Saturday, March 10, 2007

கடத்தல்களுக்கான பொறுப்பை சிறிலங்கா அரசு ஏற்க வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், படுகொலைகள், தடுத்து வைத்தல், மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பதிலை தரவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளதுடன் சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
"சிறிலங்காவில் மனித உரிமைகள் மிகவும் மோசமான நிலமையிலேயே தொடர்ந்து உள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்தவும், மனித உரிமைகள் மீறப்படுவதை தடுப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பதை அனைத்துலக சமூகம் அறிவது முக்கியம்.

வன்முறைகள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அங்கு நீதியற்ற கொலைகள், கடத்தல்கள் மிகவும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு இவை தொடர்பாக 1,000 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமலும் போயுள்ளனர்.

சிறிலங்காவில் இது தொடர்பாக 5,749 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடக்கு - கிழக்கில் மனிதாபிமான அமைப்புக்களின் நடவடிக்கைகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டியது அவசியமானது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை சபையின் கூட்டத்தில் மகிந்த சமரசிங்க உரையாற்ற உள்ள நிலையில் மன்னிப்புச் சபை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆபர் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்து வருகிறார் என்பதும் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள், அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஏனைய அமைப்புக்களும் ஆதரவுக் குரல்கள் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. உள்ளுர் விசாரணைகளில் தாம் நம்பிக்கைகளை இழந்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: