Monday, March 12, 2007

சிறிலங்கா - இந்திய கூட்டுக்கடல் கண்காணிப்பை ஏற்படுத்த சிறிலங்கா அரசு சதி!!!

இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லை என சிறிலங்கா கடற்படையினர் மறுத்துள்ளதுடன், இரு தரப்பு கடல் எல்லைகளின் இருபுறமும் மீனவர்களை கண்காணிப்பதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படும் திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது.

இரு தரப்பும் இணைந்து கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், மீனவர்களின் நகர்வுகள் தொடர்பாக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் திட்டம் ஒன்றை செய்து கொள்ள சிறிலங்கா அரசு விரும்புவதாக அதன் வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றக்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர்களுக்கு காயங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், அதற்குரிய குழுவை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் சிறிலங்கா தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 10 ஆம் நாள் கச்சதீவின் தென்மேற்கு பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர் ஒருவர் பலியாகி இருந்தார். எனினும் எமது கடற்படை ஒருபோதும் இந்திய கடல் எல்லைக்குள் சென்றதில்லை. அவர்கள் நவீன உபகரணங்களை கப்பல்களில் கொண்டிருப்பதனால் தவறுகள் நிகழ வாய்புக்கள் இல்லை எனவும் எம்மீது பழியைப் போடுவதற்காக விடுதலைப் புலிகளே தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் சிறிலங்கா கடற்படையினர் திட்டமிட்டு இந்திய மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி அதன் மூலம் இந்திய - சிறிலங்கா கூட்டுக்கண்காணிப்பு என்ற வலைக்குள் இந்திய கடற்படையினரையும் இந்திய அரசையும் வீழ்த்துவதற்கு முயன்று வருவதாகவும் இந்த தந்திரோபாய விளையாட்டில் அப்பாவி இந்திய மீனவர்களின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டு வருவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

இந்திய அரசினால் அண்மையில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட coast guard படகிலிருந்து தான் சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களைத் தாக்கியது என்று சிலர் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள். இது எப்படியிருக்கிறது என்றால் இந்தியா பொல்லைக் கொடுத்து தானே அடி வாங்கியது போல்.