Tuesday, March 06, 2007

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களில் ஐ.நா தலையிடலாம்.

அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புப் பிரிவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சிறிலங்காவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எனப்படும் ஹியுமன் றைட்ஸ் வோட்ச் அமைப்பு உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபைக்கான மனித உரிமைகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) நான்காவது அமர்வின் போது ஆராயப்படும் என அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டவியல் ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்ததாவது:

"சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை அடுத்தே இந்த குழுவை அமைக்கும் திட்டம் விவாதிக்கப்பட உள்ளது.

நாமும் ஏனைய அனைத்துலக மற்றும் பிராந்திய மனித உரிமைக் அமைப்புக்களும் அரசுகளுடன் கலந்து ஆலோசித்து ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரனையுடன் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு சிறிலங்காவில் அமைக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்து ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையில் ஆராய உள்ளோம்.

மிகவும் பயனுள்ளதான இந்த நடவடிக்கைகளை சிறிலங்கா அரசுடன் இணைந்து செயல் திறனுள்ளதாக மாற்றுவோம் என நம்புகின்றோம். சிறிலங்கா அரசின் பயங்கரவாத தடைச்சட்டம், கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு படையினருக்கு மிக அதிகளவான அதிகாரங்களை வழங்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் நீதிமன்றங்களின் மூலம் பாகுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

1994 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜேம்ஸ் றோஸ் அவதானித்து வருவது குறிப்பிடத்தக்கது.

"அரச தலைவர் ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும், நீண்டகால அடிப்படையில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு பரந்த அளவிலான அனைத்துலக மனித உரிமை கண்காணிப்புக் குழு தேவை" என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லுயிஸ் ஆபர் தெரிவித்துள்ளார்.

"சிறிலங்காவில் தொடர்ந்து மனித உரிமைகள் தொடர்பான மீறல்கள் அதிகரித்து செல்கின்றன. அங்கு மக்கள் கடத்தப்படுதல், சடலங்கள் மீட்கப்படுதல் போன்றவை தொடர்கின்றன, நேற்றும் அனுராதபுரத்தில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன" என மனித உரிமைகள் கண்காணிப்பக அமைப்பு தனது கவலையை தெரிவித்திருக்கின்றது.
நன்றி>புதினம்.

No comments: