்திட்டங்களை எடுக்கும் படியோ அல்லது சில அமைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் படியோ கட்டாயப்படுத்துதல், திணித்தல், பயமுறுத்துதல் கூடாது.

சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமாயின் அவை சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் தான் எடுக்கப்பட வேண்டும். எமது நாட்டில் உள்ள நிலைமைகளை சீர்செய்வதற்கு நாம் அனைத்துலகத்தின் உதவிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அது ஒரு திறந்த ஜனநாயக சமூகம், தற்கொலைதார பிரிவினைவாத படையினருக்கு எதிராக எம்மை தற்காத்து வருகின்றோம். எம்மால் ஒரு உறுதியான சமூகத்தை அமைக்க முடியாத சந்தர்ப்பங்களில் அனைத்துலகத்தின் ஆதரவுகளையும் நாம் வேண்டி நின்றோம் என்றார்.

இக்கூட்டத்தொடரில் சில் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

சிறிலங்காவில் காணாமல் போதல்கள் கொழும்பிலும், வடக்கு - கிழக்கு மகாகாணங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், எனவே இதனை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா ஒரு செயற்குழுவை அழைக்க வேண்டும் என மனித உரிமைகள் காப்பகம், கொலம்பியன் நீதியாளர்கள் ஆணைக்குழு, அனைத்துலக ஆணையாளர்கள் ஆணைக்குழு ஆகியன தமது இணைந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

மிகவும் அதிகளவான சந்தர்ப்பங்களில் காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பான முறைப்பாடுகள் தீர்க்கப்படாமலே உள்ளன. மேலும் சிறிலங்காவின் தேசிய ஆணைக்குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை கொண்டுள்ளன.

எனவே இந்நிலையில் சிறிலங்காவில் நடைபெற்று வரும் காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன? என அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த பீற்றர் ஸ்பிலின்ரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈராக்கிற்கு அடுத்தபடியாக உலகில் காணாமல் போவோர் அதிகமாக உள்ள நாடுகளில் சிறிலங்கா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது எனவும், சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடத்தல்கள், காணாமல் போதல் போன்றவற்றை நிறுத்துவதற்கு இந்த செயற்குழு என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது எனவும் அனைத்துலக செயற்பாட்டாளர் குழுவைச் சேர்ந்த வி.கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிறிலங்கா அரசாங்க செயற்குழு உறுப்பினர்களை அழைப்பதற்கு உரிய காலத்தை அறிவிப்பதுடன், தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் தெரியப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய ஜேர்மன் தூதுவர் அன்றஸ் பேர்க் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் இடம்பெறும் பலவந்தமான கடத்தல்கள் தமக்கு கவலையை தருவதாகவும், எனினும் சிறிலாங்கா அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை நாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் சுவிற்சலாந்து தூதுவர் ஜீன் டானியல் விக்னி தெரிவித்திருந்தார்.

யாழ். மாவட்டத்திலும் கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் 700-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு செயற்குழு ஏதாவது விசேட பரிந்துரைகளை மேற்கொள்ள உள்ளதா? எனவும் விக்னி கேள்வி எழுப்பியிருந்தார்.

தமது செயற்குழு 2008 ஆம் ஆண்டு செல்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் விவாதித்து வந்ததாக பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் போவோர் தொடர்பான செயற்குழுவின் தலைவர் சன்ரிகோ கோர்சியுரா கபற்சு தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

ஜெனீவாவுக்கான ஸ்ரீலங்காத் தூதுவர் என்று இருக்க வேண்டும் அல்லவா?