இந்த உதை பந்தாட்ட நிகழ்வு வரும் ஆண்டாகிய 2008இலேயே நடக்க இருக்கிறது. வரும் ஆண்டாகிய 2008ல் சிறிலங்கா தன்னுடைய 60வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டே இந்த உதைபந்தாட்ட நிகழ்வு இருக்கிறது. இந்த உதைபந்தாட்ட நிகழ்வின் பின்னணியில் நெதர்லாந்தில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் இருக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அதுதான் உண்மை.
அண்மையில் பல நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களுக்கு புதிய பணியாளர்கள் சிறிலங்கா அரசினால் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் சிறிலங்காப் புலனாய்வுத் துறையில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை, ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்குவது.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒற்றுமையை உருவாக்குதல் என்று கோசத்தோடு இவர்கள் இந்த வேலையை செய்ய இருக்கிறார்கள். தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்த பங்குபெறக்கூடிய விழாக்களை நடத்துவது, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது போன்ற பல திட்டங்களோடு இவர்கள் சிறிலங்காவின் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உதைபந்தாட்ட நிகழ்வு. இந்த உதை பந்தாட்ட நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஓடியாடிச் செய்து வருபவர் உதயன் என்றும் குமார் என்றும் அழைக்கப்படும் உதயகுமார் சிவநாதன் என்பவர். இவர் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் சிறுவர்களுக்கு பல உதவிகளை செய்து வரும் ஒருவராக அறியப்பட்டவர். ஆனால் இவருக்கும் நெதர்லாந்தில் உள்ள சிறிலங்காத் தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது பலர் அறியாது ஒரு விடயம்.
உதயாகுமார் சிவநாதன் ஆரம்பத்தில் டென்மார்க்கில் வாழ்ந்தவர். தற்பொழுது நெதர்லாந்தில் வேற்றினப் பெண் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஐரோப்பாவின் பல மொழிகளை பேசக்கூடிய திறமை படைத்த இவர் தமது சதி வேலைகளுக்கு சரியான முறையில் பங்காற்றக்கூடியவராக சிறிலங்காவின் தூதரகத்தால் கருதப்படுகிறார்.
தமிழ் மக்களை ஏமாற்றி உதைபந்தாட்ட நிகழ்வில் கவர்ந்திழுப்பதற்காகவே "சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் சமாதானம்" என்ற தலைப்பு இடப்பட்டது. ஆனால் இந்தத் தலைப்பும் தமிழர்கள் நடத்துகின்ற ஊடகங்களில் வெளியிடுவதற்காக மட்டுமே. இந்த தலைப்பினால் ஏமாந்து போன சில தமிழ் ஊடகர்கள் தாங்களுடைய இணையத் தளங்களில் இந்த நிகழ்வு குறித்த விளம்பரத்தை வெளியிட்டும் விட்டார்கள்.
ஜனவரி மாதம் 6ஆம் திகதி நியுசிலாந்தில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது. நியுசிலாந்தில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி பங்குபற்றிய துடுப்பாட்ட விளையாட்டின் போது விமானம் ஒன்றை "தமிழர்களை கொல்வதை நிறுத்து" என்ற வாசகம் தாங்கிய கொடியுடன் பறக்கவிட்டு நியுசிலாந்து தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அந்த விமானம் மைதானத்தை சுற்றி வட்டமிட்டு பறந்தது. மைதானத்திற்கு வெளியிலும் பல தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் நின்று போராட்டம் நடத்தினார்கள்.
இவ்வாறான உணர்வுள்ள தமிழ் மக்கள் சிறிலங்காவின் உதைபந்தாட்ட அணியை மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திய தினத்தின் 60வது தினத்தை கொண்டாடுகின்ற ஒரு விழாவில் பங்கேற்கவே மாட்டார்கள்.
ஆனால் சிறிலங்கா தூதரகம் தமிழ் மக்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. இதற்கு உதயகுமார் சிவநாதன் போன்றவர்களும் துணை போகின்றார்கள். சிலர் உதயகுமார் சிவநாதனிடம் இந்த உதைபந்தாட்ட நிகழ்வை நடத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்லியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தான் சிறு வயதிலேயே வெளிநாடு வந்துவிட்டதாகவும், தனக்கு தமிழர் சிங்களவர் என்ற வேறுபாடு தெரியாது என்றும், தான் ஒரு சிறிலங்கன் என்று பதில் சொல்லி உள்ளார்.
ஆபிரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குழந்தை படுகின்ற துன்பத்தை உணர்ந்த இவருக்கு, தமிழ் தேசியம் பற்றி தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விடயம்தான். சிறிலங்கா தூதரகம் கொட்டுகின்ற பணம் இவருடைய கண்ணை மறைக்கிறது என்றே கருத வேண்டி உள்ளது.
இந்த உதைபந்தாட்ட விளையாட்டிற்கான ஏற்பாடுகளில் இருந்து, சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் பிரிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கு பலவித திட்டங்களை தீட்டி உள்ளது தெரியவருகிறது. இந்தத் திட்டத்திற்கு புதிய கோசங்களோடு புதிய முகங்களை களம் இறக்குகிறது. திட்டம் நிறைவேறுவதற்கு "தமிழீழம்" போன்ற சொற்களை பாவிப்பதற்கும் அது தயாராக இருக்கிறது.
எமது தமிழர்கள் இது போன்ற வார்த்தைகளில் ஏமாறாது விழிப்பாக இருந்து, சிறிலங்கா அரசின் இது போன்ற திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
நன்றி> neruppu.org
Friday, March 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment